அதிகாலை அதிர்ச்சி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6669
"சூழ்நிலை அப்படி இருக்கே. தவிர, உங்ககூட பார்ட்டியில சாப்பிட்டதுதான் அவர் கடைசியா சாப்பிட்ட சாப்பாடு.. அவர் சாப்பிட்ட உணவுல பாய்சன் கலந்திருக்கறதா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு. கோபப்படாதீங்க மிஸ்டர் கோபால். எங்க கடமையை நாங்க செய்யறோம்."
"கொலை செய்யற அளவுக்கு நான் தரம் கெட்டவன் இல்லை."
கோபாலின் கோபம், இன்ஸ்பெக்டரின் சந்தேகத்தை மேலும் வலுவாக்கியது.
இன்ஸ்பெக்டர் புறப்பட்டதும் ஏதோ எண்களை வேகமாய் டயல் செய்து கிசுகிசுப்பாய் பேசினார் கோபால்.
கே.ஜி தியேட்டர் காம்ப்ளெக்ஸ் அருகே தன் பைக்கை நிறுத்தி விட்டு ரேஸ்கோர்ஸை நோக்கி நடந்தார் இன்ஸ்பெக்டர்.
அமைதி நிறைந்த ரேஸ்கோர்ஸ் பகுதி, ஆடம்பரமான பங்களாக்களால் சூழப்பெற்று, செல்வச் செழுமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
அதிகாலைத் தூக்கம் கலைந்து விட்ட தன் உணர்வுகளை சுறுசுறுப்பாக்க, டீ குடிக்க எண்ணினார் இன்ஸ்பெக்டர்.
"கொஞ்சம் நிலவு; கொஞ்சம் நெருப்பு" டீக்கடையின் ரேடியோவில் ஏதோ ஒரு எஃப்.எம். ஒளிபரப்பிக் கொண்டிருந்த பாடலில் சந்திரலேகாவை அழைத்துக் கொண்டிருந்தது.
டீக்கடையில் இருந்து வெளியே வந்த இளைஞன் ஒருவன் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். அவன் ரத்த வாந்தி எடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அவன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
இன்ஸ்பெக்டர் தன் பைக்கை எடுத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்து சென்றடைந்தார்.
வைத்தியம் பலனளிக்காமல் மரணம் அடைந்துவிட்ட அந்த இளைஞனின் ரத்தத்தில் பாய்ஸன் கலந்திருப்பதாக மருத்துவ அதிகாரிகள் ரிப்போர்ட் கொடுத்திருந்தனர்.
இதை அறிந்த இன்ஸ்பெக்டருக்கு மனதில் பட்சி பறந்தது. 'ஓ, அந்த டீக்கடையிலதானே தனபாலன் டீ குடிப்பதாக அருணா சொன்னாள்? இப்போ இறந்து போன இந்த இளைஞனும் அதே டீக்கடையில் வழக்கமாக டீ குடிப்பவனாக இருக்குமோ..?"
அந்த வாலிபனின் விலாசத்தை அறிந்து அங்கே சென்றார்.
அங்கே அவனது மனைவி, அழுததால் வீங்கிய கண்களுடன் சோகமே உருவாகக் காணப்பட்டாள்.
"உன் புருஷனுக்கு ரேஸ்கோர்ஸ் ஏரியாவுல இருக்கற ஸ்டார் டீக்கடையில டீ குடிக்கற வழக்கம் உண்டா?"
"ஆமா ஸார். டிபன், காபி எதுவும் சாப்பிட மாட்டாரு. எப்பப் பார்த்தாலும் அந்த டீக்கடையிலதான் டீ குடிப்பாரு. அந்தப் பக்கம்தான் அவருக்கு லோடு ஏத்தற வேலை. அதனால அடிக்கடி அங்கே டீ குடிப்பாரு."
விசாரணையை முடித்துக் கொண்ட இன்ஸ்பெக்டருக்கு முடிச்சுகள் அவிழ்வது போல தோன்றியது.
அந்த டீக்கடைக்குச் சென்று அதன் உரிமையாளரிடம் டீ தயாரிக்க உபயோகப்படுத்தும் தேயிலையைக் கைப்பற்றினார். அதை கவுன்ஸிலுக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தார்.
சோகம் நிழலாடிய முகத்துடன் இன்ஸ்பெக்டரை வரவேற்றாள் அருணா.
"மிஸ் அருணா. உங்க அப்பாவை யாரும் கொலை செய்யலை. அவர் வழக்கமா டீ குடிக்கற கடையில கலப்படமான தேயிலையை உபயோகப்படுத்தி இருக்காங்க."
"கலப்படமா?"
"ஆமா. மஞ்சநத்திங்கற ஒரு மரம் இருக்காம். அந்த மரத்தோட தூளை தேயிலைத் தூளோட கலந்துடறாங்களாம். நல்ல கலர் கிடைக்கணும்ங்கறதுக்காக இதிலே சாயம் ஏத்தறாங்களாம். அந்த சாயம் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாம். கவுன்சில்லயிருந்து விளக்கமா ரிப்போர்ட் குடுத்துருக்காங்க."
"ஸோ, எங்க அப்பாவோட மரணம் கலப்படத்துனாலதானே இன்ஸ்பெக்டர்?"
"யெஸ் மிஸ் அருணா. மெல்ல மெல்ல உயிரைக் கொல்லும் விபரீதத்தை விளைவிப்பது கலப்பட உணவுகள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிச்சு தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்கேன்."
"தாங்க்யூ இன்ஸ்பெக்டர். இனியும் இதுபோல யாருக்கும் ஏற்படாம உங்களால முடிஞ்சதை செய்யுங்க சார்."
"ஷ்யூர், ஷ்யூர்"
இன்ஸ்பெக்டர் விடைபெற்றுச் சென்றார்.