டில்லி 1981 - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9451
நானக்சந்த் அவளைப் பலமாகப் பிடித்து தூக்கி முன்னோக்கித் தள்ளினான். கைக்குழந்தை தரையில் கிடந்து உரத்த குரலில் அழுதது. ரகுவீர் உடனே தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு பெரிய துவாலையை எடுத்து குழந்தையின் வாய்க்குள் திணித்தான். அடுத்த நிமிடம் குழந்தையின் கண்கள் வெளியே பிதுங்கியது. அதன் அழுகைக் குரல் நிரந்தரமாக நின்றது.
அவள் அவர்களிடமிருந்து விடுபட்டு மைதானத்தின் வழியாக ஓட ஆரம்பித்தாள்.
“பெஹன் சூத்... அவளைப் பிடி...”
நானக்சந்த் கோபித்தான். ரகுவீர் பின்னால் ஓடிச்சென்று அவளைப் பிடித்தான். இருவரும் சேர்ந்து அவளை கல்லறை இருக்குமிடத்திற்கு இழுத்துக்கொண்டு போனார்கள். கல்லறையில் இடிந்து கிடந்த சுவர்களுக்கு மேலே திகைப்படைந்து போய் புறாக்கள் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தன.
“அதே பார், அவங்க அவளைக் கற்பழிக்க கொண்டு போறாங்க.” கிஷோர் லால் சொன்னான். ஒரு ஈஸ்ட்மென் அகன்ற திரை திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல அவர்கள் மைதானத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ரகுவீரும் நானக்சந்தும் சேர்ந்து அவளைத் தூக்கி கல்லறைக்கு உள்ளே கொண்டு போனார்கள். மஞ்சள் கிளியின் வியர்வையில் நனைந்துபோன மஞ்சள் ப்ளவ்ஸ்ஸை அவர்கள் இழுத்துக் கிழித்தார்கள். அவர்கள் அவளை சிதிலமடைந்து போயிருந்த சுவரோடு சேர்த்து நிறுத்தினார்கள். அவளால் இப்போது அவர்களை எதிர்த்துப் போராட முடியவில்லை. அவளுடைய தலை ஒரு பக்கம் சாய்ந்தது.
“யாராக இருக்கும் முதல்ல...?” கிஷோர் லால் கேட்டான்.
“நானக்சந்த்தான். வேற யாரு?” பாண்டே சொன்னான்.
ரகுவீர் அவளைச் சுவருடன் சேர்த்துப் பிடித்து நிறுத்தினான்.
நானக்சந்த் தன்னுடைய பேன்ட் பொத்தான்களை அவிழ்த்தான்.
அந்த நிமிடம் ராஜீந்தர் பாண்டேயின் ஒற்றை அறை பெரிய நகரமாக மாறுகிறது. அங்கு வானத்தை முட்டுகிற கட்டடங்கள் உண்டாகிக் கொண்டிருக்கின்றன. ராஜீந்தர் பாண்டேயும் கிஷோர் லாலும் ஐம்பத்தைந்து லட்சம் மதிக்கக்கூடிய பெரிய மனிதர்களாக மாறுகிறார்கள். பெரிய பேச்சரங்கங்களில் நின்று கொண்டு, கைத்தட்டல்களுக்கும் ஆரவாரங்களுக்கும் மத்தியில், கதரும் காந்தித் தொப்பியும் அணிந்த தலைவர்கள் வாய் மூடாமல் இந்தியில் பேசுகிறார்கள். சிகரெட் புகை பரவியிருக்கும் காஃபி ஹவுஸ்களில் மேஜைகளைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு, தோளில் பையைத் தொங்கப் போட்டு தாடியும் முடியும் வளர்ந்திருக்கும் அறிவு ஜீவிகள் தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அப்போது கல்லறையின் இருட்டுக்குள்ளிருந்து ஒரு சிறிய புறாக்குஞ்சு பறந்து வந்து தன்னுடைய இளம் அலகால் நானக்சந்தின் முன் தலையைக் கொத்துகிறது.