குமாருக்கு வந்த மொட்டைக் கடிதம்! - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7014
பள்ளியில் அவளை இறக்கி விட்டு அலுவலகத்திற்கு சென்றான்.
துணிகளை துவைக்கப் போடுவதற்காக வேலைக்காரியிடம் கொடுத்தாள் லதா.
“அம்மா, ஐயா சட்டைப் பையில் இருந்ததும்மா.” வேலைக்காரி கொடுத்த சிறிய பர்சை வாங்கிப் பார்த்தாள் லதா. பணத்துடன், நான்காக மடிக்கப்பட்ட உள்நாட்டு தபால் ஒன்றைக் கண்டாள். பிரித்துப் படித்தாள். அது அந்த மொட்டைக் கடிதம். அவளுக்குத் தலை சுற்றியது. கண்கள் இருண்டன. குமாரின் மாறுபட்ட நடவடிக்கையின் மர்மம் வெட்ட வெளிச்சமாகியது.
உயிருக்குயிராக நேரித்து, பூஜித்து வரும் கணவனை சந்தேகப் பேய் பிடித்து ஆட்டுவதை உணர்ந்து கொண்டாள். உள்ளத்தில் உதிரம் சொட்ட அழுதாள். சோகத்தின் எல்லையில் கோபம் எழுந்தது.
‘இப்படி ஒரு லெட்டர் தன்னைப் பற்றி வருவதற்கு என்ன காரணம்? யார் இப்படி ஒரு கேவலமான வேலையை செய்திருப்பார்கள்?’ நீண்ட நேர யோசனைக்கு பின் ஒரு சம்பவம் நினைவில் ‘பளிச்’சிட்டது.
குமார் வெளிநாடு சென்றிருந்த சமயம் வீட்டு பொருட்கள் வாங்குவதற்காக லதா பல்பொருள் அங்காடிக்கு சென்றிருந்தாள். கூட்டமாக இருந்தது. ஒவ்வொரு பகுதியாக சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரும் பொழுது எதிரே, அவளை வழிமறிப்பது போல நின்றிருந்தான் ஹரீஷ்.
‘லதா, காலேஜ்ல படிக்கும்போது இருந்த அதே அழகு, கொஞ்சம் கூட குறையாமல் இருக்கியே? யூ லுக் வெரி ஸ்வீட். நீ ஒரு குழந்தைக்கு அம்மான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. சொல்லப் போனா முன்னை விட ரொம்ப அழகா இருக்கே. உன் கணவன், குழந்தையோட உன்னைப் பார்த்திருக்கேன். இன்னிக்குத்தான் தனியா பேசறதுக்கு சான்ஸ் கிடைச்சது’ பேசியவன் கண்ணை வேறு சிமிட்டினான்.
‘வாயை மூடுங்க. பொது இடத்துல இப்படி அநாகரிகமா பேசறீங்களே? உங்களை காலேஜ் மேட்டுன்னு சொல்லவே வெட்கமாயிருக்கு’ லதா கடுமையாகப் பேசியதும் சுற்றி இருந்தவர்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியது.
‘இதில் வெட்கப்பட என்ன இருக்கு’ மனம் போன போக்கில் பொறுக்கித் தனமாகப் பேச முற்பட்டான் ஹரீஷ்.
கோபத்தில் முகம் சிவந்த லதா அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
பலர் மத்தியில் ஒரு பண்ணால் அவமானப்படுத்தப்பட்ட அவன், பல்லைக் கடித்தபடி அவளை முறைத்துப் பார்த்து விட்டு வெளியே சென்றான்.
அந்த ராஸ்கல்தான் தன்னைப் பழிவாங்குவதற்காக இந்த இழிவான செயலை செய்திருக்க வேண்டும் என்பது லதாவிற்கு புரிந்தது. அன்றைய சம்பவத்தை யதேச்சையாக குமாரிடம் சொல்ல மறந்து விட்டிருந்தாள்.
அந்தக் கயவன்தான் இப்படி ஒரு இழிவான கடிதத்தை எழுதினான் என்றால், தன்னில் பாதியாக ஒன்றிணைந்த கணவனும் சந்தேகச் சேற்றில் சிக்கி விட்டதை எண்ணி மனம் நொந்து போனாள்.
மாலையில் திவ்யாவை அழைத்துக் கொண்டு வந்துவிட்ட குமார், காபி கூட குடிக்காமல் போய் விட்டான்.
“திவ்யா…”
“என்னம்மா?”
“அப்பா உன்கிட்ட ஏதாவது கேட்டாராம்மா?”
குழந்தை மவுனம் சாதித்தாள்.
அந்த மவுனமே குமார் ஏதோ கேட்டிருப்பான் என்று உணர்த்தியது. மிரட்டிக் கேட்டபின், குமார் கேட்ட அனைத்தையும் தெளிவாக திவ்யா கூறினாள்.
கேட்ட லதா பொங்கினாள். தன் பெண்மையை கேவலமாக எண்ணிய குமார் மீது கோபம் வந்தது.
இரவு-
அதே தெளிவற்ற முகத்துடன் வீடு திரும்பிய குமாரிடம் அந்த உள்நாட்டு கடிதத்தை வீசி எறிந்தாள்.
“இந்த லெட்டர் தானே என் கற்பை சந்தேகிக்க வைத்தது? பாராமுகமாக இருந்து இம்சித்தீர்கள்? குழந்தையிடமே என்னைப் பற்றி உளவு கேட்டீர்கள்? நீங்களே உலகமாக வாழ்ந்ததை மறந்து என்னை கேவலப்படுத்தி விட்டீர்கள். உங்கள் இதயம் இரும்பு. என்னை முழுமையாக நம்பி இருந்தால் கடிதத்தை என்னிடம் காட்டி இருப்பீர்கள். விளக்கம் கொடுத்திருப்பேன். நம்பிக்கைதான தாம்பத்திய வாழ்வின் ஜீவன். வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் போகும் உங்களை ஒரு முறையேனும் நான் தவறாக எண்ணி இருப்பேனா? என்னை நம்பாத உங்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.”
தயாராக எடுத்து வைத்திருந்த சூட்கேசைத் தூக்கிக் கொண்டு, தன் மகள் திவ்யாவையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள் லதா.
லதாவும், திவ்யாவும் வீட்டை விட்டுப் போனதிலிருந்து வீடே வெறிச்சோடிப் போயிருந்தது. எல்லாமே தன்னை விட்டுப் போய் விட்டதாக உணர்ந்தான் குமார்.
காலையில் விழித்து, படுக்கையில் புரண்டு படுத்தாலே தான் விழித்து விட்டதை உணர்ந்து காபி கொண்டு வரும் லதா இப்போது இல்லை.
பிரஷ் எடுத்துக் கொடுத்து, பேஸ்ட் பிதுக்கி வைத்து, குளிக்க வெந்நீர் விளாவி வைத்து… அவனது ஒவ்வொரு தேவைகளையும் கவனிக்கும் லதா இப்போது இல்லை.
அவள் இல்லாத ஒவ்வொரு வினாடியும் அவளது தேவையை உணர்ந்தான் குமார். தனிமை அவனை சிந்திக்க வைத்தது.
ஏதோ ஒரு மொட்டைக்கடிதம், அதை நம்பி நாம் அவளை சந்தேகப்பட்டது தவறுதானோ? ‘ஆம்… ஆம்…’ என்றது உள்மனம்.
தன்னை கவனிப்பதிலும், தன் நலனில் அக்கறை காட்டுவதிலும் தன் தேவைகளை சந்திப்பதிலுமே பெரும்பகுதி நேரத்தை செலவிடும் லதாவை, தான் சந்தேகப்பட்டது தவறு என்பதை உணர்ந்தான் குமார்.
அந்தக் கடிதத்தை அவளிடம் காட்டி விபரம் கேட்டிருக்கலாம். அதை விட்டு விட்டு இப்படி நடந்து கொண்டது தப்பு என தோன்றியது அவனுக்கு.
மனைவியையும், மகளையும் பார்க்கும் ஆர்வம் இதயத்தில் பொங்க லதாவின் தாய் வீடு நோக்கி புறப்பட்டான் குமார்.