ஞாபகம் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7413
எவ்வளவோ தூரம் நடந்துவந்துவிட்டோம் என்ற உணர்வு உண்டானபோது அவர் நின்றார். சிறிய அளவில் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும், அந்த நேரத்தில் அதைப் பொருட்படுத்தவில்லை. அங்கு நின்று கொண்டிருந்த போது, சிறுவயதிலிருந்து இதுவரை நடைபெற்ற சம்பவங்களில் விருப்பமானவற்றை ஞாபகப்படுத்திக் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உயர ஆரம்பித்திருந்தது. மைதானத்திலிருந்த புற்களின் நுனிகளில் கோடி சூரியன்கள் மின்னிப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அந்த பிரகாசத்தைப் பார்த்தபடி நின்றிருந்தபோது, பிள்ளையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் நிறைந்தன.
அந்த ஆனந்தக் கண்ணீர்த் துளிகளுடன் அவர் தூங்கிவிட்டார்.
மறுநாள் அதிகாலையில் வீட்டிலிருப்பவர்கள் கண் விழிப்பதற்கு முன்பே அவர் ஓசை உண்டாக்காமல் வாசற் கதவைத் திறந்து சாலைக்கு வந்தார். அப்போது பனிபொழிந்து கொண்டிருந்தது. முந்தைய நாள் பார்த்த பல மாடிகளைக் கொண்ட கட்டடத்தையும், ஒரே மாதிரி அமைந்த க்வார்ட்டர்ஸ்களையும், இலைகள் இல்லாத மரக்கிளைகளையும் பார்த்துவிட்டு, ஸ்டேடியத்திற்குள் நுழைந்தபோது அவருக்கு- உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- ஒரு சிறு குழந்தையின் சுறுசுறுப்பு இருந்தது.
ஸ்டேடியத்தில் நல்ல உடல்நலத்தைக் கொண்டவர்கள் வந்து சேர ஆரம்பித்திருந்தார்கள். தூரத்தில்... தூரத்தில் சிலர் ‘புஷ் அப்’ எடுத்துக் கொண்டோ, ஓடிக் கொண்டோ இருப்பதைப் பார்த்தார். அவர்கள் அனைவரும் அவரவர்களுடைய உலகங்களில் இருந்ததால், யாரும் பிள்ளையை கவனிக்கவில்லை.
மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு நின்றுகொண்டு, பிள்ளை நினைவுகளின் அறைகளைத் திறந்தார். ஏழரை வயது நடந்துகொண்டிருந்தபோது, முற்றத்திலிருந்த மாமரத்தின் கிளைகளுக்கு மேலே வானத்தில் நீல நிறத்திலிருந்த மேகங்கள் வரைந்திருந்த ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்ததையும், காற்று வீசி ஸ்ரீகிருஷ்ணன் சிதறத் தொடங்கியபோது கவலைப்பட்டு அழுததையும், அதற்கு முன்பு ஒருமுறை, வீட்டின் தெற்குப் பகுதியிலிருந்த பனை மரத்தின் மீது படர்ந்துகிடந்த கொடியின் அமர்ந்திருந்த- கருப்பு, சிவப்பு நிறத்திலிருந்த பட்டாம்பூச்சியைப் பிடிப்பதற்காக பதுங்கிச் சென்றதையும், கிட்டத்தட்ட பிடித்துவிட்டோமென்ற சூழ்நிலை உண்டானபோது புற்களின் படர்ப்பிற்குள்ளிருந்து ஒரு முள் கையிலும், கீழே புதருக்குள்ளிருந்து ஒரு கார முள் பாதத்திலும் ஒரே நேரத்தில் குத்தி நுழைந்ததும், பட்டாம்பூச்சி சென்றதும், தான் கவலைப்பட்டு அழுததும் மனதில் வலம் வந்தன. பிள்ளைக்கு சிரிப்பு வந்தது.
அப்போது சூரியன் உயர ஆரம்பித்தது. மைதானத்திலிருந்த புற்களின் நுனிகளில் கோடி சூரியன்கள் மின்னிப் பிரகாசித்தன.
பிள்ளையின் கண்களில் அந்த பிரகாசம் வந்து நிறைந்தது. சூரியன் இன்னும் உயர்ந்து செல்லச் செல்ல, அந்தத் துளிகள் மறைந்து விடுமென்பதையும், பிரகாசம் இல்லாமல் போய்விடும் என்பதையும் பிள்ளை மனக்கண்ணால் பார்த்தார்.
பிரகாசத்தை இழக்கும் அந்த புல்மேட்டின் வழியாக பிள்ளையின் மனம் எதிர்காலத்தை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தது. பிரகாசித்துக் கொண்டிருக்கும் பச்சையிலிருந்து இருண்ட பச்சைக்கும், இருண்ட பச்சையின் மீது வெயில் விழுந்தபோது உண்டான வெளுத்த பச்சைக்கும், வெளுத்த பச்சையின் வெப்பத்தில் உருமாறிய வாடிய பச்சைக்கும், வாடிய பச்சையின் மீது வெயில் விழுந்தபோது உண்டான இளஞ்சிவப்பு கலந்த பச்சைக்கும், சிவப்பு பின் வாங்கிய போது உண்டான கருத்த பச்சைக்கும் அவருடைய மனம் கடந்து சென்றுகொண்டிருந்தது. அந்த கருப்பிற்கு அப்பால் எவ்வளவு முயற்சி செய்தும் பிள்ளையால் கடந்து செல்ல முடியவில்லை. சிரமமென்பது தெரிந்தும் அந்த கருப்புநிறத் திரையை அகற்றுவதற்கு அவர் தேவையில்லாமல் முயற்சித்தார். அப்போது கருப்பு நிறத்தின் எண்ணற்ற பரிமாணங்கள் மனதை மூட ஆரம்பித்தன.
குழந்தை பருவக்காலத்தில் ஒருநாள் ஜாதிப்பிரச்சினைகளும் களைகளும் வளர்ந்துகிடந்த இரவு வேளையில், வயலில் குளிர்ந்து விரைந்துப் போய் பறந்துவந்த மூன்று மின்மினிப் பூச்சிகளை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, நான்காவதாக ஒரு மின்மினிப் பூச்சியை எதிர்பார்த்து நின்றிருந்ததும், இறுகப் பிடித்திருந்த உள்ளங்கைக்குள்ளிருந்த அவை மூன்றும் இறந்துபோனதும், இறந்தவுடன் இளம் கையில் இருட்டு பரவியதும், தன் தாய் தன் தங்கையைப் பெற்றெடுப்பதற்காக பிரசவ வேதனை எடுத்த இரவு வேளையில், தாதிப் பெண்ணை அழைப்பதற்காக லாந்தர் விளக்குடன் நடந்து சென்றதும், குராட்டு மோனிகி என்ற கெட்ட ஆவி வசித்துக் கொண்டிருந்த குராட்டு காவிற்கு அருகில் சென்றபோது கால் தட்டி விழுந்ததும், கையிலிருந்த லாந்தர் விளக்கு உடைந்து பயங்கரமான இருட்டு பரவியதும் அவருடைய ஞாபகத்தில் வந்தன. பிறகு ஒவ்வொரு இருட்டுகளும் வரிசை வரிசையாக வந்து அவருடைய கண்களில் இருட்டை நிறைத்தன.
மைதானத்திலிருந்து சங்கரநாராயணப் பிள்ளையின் நனைந்திருந்த இறந்த உடல் வீட்டிற்கு வந்தபோது, வீட்டிலிருந்தவர்களுக்கு கவலையைவிட திகைப்புதான் அதிகமாக உண்டானது. அவர் எப்போது வெளியேறிச் சென்றார்? எதற்காக வெளியே சென்றார்? அதுவும் யாருடைய உதவியும் இல்லாமல்... இவ்வளவு தூரத்திற்கு?