பருவ மழைக் காலம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5134
பருவ மழைக் காலம்
டி.பத்மநாபன்
தமிழில் : சுரா
பருவமழைக் காலத்தின் ஆரம்பத்தில் ஒரு நாள். இளம் பெண் கல்லூரிக்குச் செல்லாமல் புகை வண்டி நிலையத்திற்குச் சென்றாள். தூரத்திலிருந்த வீட்டிலிருந்து அவள் காலையிலேயே புறப்பட்டாள். எனினும், புகை வண்டி நிலையத்தில் வந்து சேர்ந்தபோது, வண்டி வந்து விட்டிருந்தது. அதனால் அவள் ஓடினாள். தனக்கு அறிமுகமானவர்கள் யாராவது பார்ப்பார்களா, தனக்கு என்ன ஆனது என்று ஆட்கள் ஆச்சரியப்படுவார்களா என்பது பற்றியெல்லாம் அவள் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை.
அவளுடைய மனதில் அப்போது அவர் மட்டுமே இருந்தார். அவளுடைய தாத்தாவாக ஆவதற்குரிய வயதைக் கொண்ட... என்ன கூறுவது? குருவா... நண்பரா.... இல்லாவிட்டால்- நன்கு தெரிந்த ஒரு மனிதரா... ஆனால், இல்லை. அவளுக்கு அதைப் பற்றியெல்லாம் எந்தவொரு தெளிவான வடிவமும் இல்லை.
மனதில் அனைத்தும் ஒன்றோடொன்று கலந்து கிடந்தன.
அவர் அவளுக்கு எழுதினார்:
'நான்... வண்டியில் வருகிறேன். வேறு பிரச்சினைகள் எதுவுமில்லையென்றால், புகை வண்டி நிலையத்திற்கு வா. எப்போதும் எழுதுவாய் அல்லவா...? பார்ப்பதற்கு மிகுந்த விருப்பம் இருக்கிறது... அந்த வழியே போகும்போது அறிவிக்க வேண்டும் என்றெல்லாம். இதோ... இப்போது வருகிறேன். ஆனால்... வருவது ஒரு நோயாளியாக. அப்படி இல்லாமல் எங்காவது சென்று சொற்பொழிவு செய்து பிரச்சினை உண்டாக்குவதற்காக அல்ல. சிறிது நேரம் உன்னுடன் சேர்ந்து செலவழித்து விட்டு................க்குச் செல்வேன். அங்குள்ள புகழ் பெற்ற மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் கிடந்து சிகிச்சை. அதற்குப் பிறகு...'
புகைவண்டி நிலையத்தை அடைந்தபோது, ஆட்கள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். பெரிய கூட்டமெதுவும் இல்லை. முதலில் அவள் கேட்டிற்கு அருகில் ஆர்வத்துடன் நின்று கொண்டு ப்ளாட்ஃபாரத்தின் இரண்டு பக்கங்களையும் மாறி மாறி பார்த்தாள்.
ஆனால், அவ்வாறு நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு உண்டாகவில்லை.
இளம்பெண் முதல் தடவையாக அவரைப் பார்க்கிறாள். எனினும், அந்த மனிதரை அடையாளம் கண்டு பிடிப்பதற்கு அவளுக்கு எந்தவொரு கஷ்டமும் இல்லை. ப்ளாட்ஃபாரத்தின் இறுதியிலிருந்த ஒரு கம்பார்ட்மெண்ட்டிலிருந்து அவர் இறங்கி வந்தார். பல வருடங்களாக அவள் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் பார்த்த அதே உருவம்தான். தலையைச் சற்று பின்னோக்கி சாய்த்து வைத்துக் கொண்டு, முதுகு சிறிது கூட வளையாமல், நன்கு நிமிர்ந்து...
சிறிது நேரம் எல்லாவற்றையும் மறந்து, அந்த மனிதரைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்து விட்டு, அவள் ஓடிச் சென்று அவருடைய கையிலிருந்து அவரின் சிறிய பெட்டியை வாங்கினாள். தொடர்ந்து அவளுக்கு என்னவோபோல இருந்தது. ஒரு வார்த்தை கூட கூறுவதற்கு முன்னால், இப்படி பலமாக...
அவளுடைய முகம் அப்போது சிவந்து விட்டது.
அவர் அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே புன்னகையுடன் சொன்னார்:
'என்னை அடையாளம் கண்டு பிடிச்சாச்சு... இல்லையா?'
சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்காமலே இளம்பெண் ஆர்வத்துடன் சொன்னாள்:
'நான் கையைப் பிடித்துக் கொள்ளட்டுமா?'
அப்போது அவர் அவளுடைய கண்களின் ஆழங்களுக்குள் அன்புடன் பார்த்தார். அவர் மனதிற்குள் நினைத்தார்:
'இந்த இளம் பெண்ணா ஆன்மாவைத் தொடக் கூடிய கடிதங்களைத் தொடர்ந்து எழுதிக் கொண்டும், மழையையும் வெயிலையும் மிகவும் அழகாக வர்ணிக்கும் கவிதை போன்ற கதைகளை எழுதியும் என்னை அடிமைப்படுத்தியவள்!'
இந்த இளம் பெண்!
அவர் தொடர்ந்து சொன்னார்:
'நான் அந்த அளவிற்கு பெரிய ஒரு நோயாளி அல்ல... தெரியுதா?'
அவருடைய குரலில் ஒரு குறும்புத்தனமான சிரிப்பு கலந்திருந்தது.
இளம் பெண் அவருடைய களைத்துப் போன முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாளே தவிர, எதுவும் கூறவில்லை.
ப்ளாட்ஃபாரத்திற்கு வெளியே வந்தவுடன், அவர் தயங்கி நின்றார்.
'நாம் எங்கே போகிறோம்? என் பேருந்திற்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் இருக்கு! அதுவரை...'
இளம்பெண் எதுவும் கூறாமல் நின்றிருக்க, அவரே கூறினார்:
'ஏதாவது ஒரு நல்ல ரெஸ்ட்டாரெண்ட்டிற்குச் சென்று காபி பருகி, சிறிது பேசிக் கொண்டிருந்து விட்டு... அதற்குள் எனக்கான நேரம் வந்திடும். வா... எனக்கு இந்த இடங்கள் நன்கு தெரிந்தவைதாம்.'
சாலையில் காலை நேரத்திற்கே உரிய பரபரப்பு ஆரம்பிக்க தொடங்கியிருந்தது.
ஓரத்தில் அவர்கள் மெதுவாக நடந்தார்கள்.
அவர்கள் அதிகமாக ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.
ரெஸ்ட்டாரெண்ட்டில் ஆட்கள் இல்லாமலிருந்த ஒரு மூலையில் அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களுக்கு முன்னால் கண்ணாடியால் ஆன பெரிய கதவுகள் இருந்தன. கண்ணாடி கதவின் வழியாக பார்த்தால், சாலையும் மைதானமும் மைதானத்தின் இறுதியில் இருந்த கோவிலும் தெரிந்தன.
மைதானத்திற்கு மேலே வானம் கறுத்து, கனத்துப் போய் காணப்பட்டது.
காற்றில் மரங்களின் இலைகள் அசைந்து கொண்டிருப்பதைப் பார்த்து, அவர் மெதுவான குரலில் சொன்னார்:
'மழை பெய்யும்னு தோணுது.'
இளம்பெண் எதுவும் கூறவில்லை.
அப்போது சிறிது ஆச்சரியத்துடன் அவர் சொன்னார்:
'நீ என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு கூறுவதற்கு எதுவும் இல்லையா? அப்படியென்றால் நாம் ஆளுக்கு ஒரு காபியைப் பருகி விட்டு, சீக்கிரமா இங்கேயிருந்து...'
இளம்பெண் உடனடியாக அவரின் கையைப் பிடித்து அழுத்தினாள்...
'போக வேண்டாம்.... இங்கேயே இருக்கணும்' என்று கூறுவதைப் போல அது இருந்தது.
அவர் மிகவும் அமைதியான குரலில் சொன்னார்:
'சொல்லு... என்ன? உன் மனசுக்குள் என்ன இருக்கு?'
சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு இளம் பெண் பதைபதைப்புடன், அதே நேரத்தில் - வெளிப்படையான சந்தோஷத்துடன் மெதுவான குரலில் சொன்னாள்:
'என்ன காரணமோ தெரியவில்லை- என்னால் எதையும் கூற முடியவில்லை. ஆனால், பலவற்றையும் கூற வேண்டும் என்று நினைக்கிறேன்... என்னுடைய தீராத சந்தேகங்களும், மிகவும் விருப்பப்பட்ட கேள்விகளும்... ஆனால், இப்போது மனம் மிகவும் இயலாத நிலையில் இருக்கிறது. அனைத்தும் தாறுமாறாகிப் போய்... எதையும் தெளிவாக கூற முடியாத ஒரு நிலையில்....'
அவர் அவளுடைய மென்மையான கையை மெதுவாக தடவிக் கொண்டிருந்தார்.
இளம்பெண் சொன்னாள்:
'இந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக.... கொஞ்சம் பார்ப்பதற்கு, பேசுவதற்கு... நான் காத்திருந்தேனே! இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எந்தச் சமயத்திலும் எதிர்பார்த்ததும் இல்லை. ஆனால், இப்போது... அருகில் பார்த்தபோது... முதலில் உங்களுடைய நூல்களை வாசித்த சந்தோஷம் இருந்தது. பிறகு... நானும் சிலவற்றை எழுத ஆரம்பித்தபோது... உங்களிடம் அதையெல்லாம் எப்படி கூறுவது என்றே எனக்கு தெரியவில்லை.