டில்லி 1981 - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9451
“ஏய் மஞ்சள் கிளி, உன் முகத்தைக் கொஞ்சம் பார்க்கட்டுமா?”
நானக்சந்த் அந்த இளம் பெண்ணின் முகத்திலிருந்து புடவையைப் பிடித்து இழுத்தான். சதைப் பிடிப்பான கன்னங் களையும் விரிந்த கண்களையும் கொண்ட மிகவும் அழகான ஒரு முகம் அங்கு தெரிந்தது. தலைமுடிக்கு நடுவில் இருந்த நடுவகிடில் அவள் குங்குமம் பூசியிருந்தாள். நெற்றியில் பொட்டு இருந்தது.
நானக்சந்த் கையில் குழந்தையுடன் நின்றிருந்த இளைஞன் பக்கம் திரும்பி அவனிடம் சொன்னான்:
“சகோதரா, நீ பெரிய அதிர்ஷ்டசாலிதான். ஹேமாமாலினியைப் போல ஒரு மனைவி உனக்கு கிடைச்சிருக்காளே!”
இளைஞனுக்கு பொறுமை குறைந்துகொண்டே வந்தது. அவன் உள்ளுக்குள் கொதித்தான். கையில் குழந்தை இருக்கிறது. உடன் மனைவி இருக்கிறாள். இல்லாவிட்டால்...
அவன் கோபத்தை உள்ளேயே அடக்கிக்கொண்டு வேண்டுகிற குரலில் சொன்னான்:
“நண்பர்களே, உங்களுக்கு என்ன வேணும்? இந்த மாதிரி நாகரிகம் இல்லாம நடக்குறது நல்லது இல்ல. நீங்க படிச்ச இளைஞர்கள்தானே? ப்ளீஸ்... நாங்க போகணும்.”
அவன் குழந்தையை மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டு, தன் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களைக் கடந்து போக முற்பட்டான்.
“எங்களைக் கடந்து போயிற முடியுமா?”
ரகுவீர் இளைஞனின் தோளில் தன் கையை வைத்தான்.
“எங்க அனுமதி இல்லாம நீ இங்கே இருந்து அசைய முடியாது. புரியுதா?”
அந்த இளைஞன் அந்தக் கணத்திலேயே தன் கையை வீசி ரகுவீரின் முகத்தில் ஒரு குத்துவிட்டான். அப்போது அவனுடைய கையிலிருந்த குழந்தை உரத்த குரலில் அழத் தொடங்கியது.
“கையால குத்துற அளவுக்கு வந்துட்டியா?”
நானக்சந்த் தன் பேண்ட்டிற்குள்ளிருந்து ஒரு கத்தியை வெளியே எடுத்தான். அந்த இளம் பெண்ணின் கழுத்துப்பகுதி ஒரு புறாவின் கழுத்தைப்போல துடித்துக்கொண்டிருந்தது. அவர்களுடன் தகராறு பண்ண வேண்டாம் என்று அவள் தன் கண்களால் கணவனிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அந்த இளைஞன் குழந்தையைத் தன் மனைவியின் கைகளில் கொடுத்துவிட்டு எதற்கும் தயாராக நின்றான்.
“என்னை குத்தவா செஞ்சே?”
ரகுவீர் குத்து விழுந்த தன் கன்னத்தைத் தடவியவாறு அவனுக்கு நேராகத் திரும்பி அவனுடைய சட்டையை இறுகப் பிடித்தான். அழுது கொண்டிருந்த குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அந்த இளம்பெண் என்ன செய்வதென்று தெரியாமல் நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். பயத்தால் தலை முதல் கால்வரை அவளுடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
“ஒன் மோர் சிகரெட்...”
பாண்டே மைதானத்திலிருந்து தன் கண்களை எடுக்காமல் கிஷோரை நோக்கி கையை நீட்டினான். அவன் இன்னொரு சிகரெட்டையும் பற்ற வைத்துப் புகைவிட்டான். இதற்கிடையில் அவன் சொன்னான்:
“உண்மையிலேயே ரொம்பவும் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு.”
இளைஞனும் நானக்சந்தும் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு நின்றிருக்க, ரகுவீர் சற்று தூரம் வரை நடந்து சென்று ஒரு பெரிய கருங்கல்லை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தான். அந்தக் கல்லை அந்த இளைஞனின் தலைக்கு மேலே தூக்கிப்பிடித்தவாறு அவன் அங்கே நின்றான். அதைப் பார்த்த மஞ்சள்கிளி தளர்ந்து போய்விட்டாள்.
மைதானத்தின் எதிர்பக்கத்தில் ஒரு வெள்ளி உருவம் தெரிந்தது. மிடுக்கு நிறைந்த, நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதன் அவன். அவன் கையில் ஒரு ப்ரீஃப்கேஸ் இருந்தது. அவன் மைதானத்தின் மையத்தைப் பார்த்து சந்தேகத்துடன் நின்றான். பிறகு ப்ரீஃப்கேஸை இறுகப் பற்றிக் கொண்டு தன் நடையை அவன் தொடர்ந்தான்.
“யாருடா அந்த ஆளு?”
பாண்டே சொன்னான்: “வர்ற அந்தப் புது ஆளு சுவராசியத்தைக் கெடுக்குறதுக்குன்னே வர்றான்.” அவன் எல்லா விஷயங்களையும் குழப்பப் போகிறான் என்று நினைத்தான் பாண்டே.
இளைஞனும் நானக்சந்தும் ஒருவரையொருவர் கன்னா பின்னாவென்று பேசியவாறு ஒருவரை மற்றவர் தள்ளிக்கொண்டும், அடித்துக் கொண்டு இருந்தனர். ரகுவீரின் கையில் இப்போதும் அந்தக் கருங்கல் இருந்தது. அவ்வப்போது அவன் அதை அந்த இளைஞனின் தலைக்கு மேலே உயர்த்திக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் அந்த இளம் பெண்ணுக்கு உயிரே போவதைப் போலிருக்கும்.
மைதானத்தின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்த மனிதனைப் பார்த்தபோது அவளுக்கு மூச்சு சரியாக வந்ததைப் போலிருந்தது.
“கொஞ்சம் ஓடி வாங்க. இவங்க என் மகளோட அப்பாவைக் கொல்றாங்க.”
அவள் உரத்த குரலில் அழைத்துச் சொன்னாள். அந்த நாகரீக மனிதனின் கால்களுக்கு வேகம் அதிகரித்தது. அவன் தன்னுடைய பருமனான உடலை ஆட்டியவாறு வேகமாக அந்த இளம் பெண்ணை நோக்கி வந்தான். அவன் கிட்டத்தட்ட நூறு அடிகள் நெருங்கியிருப்பான். அப்போது ரகுவீர் அவனுக்கு நேராகத் திரும்பினான்.
“இங்கேயிருந்து போறியா இல்லியா?”
ரகுவீர் தன் கையிலிருந்த கருங்கல்லை அவனுக்கு நேராகத் தூக்கிக் காட்டினான். அவ்வளவுதான்- அந்த நாகரீக மனிதனின் கால்கள் செயல்படாமல் அப்படியே நின்றுவிட்டன. நானக்சந்தின் கையிலிருந்த நீளமான கத்தியும் அவனுடைய கண்களில் பட்டது.
“பாகோ, ஓடு...”
சிறிது தயங்கிய அவன் அந்த இளம்பெண்ணின் ஓலத்தைக் காதில் போட்டுக் கொள்ளாமல் திரும்பி நடந்தான்.
“ஓடு...”
அந்தப் படித்த மனிதன் தன்னுடைய பருமனான உடம்பு குலுங்கும் வண்ணம் கையில் ப்ரீஃப்கேஸுடன் ஓடிக் கொண்டிருந்தான்.
“சபாஷ்!”
ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றிருந்த பாண்டேயும் கிஷோரும் தலையிலடித்துக் கொண்டு சிரித்தார்கள்.
அப்போது ரகுவீர் தன் கையிலிருந்த கருங்கல்லைத் தூக்கி அந்த இளைஞனின்முன் தலையில் ஒரு போடு போட்டான். அடுத்த நிமிடம் அவன் நின்றிருந்த இடத்திலேயே நிலை குலைந்து தள்ளாடினான். நானக்சந்த் தன் காலைத் தூக்கி அந்த இளைஞனின் வயிற்றில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான். அவ்வளவுதான்- அவன் ஒரு வில்லைப்போல முன்னோக்கி வளைந்து கீழே விழுந்தான்.
“இந்த நானக்சந்தும் ரகுவீரும் உண்மையிலேயே பெரிய ஆளுங்கதான். ரியலி க்ரேட்...” பாண்டே சொன்னான்.
“வெரி வெரி க்ரேட்.”
தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கிஷோர் லாலும் சொன்னான்.
அவர்கள் இருவரின் கண்களும் மைதானத்தையே இன்னும் பார்த்துக் கொண்டிருந்தன.
“எழுந்திரு, சகோதரி.”
தன் கணவனுக்கு அருகில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த இளம் பெண்ணின் கையை நானக்சந்த் இறுகப் பற்றினான்.
“எங்ககூட வா அந்த கல்லறைக்கு.” அவன் இடிந்து விழுந்து கிடந்த கல்லறைக்கு நேராக விரலைக் காட்டினான்.
“என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க...”
அவள் கண்ணீர் வழிந்த கண்களுடன் அவர்களைப் பார்த்து கைகளைக் குவித்து கெஞ்சினான்.