பருவ மழைக் காலம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5134
உங்களுக்கு எழுத வேண்டுமென்று முதலிலேயே மனதிற்குள் நினைத்தேன். ஆனால், அதற்கான தைரியம் நீண்ட காலமாக வரவில்லை. கோபப்படுவீர்களோ, பதைபதைப்பு அடைவீர்களோ என்றெல்லாம் நினைத்து... கேட்ட தகவல்களெல்லாம் அப்படித்தானே இருந்தன! முரட்டுத்தனமான மனிதர், யாரிடமும் இயல்பாக நடந்து கொள்வதில்லை, யாரையும் நெருங்க விடுவதில்லை என்றெல்லாம்... எனினும், இறுதியில் நான் எழுதினேன். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், எழுதி விட்டேன். ஆனால், எதிர்பார்த்ததைப் போலவே பதில் வரவில்லை. எனினும், விரக்தி அடையாமல் மீண்டும் எழுதினேன். மீண்டும் மீண்டும் எழுதினேன். என்னுடைய மனதிற்குள் இருக்கும் சிறிய விஷயங்கள், வேறு எந்தவொரு ஆளிடமும் கூற முடியாத என்னுடைய சிறிய ரகசியங்கள், என்னுடைய கனவுகள், என்னுடைய ஆசைகள், என்னுடைய பிரச்சினைகள்... என்னுடைய எந்தச் சமயத்திலும் தீர்ந்திராத சந்தேகங்கள்...
இறுதியில் நீங்கள் எனக்கு ஒரு பதில் கடிதம் எழுதியபோது, ஏதோ ஒரு சிறிய பத்திரிகையில் வந்திருந்த என்னுடைய சிறுகதையைப் பாராட்டி எழுதியபோது, எனக்கு உண்டான சந்தோஷம் இருக்கிறதே! பிறகு நீங்கள் தொடர்ந்து என்னுடைய கடிதங்களுக்கு பதில் எழுத ஆரம்பித்தபோது... இல்லை... என் மனதின் நிலையை யாரிடமும் கூறி தெரிவிப்பதற்கு என்னால் முடியவில்லை.'
சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு இருந்து விட்டு இளம் பெண் சொன்னாள்: 'நான் ஒரு விஷயம் சொன்னால், கோபப்படாதீர்கள். எப்போதாவது ஏதாவது எழுதுவது... கதையா, கவிதையா, கட்டுரை மட்டுமா என்று எதைப் பற்றியும் எனக்கு நிச்சயமில்லை. பைத்தியம் பிடித்ததைப் போன்ற ஒரு தூண்டுதலுக்குக் கீழ்ப் படிந்து என்னவோ எழுதி விடுகிறேன். என்னிடம் உண்மையைக் கூறுங்கள்- நான் இப்படி எழுதுவதால் ஏதாவது ஒரு பயன் இருக்கிறதா? இல்லாவிட்டால்... இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால்... என்னுடைய கதைகள் தரமானவையா? அவை உண்மையிலேயே அந்த பெயருக்கு அருகதை உள்ளவைதானா? இன்னும் சொல்லப் போனால்- இனிமேலும் நான் தொடர்ந்து எழுத வேண்டுமா?'
இளம் பெண்ணின் கள்ளங்கபடமற்ற முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு அவர் கேட்டார்:
'இப்போது இப்படிப்பட்ட ஒரு சந்தேகம் வருவதற்குக் காரணம் என்ன?'
இளம்பெண் தயங்கிக் கொண்டே சொன்னாள்:
'சிலர் கூறுகிறார்கள்- என் கதையை உங்களுடைய கதைகளின் நகல்கள் என்று. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால்- நான் எழுதுபவற்றில் உங்களுடைய 'டச்' இருப்பதைப் பார்க்க முடியும் என்று. அது எப்படியோ... எனக்கு எதுவும் தெரியாது. நான் எந்தச் சமயத்திலும் பின் பற்றி எழுதியதில்லை.'
அவர் அப்போது உறுதியான குரலில் சொன்னார்:
'எனக்கும் எந்தச் சமயத்திலும் அப்படி தோன்றியதில்லை. தோன்றியிருந்தால், இதற்கு முன்பே நான் கூறியிருப்பேனே! பிறகு... ஆட்கள்.... ஆட்கள் என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள். அதை எந்தச் சமயத்திலும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை நீ எழுது. உன்னுடைய மனம், உன் நம்பிக்கை... இவைதான் முக்கியம். அதைத் தவிர...'
இளம் பெண் மீண்டும் பதைபதைப்புடன் கேட்டாள்:
'அப்படியென்றால் உங்களுடைய பாதிப்பு...'
அவர் வேகமாக கூறினார்:
'இல்லை... இல்லை... ஒரு பாதிப்பும் இல்லை. பிறகு... யாருடைய பாதிப்பையாவது பார்த்தே ஆவது என்றால்... இப்படி கூறலாம்- உன்னுடைய எழுத்து யாரையாவது ஞாபகப்படுத்துகிறது என்றால்... அது 'ட்ரூமான்கபோட்டி'யைத்தான். சில நேரங்களில் எனக்கு அப்படி தோன்றியிருக்கிறது. மழையையும் வெயிலையும் பற்றி, பருவ காலங்களின் மாறிக் கொண்டிருக்கும் முகங்களைப் பற்றி... உன் கவிதையில் நிறைந்திருக்கும் வர்ணனைகள், உன்னுடைய சொற்களின் சுருதி- இவையெல்லாம் சில நேரங்களிலாவது 'கபோட்டி'யைப் பற்றி என்னை நினைக்கச் செய்திருக்கின்றன. இவை தவிர, வேறு...'
இளம்பெண் பதைபதைப்புடன் கேட்டாள்:
'ட்ரூமான் கபோட்டியா? யார் அது? நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே?'
அவர் தனக்குள் ஆழமாக இறங்கிக் கொண்டதைப் போல சொன்னார்:
'நானும் அதை நினைத்தேன். கபோட்டி ஒரு அமெரிக்க எழுத்தாளர். நிறைய திறமைகள் கொண்ட... ஆனால், மிகவும் வயதாவதற்கு முன்பே, மரணத்தைத் தழுவி விட்டார். அப்படியே இல்லையென்றாலும், வேண்டாம்... கபோட்டியைப் பற்றி நாம் பிறகு பேசலாம். இப்போது நேரமாகி விட்டது. நாம் புறப்படுவோம்.'
ரெஸ்ட்டாரெண்ட்டிலிருந்து வெளியே வந்து, பேருந்து நிலையத்திற்கு நடக்கும்போது மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. அவருடைய கையில் குடை இல்லை. ஆனால், இளம் பெண்ணிடம் இருந்தது. அவள் ஹேண்ட் பேக்கைத் திறந்து, தன்னுடைய சிறிய குடையை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.
'இதோ...'
அந்த குடையைப் பார்த்ததும், அவர் சிரித்தார்.
'இது என்ன குடை! உனக்கே போதாதே! இந்த நிலைமையில நம் இரண்டு பேருக்கு...'
அவள் சொன்னாள்:
'பரவாயில்லை... எனக்கு மழையில நனைஞ்சு பழக்கமாயிடுச்சு...'
அதற்குப் பிறகு அவர் எதுவும் கூறவில்லை. அவளை தன்னுடன் சேர்த்து பிடித்துக் கொண்டு, முடிந்த வரைக்கும் அவள் மீது மழை விழாத மாதிரி பார்த்துக் கொண்டு, அவர் மெதுவாக நடந்தார்...
பிறகு அவர் அவளிடம் 'மழையில் நனைவது என்றால் விருப்பம். அப்படித்தானே?' என்று கேட்டாலும், அவள் அதை கேட்கவில்லை. அவள் அப்போது தன்னுடைய இறந்து விட்ட தந்தையை நினைத்துக் கொண்டிருந்தாள். கடுமையான மழை பெய்து கொண்டிருக்கும்போது, தந்தையின் பெரிய குடைக்குக் கீழே, தந்தையுடன் ஒட்டி நின்று கொண்டு... அப்போது அவள் மிகவும் சிறிய ஒரு சிறுமியாக இருந்தாள்... வாசலுக்கு நடந்து சென்றது, தந்தை அவளை முதல் தடவையாக பள்ளிக் கூடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றது, நகரத்திற்கு திரைப்படம் பார்ப்பதற்காக அழைத்துக் கொண்டு சென்றது, ஐஸ் க்ரீம் வாங்கித் தந்தது... அவளுடைய கேள்விகளுக்கெல்லாம் எப்போதும் பதில் கூறியது...
மழை பலமாக பெய்ய ஆரம்பித்தது. அவர் சொன்னார்:
'நாம இங்கே எங்காவது ஒதுங்கி நிற்போம். இல்லாவிட்டால், ஒரு ஆட்டோ பிடித்து... நீ நல்லா நனைஞ்சிட்டே....'
இளம் பெண் சொன்னாள்:
'வேண்டாம்... நாம நடப்போம்.'
அவள் அப்போது ஏதோ ஒரு உரிமை கொண்டிருப்பதைப் போல அவருடைய கையை பலமாக பிடித்திருந்தாள்.
அதற்குப் பிறகு அவர் எதுவும் கூறவில்லை...
அவரும் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
முன்பு, மிகவும் முன்பு, நீண்ட கால மவுனத்திற்குப் பிறகு ஒரு கதை எழுதியது... கதையின் இறுதியில் குறிப்பாக மட்டும் எழுதிய, காலையில் குளித்து முடித்து கோவிலுக்குப் போய் விட்டு வரும் 'அதிகாலை மல'ரைப் போன்ற ஒரு இளம் பெண். அவள்...
மழையின் பலம் அதிகரித்துக் கொண்டிருந்தது.