யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5327
யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது
பி.கேசவதேவ்
தமிழில் : சுரா
மறைத்தால் மறையாத அளவிற்கு அந்த காதல் எல்லோருக்கும் தெரிந்ததாகி விட்டது. மறைக்க வேண்டிய அவசியமோ, மறைக்க வேண்டும் என்ற ஆசையோ அவர்களுக்கு இல்லை. அந்த காதல் கல்லூரியின் கட்டுப்பாட்டை மீறவில்லை. சமூகச் சட்டங்களை அது தாண்டவுமில்லை. மரியாதையின் எல்லைகளுக்குள், மதிப்பை உண்டாக்கிக் கொண்டு, அந்த காதல் தலையை உயர்த்திக் கொண்டு நின்றது.
மதுவும் ரவியும் உயிர் நண்பர்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாதவர்கள். மது காதலனாக ஆனான். ரவி கவிஞனாக ஆனான்.
அவர்கள் தினமும் கல்லூரிக்கு ஒன்றாகவே சேர்ந்து வருவார்கள். எப்போதும் அவர்கள்தான் முதலில் வருவார்கள். அவள் வருவதை எதிர்பார்த்து காத்துக் கொண்டு, அவர்கள் வாசலில் இருக்கும் அந்த கல் தூணுக்கு அருகில் நின்றிருப்பார்கள்.
அவள் தனியாகத்தான் கல்லூரிக்கு வருவாள். உரிய நேரத்திற்குச் சற்று முன்புதான் அவள் கேட்டிற்குள் நுழைவாள்.
அவளுடைய வருகையைப் பார்ப்பதற்காக வேறு மாணவர்களும் வேறு எதையோ பார்ப்பதைப் போல, கூட்டம் கூடி நின்றிருப்பார்கள். பார்ப்பவர்களின் பார்வை அம்புகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற வேட்கையுடன், விலகியும் பதுங்கியும் அவள் கேட்டைத் தாண்டி விட்டால்... பிறகு... அங்கு ஒரு பேரமைதி உண்டாகும். ஒரு தாங்க முடியாத சலனமற்ற சூழ்நிலை நிலவும்.
இடது கையால் புத்தகங்களை மார்போடு சேர்த்து அழுத்திக் கொண்டும், காற்றில் பறந்து முகத்தில் கிச்சுக்கிச்சு மூட்டும் தலை முடிகளை வலது கையால் விலக்கி விட்டுக் கொண்டும் அவள் வாசலுக்கு வருவாள். பாதி மூடியிருக்கும், கனவில் மூழ்கியிருப்பதைப் போன்ற அந்த கண்கள் மலரும். சந்தோஷமான கனவைக் காண்பதைப் போல, அவள் அந்த தூணின் அருகே பார்ப்பாள்.
நான்கு கண்கள்- நான்கு கண்கள் அங்கு காத்து நின்றிருக்கும்- அவளுடைய பார்வையை வரவேற்பதற்காக. காதலனின் கண்கள் அகல திறந்து கொண்டு பார்க்கும். கவிஞனோ... சற்று பார்த்து விட்டு, பார்வைகளை பின்னோக்கி இழுத்துக் கொள்வான். காதலனும் கவிஞனும்!
ரவி ஒரு கவிதை எழுதினான்- 'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது' என்று. யமுனா! - அதுதான் அவளுடைய பெயர். அந்த கவிதையை கல்லூரியின் இலக்கியக் கூட்டத்தில் வாசித்தான்.
மலையின் இடைவெளிகளின் வழியாக, காட்டு மிருகங்களுக்கு பயந்ததைப் போல, வேகமாக பாய்ந்தும் வளைந்து நெளிந்தும் உயர்ந்தும் பதுங்கியும் சோர்வடைந்தும் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டும் நதி ஓடிக் கொண்டிருப்பதாக கவிதை ஆரம்பித்தது. படிப்படியாக மலைச் சரிவுகளின் வழியாக பாடலை முணுமுணுத்துக் கொண்டே, எந்தவித பயமும் இல்லாமல், உற்சாகத்துடன், அந்த நதி ஓடிக் கொண்டிருந்தது.
ஓடி கொண்டிருக்கும், கிச்சுக் கிச்சு மூட்டும், குளிர்ந்த, கண்ணாடியைப் போன்ற, அந்தச் சிறிய நதியை எல்லோரும் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார்கள். ஆனால், அதில் இறங்குவதற்கு தைரியம் கிடையாது. அதன் அழகு எல்லோரையும் ஈர்ப்பதைப் போலவே, அதன் புனிதத் தன்மை எல்லோருக்குள்ளும் தார்மீகமான பயத்தை உண்டாக்கியது.
'எங்கே?... எங்கே? அந்த வசந்த கால யமுனை ஓடிக் கொண்டிருக்கிறது?'- கவிஞன் கேட்கிறான். எல்லோருக்கும் தெரியும்- அந்த நதி எங்கு நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது என்று. ஆனால், கவிஞன் பாடுகிறான்- 'எங்கு வேண்டுமானாலும், எந்த இலக்கை நோக்கியும் ஓடிக் கொள்ளட்டும். அதன் ஒரே சிந்தனை உள்ள, அழகான கொள்கை உள்ள, ஓட்டத்தை நான் கெடுக்காமல் இருக்க வேண்டும். அந்த ஓட்டத்தின் பாடலும் அதன் தாளமும் அதன் அழகும் மட்டுமே நமக்கு உள்ளதாக இருக்கட்டும்!'
கவிதை அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்களின் இதயங்களை வசீகரித்து விட்டது. பாராட்டுக்களின் உச்ச நிலையில் நிலவிக் கொண்டிருந்த பேரமைதியில் கவிஞன் மட்டும் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான்.
யமுனா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். மது புன்னகைத்தான்.
சம்பவத்திலிருந்து உருவான கலை, சம்பவத்தை மறைத்து விட்டது. யமுனாவிற்கும் மதுவிற்குமிடையே உள்ள காதல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உண்மை என்ற நிலையில், அது பொருட்படுத்தப் படாததாகவோ மறக்கப்படவோ செய்தது. அதற்குப் பதிலாக ரவியின் கவிதை முக்கிய பேச்சுக்கு உரிய விஷயமாக ஆனது. ரவி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தான். அவன் மாணவர்களின் வழிபாட்டுக்கு உரியவனாக ஆனான்.
யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது- எல்லா மாணவர்களின் நோட்டு புத்தகங்களிலும் இங்குமங்குமாக அவ்வாறு எழுதி வைக்கப்பட்டிருக்கும். வகுப்பறைகளின் டெஸ்க்குகளிலும் சுவர்களின் மூலைகளிலும் மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலுமெல்லாம் எழுதி வைக்கப்பட்டிருக்கும்- 'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது' என்று.
ஆண்- பெண் வேறுபாடு பார்க்காமல் எல்லா மாணவர் - மாணவிகளும் அந்த கவிதையை மனப் பாடம் செய்தார்கள். கல்லூரியின் எல்லைக்குள் இருக்கக் கூடிய மரத்தடியில் நின்று கொண்டு அந்த கவிதை பாடப்படுவதைக் கேட்கலாம். வகுப்பறையில் கூக்குரல்களுக்கும் அட்டகாசங்களுக்கும் மத்தியில் அந்த பாடல் உரத்து கேட்கும். பல வேளைகளில் குளியலறைகளுக்குள்ளிருந்தும் சில நேரங்களில் உணவு விடுதிகளிலிருந்தும் அந்த கவிதை முழங்கும்.
புத்தகங்களை மார்போடு சேர்த்து அழுத்தி வைத்துக் கொண்டு, முகத்தில் கிச்சுக்கிச்சு மூட்டும் தலை முடிகளை விலக்கி விட்டவாறு. யமுனா தினமும் கல்லூரிக்கு வருவாள். சந்தோஷம் நிறைந்த கனவைக் காண்பதைப் போல அவள் அந்த கல் தூணுக்கு அருகே பார்ப்பாள். மது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருப்பான். ரவி சற்று பார்த்து விட்டு, பார்வைகளை பின்னோக்கி இழுத்துக் கொள்வான்.
யமுனாவும் புன்னகைப்பாள். அந்த புன்னகையில் ஏதோ ஒரு ஆழம் இருந்தது- வெண் மேகத்தால் மறைக்கப்பட்ட நிலவின் பிரகாசத்தைப் போல.
ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஓட்டத்தை யாரும் கெடுக்கவில்லை. அந்த பாடலின் தாளத்தில் யாரும் குறைபாடு உண்டாக்கவில்லை. அந்த சுருதியில் யாரும் பேதம் உண்டாக்கவில்லை.
* * * * * * * *