அதிகாலை அதிர்ச்சி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6676
அதிகாலை வேளையில், ஆளுயரக் கண்ணாடியில் தன் அழகையும், அதை மிகைப்படுத்தும் அலங்காரத்தையும் கண்டு திருப்தியடைந்த அருணா, டைட்டனில் டைம் பார்த்து சுறுசுறுப்பானாள்.
'மணி ஐந்து. ஏழரைக்கு ஃப்ளைட். ஆறரைக்கு செக்-இன். அப்பா வாக்கிங் புறப்படுவதற்குள் அவரிடம் விடைபெற வேண்டும்.
நினைத்தபடியே, தன் சூட்கேஸை எடுத்துக் கொண்டு, தனபாலின் அறையை நோக்கி நடந்தாள் அருணா.
சாத்தியிருந்த கதவை நாசூக்காய் தட்டிவிட்டு தள்ள, கதவு திறந்துக் கொண்டது. அங்கே அவள் கண்ட காட்சிக்கு அதிகமாய் அதிர்ந்தாள்.
தனபாலன், அவரது கட்டிலின் கீழே சரிவாய் சாய்ந்துக் கிடந்தார். அவருடைய வாயில் ரத்தமும், நுரையுமாய் கலந்து உலர்ந்துக் கிடந்தது.
"அப்பா.." திகிலுடன் அலறியவாறே அவரை நோக்கி குனிந்தாள். மூக்கின் அருகே விரல் வைத்துப் பார்த்தாள். அதிர்ந்தாள். அழுதாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே காவல் துறையினர் குழுமி இருந்தனர். புகைப்பட நிபுணர் தன் காமிராவில் 'க்ளிக் 'க்ளிக் என க்ளிக்கிக் கொண்டிருக்க, போலீஸ்காரர்கள் ஒவ்வொரு அறையிலும் நுழைந்து வெகு சிரத்தையாக தடயங்களைத் தேடுவதில் முனைப்பாக இருந்தனர்.
இன்ஸ்பெக்டர் வழக்கம் போல, தங்கள் கடமையை செய்வதாகக் கூறி, அழுதுக் கொண்டிருந்த அருணாவிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
"அப்போ, உங்க அப்பா தனபாலன் நல்ல ஆரோக்யமாத்தான் இருந்தார்னு சொல்றீங்களா மிஸ் அருணா?"
"ஆமா இன்ஸ்பெக்டர். நேத்து தூங்கற வரைக்கும் நார்மலா இருந்தார். அவருக்கு எந்தக் கம்ப்ளெயின்ட்டும் கிடையாது. உடற்பயிற்சிக்காக தினமும் வாக்கிங் போவார். போற இடத்துல டீ குடிப்பார். வீட்டுக்கு வந்து ரெண்டு இட்லி மட்டும்தான் சாப்பிடுவார். அப்புறம் கம்பெனிக்கு போயிடுவார். லஞ்ச் டைம் வரைக்கும் நடுவில எதுவும் சாப்பிட மாட்டார். ராத்திரி ரொம்ப நேரம் என் கூட பேசிக்கிட்டிருந்தார்." சோகம் கப்பிய முகத்துடன் பதில் கூறிக் கொண்டிருந்தாள் அருணா.
"உங்க கூட வேற யார் இருக்காங்க?"
"நான் எங்கப்பாவுக்கு ஒரே மகள். நான் சின்ன வயசா இருக்கப்பவே எங்கம்மா இறந்துட்டாங்க."
"உங்க அப்பாவுக்கு என்ன தொழில்?"
"அவர் ஒரு இன்டஸ்ட்ரியலிஸ்ட். கோவையிலே எங்களோட பைப்ஸ் அண்ட் பைப்ஸ் கம்பெனிதான் முதன்மையானது."
"இந்த சொத்துக்களோட வாரிசு நீங்கதானா?"
"ஆமா. அவருக்கப்புறம் இன்டஸ்ட்ரியை நான் நிர்வகிக்கணுங்கறதுக்காக என்னை ட்ரெயின் பண்ணிட்டிருந்தார். எக்ஸ்போர்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களையெல்லாம் கத்துக் குடுத்தார். இன்னிக்கு மார்னிங் நான் லண்டன் போறதா இருந்தேன்."
"தனபாலன் வாக்கிங் போவார்னு சொன்னீங்களே, காலை நேரத்துல போவாரா? சாயங்காலமா போவாரா?"
"காலையில சீக்கிரமா போய்டுவார்."
"தினமும் ஒரே இடத்துக்கு போவாரா."
"தானே காரை ஓட்டிக்கிட்டு போய், ரேஸ் கோர்ஸ்ல பார்க் பண்ணிட்டு, ஒரு மணிநேரம் நடந்துட்டு மறுபடி கார்ல வீட்டுக்கு வந்துருவார்."
"தனபாலனோட பாடியை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பணும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தப்புறம் உங்களை வந்து சந்திக்கிறேன்."
காவல் துறையின் சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் புறப்பட்டார். உயிர் இழந்த தனபாலன் போஸ்ட் மார்ட்டத்திற்குத் தயாரானார்.
"மிஸ் அருணா, நீங்க யூகிச்சது போலவே தனபாலன் கொலைதான் செய்யப்பட்டிருக்கார். அவருக்கு சாப்பாட்டில விஷம் கலந்து குடுத்திருக்காங்க. அவரோட ரத்தத்துல பாய்சன் கலந்திருக்குன்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு."
"விஷம் வச்சு கொல்ற அளவுக்கு அவருக்கு யாரும் எதிரிங்க கிடையாதே?!"
"அவர் இறந்து போறதுக்கு முந்தின நாள் ராத்திரி வெளில எங்கயாவது போனாரா?"
சற்றே தலையை சாய்த்து யோசித்தாள் அருணா.
"ஒரு பார்ட்டிக்காக அவரோட நண்பர் கோபால் கூட போனதா அப்பா சொன்னார்."
"யார் அந்த கோபால்?"
"அவரும் ஒரு இன்டஸ்ட்ரியலிஸ்ட். அயர்ன் அண்ட் ஸ்டீல் டென்டர் அப்பாவுக்கு கிடைச்சதுக்கு அவர் பார்ட்டி குடுத்தார். இந்த டென்டருக்கு ரொம்ப காம்பெட்டிஷன் இருந்தது."
"உங்கப்பாவுக்கு கிடைச்சதுக்கு அவர் ஏன் பார்ட்டி குடுக்கணும்? உங்க அப்பாதானே குடுக்கணும்?"
ஒரு கணம் கண்களை மூடி சிந்தித்தாள் அருணா.
"ஆமா இன்ஸ்பெக்டர். ஆனா பார்ட்டி, டின்னர் குடுக்கறதெல்லாம் பிஸினஸ் பீப்பிளுக்கு சகஜம்தானே? இதெல்லாம் அடிக்கடி நடக்கறதுதான். அதனால இதை நான் பெரிய விஷயமா நினைக்கலை."
"அந்த பார்ட்டியில நிறைய பேர் கலந்துக்கிட்டாங்களா?"
"இல்லை. தன்னை மட்டுமே இன்வைட் பண்ணினதா அப்பா சொன்னார்."
"அந்த அயர்ன் அண்ட் ஸ்டீல் டெண்டருக்கு கோபாலும் ட்ரை பண்ணினாரா?"
"அந்த டென்டர் தனக்கு கிடைக்கணும்னு டீல் பண்ணி இருக்கார் கோபால். கடைசி வரைக்கும் ரொம்ப முயற்சி செஞ்சிருக்கார்."
"தனக்குக் கிடைக்க வேண்டிய அந்த டெண்டர் தனபாலனுக்கு கிடைச்சுட்ட கோபத்துலயும், பொறாமையிலயும் இந்தக் கொலை நடந்திருக்கலாம்."
"இருக்கலாம் இன்ஸ்பெக்டர்."
"இதைத் தவிர தொழில் ரீதியா வேறே யார் கூடவாவது உங்க அப்பாவுக்கு விரோதம் இருந்துச்சா?"
"கிடையாது ஸார்."
"அந்த கோபாலோட அட்ரஸ் தரீங்களா?"
அருணா எழுதிக் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் வெளியேறினார்.
"முந்தா நாள் நைட் தனபாலனுக்கு நீங்க பார்ட்டி குடுத்ததா சொல்றாங்களே? அவர் அந்த பார்ட்டியில கலந்துக்கிட்டாரா?" கோபாலிடம் விசாரணையை ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர்.
சற்று உரக்கவே பேசும் வழக்கமுடைய கோபாலுக்கு, இன்ஸ்பெக்டரைக் கண்டதும் சட்டென்று குரல் எழும்ப மறுத்தது.
"ஆமா இன்ஸ்பெக்டர்"
கிணற்றுக்குள் இருந்து வருவது போல் குரல் மிகவும் சன்னமாக ஒலித்தது.
"வேற யார் யார் அந்த பார்ட்டியில் கலந்துக்கிட்டாங்க?"
"நான் ... நா... நா.... நாங்க ரெண்டு பேர் மட்டும்தான் இன்ஸ்பெக்டர்."
கோபாலின் தடுமாற்றம் இன்ஸ்பெக்டரின் மூளைக்குள் மின்னலாய் பல கேள்விகளை உருவாக்கியது.
"அவருக்கு டென்டர் கிடைச்சதுக்கு நீங்க ஏன் பார்ட்டி குடுக்கணும்?"
"தனபாலன் என் ஆத்ம நண்பர். அவரோட வெற்றியை என்னோட வெற்றியா ஃபீல் பண்ணினேன். விருந்து குடுத்தேன்."
"அவருக்கு போட்டியா அந்த டெண்டர் உங்களுக்கு கிடைக்கறதுக்காக ரொம்ப முயற்சி பண்ணீங்களாமே?"
"ஆமா. நல்ல லாபம் வரக் கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது தொழில்ல இருக்கறவங்க யாரும் அதை மிஸ் பண்றதில்லையே. சம்பந்தப்பட்டவங்க எல்லாருமே டீல் பண்ணித்தான் செய்வாங்க. எனக்கும் தனபாலுக்கும் நடந்தது ஒரு ஆரோக்கியமான போட்டிதான்."
"போட்டி மட்டும்தானா? பொறாமை இல்லையே?"
"இன்ஸ்பெக்டர்! லிமிட் யுவர் டங். நான்தான் தனபாலனை கொலை செஞ்சதா சொல்றீங்களா?"