ஆற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்... - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5924
“என்ன நடந்தது? ஆரம்பத்தில் எப்படி இருந்தது?’
அவர் டாக்டரைப் பார்த்தவாறு யோசித்துக் கொண்டிருந்தார்...
ஆரம்பம் எப்படியிருந்தது?
டாக்டர் அவரையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஆமாம்... அதேதான்... சொல்லுங்க... என்னிடம்தானே... கொஞ்சமும் தயங்க வேண்டாம். நான்தானே? சொல்லுங்க... என்ன....
அவர் டாக்டரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
அவருக்கு டாக்டரின்மீது நம்பிக்கை இருந்தது.
ஆனால், அதற்குப் பிறகும்... எதையும் நினைத்துப் பார்க்கவோ, கூறுவதற்கோ முடியவில்லை.
“எறும்பு... ஒரு எறும்பு...”
டாக்டர் ஆச்சரியத்துடன் கேட்டார்:
“எறும்பா?”
அவர் வேதனையுடனும் பதைபதைப்புடனும் கூறினார்:
“ஆமாம்... எறும்பு...”
டாக்டர் எதவும் கூறாமல், அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு... ஒன்றும் அதிகமான முடிச்சுகளைக் கொண்ட பழைய ஒரு மூட்டையை அவிழ்த்தெடுப்பதைப்போல அவர் சொல்ல ஆரம்பித்தார்.
“இந்த முறை இடது கையில்தானே வேதனை உண்டாக ஆரம்பித்திருக்கிறது? சில நேரங்களில் ஒரு எறும்பு இடது பக்கத் தோளிலிருந்து மெதுவாக நகர்ந்து ஏற ஆரம்பிக்கும். தோளின் வழியாக காதுக்குப் பின்னால் மேல்நோக்கி ஏறி... அது போகக்கூடிய வழியை என்னால் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். அப்போது கடுமையான வேதனை இருக்கும். கழுத்திற்கு உள்ளேயும் தலையில் கூர்மையான ஆயுதம் குத்துவதைப்போல... ஆனால், எதுவுமே செய்ய முடியவில்லை. அவ்வாறு எறும்பு ஊர்ந்து ஊர்ந்து, இறுதியில் தலைக்குள்ளே சென்று....” அவருடைய வார்த்தைகள் அங்கு நின்றன.
டாக்டர் அமைதியான குரலில் கேட்டார்:
“இப்போது அந்த வேதனை இருக்கிறதா?”
அவர் சொன்னார்: “இல்லை... எப்போதாவதுதான் இருக்கும்.”
மீண்டும் அவர்களுக்கிடையே அமைதி நிலவியது.
டாக்டர் எதுவும் சொல்லாமல் இருப்பதைப் பார்த்ததும் அவர் கேட்டார்:
“நான் கூறியது எதிலும் நம்பிக்கை வரவில்லையா?”
நம்பிக்கை இருக்கிறதென்பதைப்போல டாக்டர் தலையை ஆட்டினார். பிறகு அவர் கேட்டார்:
“அதற்குப் பிறகு என்ன நடந்தது?”
அவர் சொன்னார்:
“மாலை வேளையில் நான் முன்னாலிருந்த அறையில் தனியாக அமர்ந்திருந்தேன். ஒவ்வொன்றையும் நினைத்துக் கொண்டே... எனினும், மனதில் குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எதுவும் இருக்கவில்லை. ஒரு வகையான வெறுமையான சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்தது. மாலை நேரமென்று சொன்னேன் அல்லவா? ஆனால், இருட்டு பரவ ஆரம்பித்திருக்கவில்லை. மிகவும் சிறிய அளவில் ஒரு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அவ்வாறு அமர்ந்திருப்பதற்கு மத்தியில் நான் சென்று அறைக்குள்ளிருந்த டி.வி. பெட்டியை ‘ஆன்’ செய்தேன். என்ன நிகழ்ச்சி என்பதைப் பற்றியோ, யாருடைய நிகழ்ச்சி என்பதைப் பற்றியோ எந்தவொரு தீர்மானமும் இல்லை. தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் இல்லை. திரையில் வருவது எதையும் நான் உண்மையிலேயே பார்ப்பதும் இல்லை...
யாரோ சிரமப்பட்டு நடந்துவந்து வராந்தாவில் நின்று கொண்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. எழுந்து வெளியே சென்று பார்த்தபோது... சிரித்தவாறு ஒரு இளைஞன் நின்றிருந்தான். அவன் வீட்டுக்குள் வருவதற்காக ஷூக்களை கழற்றிக் கொண்டிருந்தான். அவன் எனக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவனாக இருந்தான். எனினும், நன்கு அறிமுகமானவனைப் போலிருந்த அவனுடைய சிரிப்பைப் பார்த்ததும்... நான் குழப்பதற்க்கு ஆளாகிவிட்டேன். நான் கேட்டேன்: ‘யாரு? என்ன விஷயம்?’
இளைஞன் எதுவும் பேசாமல் சிறிது ஆச்சரியத்துடன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அவனிடம் பதைபதைப்பு இருப்பதைப் போலவும் தோன்றியது. எனினும், அந்த சமயத்திலும் அவனுடைய முகத்தில் சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது.
நான் மீண்டும் கேட்டேன்: ‘யாரு? புரியலையே!’ அப்போதும் அவன் எதுவும் கூறவில்லை. ஆனால், முகத்திலிருந்து சிரிப்பு முழுமையாக மறைந்துவிட்டிருந்தது.
அவன் எந்தவித அசைவுமில்லாமல் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். நானும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். எனக்கு எதுவுமே புரியவில்லை. அந்த இளைஞன்... மிகவும் சுதந்திரமாக மாலை வேளையில் என் வீட்டிற்குள் நுழைந்து வந்த அந்த இளைஞன்... யார் அவன்? எனக்குப் புரியவே இல்லையே!
ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக கண்ணாடியிலிருந்து பனிப்படலம் மறைந்துபோவதைப்போல எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரிந்தன.
நான் ஆச்சரியத்துடன் கூறினேன்:
‘அஷ்ரஃப்!’
அஷ்ரஃப்- இரண்டு நாட்களுக்கு முன்புகூட என்னுடைய வீட்டிற்கு வந்திருந்த- எவ்வளவோ காலமாக நெருக்கமாக அறிந்திருந்த- பார்க்கமுடியாத நாட்களில் தொலைபேசி மூலம் பேசக்கூடிய...
அஷ்ரஃப் கேட்டான்:
‘என்ன நடந்தது?’
நான் அஷ்ரஃப்பிடம் சொன்னேன்.
‘எனக்கு எதுவுமே புரியவில்லை.... எதுவுமே...’
சிறிது நேரம் என்னவோ சிந்தனையில் மூழ்கிவிட்டு, டாக்டர் மீண்டும் கேட்டார்:
“அதற்கு பிறகு என்ன நடந்தது?”
அவர் சொன்னார்:
“பிறகு... பிறகு...”
இருட்டில் பார்க்க முடியாத எதையோ தேடிக் கொண்டிருப்பதைப்போல இருந்தது.
அவரால் வார்த்தைகளை முழுமை செய்ய முடியவில்லை.
ஆனால், பிறகு... திடீரென்று அவர் டாக்டரிடம் கேட்டார்:
“ரமேஷனை தெரியுமல்லவா? ரமேஷன்... கவிதைகள் எழுதக்கூடிய...”
ஆனால், டாக்டருக்கு ரமேஷனைத் தெரியவில்லை. எனினும், தெரியுமென்றோ தெரியாதென்றோ எதுவுமே டாக்டர் கூறவில்லை. ஆனால், டாக்டரின் வார்த்தைகளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் அவர் தொடர்ந்து கூறினார்:
“ரமேஷனின் கவிதைகள் முதல்தரம் கொண்ட அருமையான கவிதைகள். எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு நண்பனாக இருக்கிறான் என்பதற்காகக் கூறவில்லை... அவனுடைய ஊருக்கு நான் சென்றதே அவனுடைய கவிதைகளைப் பற்றி உரையாற்றுவதற்குதான். நீண்ட நாட்களாகவே அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருந்தேன். நான் செல்லும் தகவலை ரமேஷனுக்கு தெரியப்படுத்தவே இல்லை. முன்கூட்டியே கூறியிருந்தால், ஒருவேளை ‘வேண்டாம்’ என்று கூறி தடுத்துவிடுவானோ என்ற பயம் எனக்கிருந்தது. ஆனால் அங்கு சென்றவுடன், நான் ஹோட்டலில் இருந்தவாறு அவனுக்கு ஃபோன் செய்தேன். ‘இப்போது இங்கே வர வேண்டாம். மாலை கட்டாயம் வர வேண்டும். நான் என்ன பேசுகிறேன் என்பதை...’
ரமேஷன் எதுவும் பேசாமலிருக்க, நான் கேட்டேன்:
‘நீ மாலையில் வருவாயல்லவா?’
ரமேஷன் சொன்னான்: ‘வராமலிருக்க முடியுமா? ஆனால்...?’
நான் சொன்னேன். ‘ஒரு ஆனாலும் இல்லை. வா... பிறகு என்னுடைய சொற்பொழிவு எப்படியிருந்தது என்பதை...’
நிகழ்ச்சி ஆரம்பித்தபோது ரமேஷன் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தான். நான் நல்ல ‘ஃபார்மில்’ இருந்தேன்.