Lekha Books

A+ A A-

போஸ்ட் மாஸ்டர் - Page 3

போஸ்ட் மாஸ்டர்

அதற்குப் பிறகு ரட்டன் வேறு கேள்வி எதுவும் கேட்கவில்லை. போஸ்ட் மாஸ்டர் அவராகவே இடமாற்றம் கேட்டு தான் எழுதியிருந்த கடிதம் மறுக்கப்பட்டுவிட்ட விஷயத்தையும், அதனால் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டுத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போகப் போவதையும் கூறினார்.

நீண்ட நேரத்திற்கு அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள். விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் ஒரு மூலையில் இருந்த ஓட்டை வழியாக நீர் தரையில் வைக்கப்பட்டிருந்த மண் பாத்திரத்தில் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு ரட்டன் எழுந்து, உணவு தயாரிப்பதற்காக சமையலறையைத் தேடிச் சென்றாள். மற்ற நாட்களில் இருப்பதைப்போல அன்று அவள் அதில் சுறுசுறுப்பாக இல்லை. அவளுடைய சிறிய மூளைக்குள் சிந்திப்பதற்கு ஏராளமான புதிய விஷயங்கள் நுழைந்திருந்தன. இரவு உணவைச் சாப்பிட்டு முடித்த போஸ்ட் மாஸ்டரிடம், சிறுமி உடனடியாகக் கேட்டாள்: ‘‘அய்யா, தயவு செய்து என்னை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போவீங்களா?’’

அதைக் கேட்டு போஸ்ட் மாஸ்டர் சிரித்தார். ‘‘என்ன எண்ணம் இது!’’ - அவர் சொன்னார். எந்த அளவிற்கு முட்டாள்தனம் அவளுடைய வார்த்தைகளில் மறைந்திருக்கிறது என்பதை அவளுக்கு விளக்கிச் சொல்ல அவர் விரும்பவில்லை.

அந்த இரவு முழுவதும், கண் விழித்திருக்கும்போதும், கனவிலும் போஸ்ட் மாஸ்டரின் சிரிப்புச் சத்தமும், என்ன எண்ணம்!’ என்று அவர் சொன்ன பதிலும் அவளைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தன.

காலையில் எழுந்தவுடன் போஸ்ட் மாஸ்டர் குளிப்பதற்கான விஷயங்கள் தயாராக இருப்பதைப் பார்த்தார். கிராமத்தில் எல்லோரும் செய்வதைப்போல ஆற்றில் மூழ்கிக் குளிப்பதற்கு பதிலாக, கல்கத்தாவில் எல்லோரும் குளிப்பதைப்போல, பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வந்து வைக்கப்படும் நீரில் குளிப்பதையே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். சில காரணங்களுக்காக அவர் எத்தனை மணிக்கு அங்கிருந்து கிளம்புகிறார் என்ற விஷயத்தை அவள் கேட்கவில்லை. அதனால் சூரியன் தோன்றுவதற்கு முன்பே ஆற்றிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு வந்து அங்கு அவள் வைத்து விட்டாள். அவருக்கு தேவைப்படுவதற்கு முன்பே, அங்கு அது இருக்கட்டும் என்று அவள் நினைத்தாள். குளித்து முடித்து விட்டு வந்த போஸ்ட் மாஸ்டர் ரட்டனை அழைத்தார். எந்தவித ஓசையும் எழுப்பாமல் உள்ளே நுழைந்த அவள் கட்டளைகளுக்காகத் தன் எஜமானரின் முகத்தையே பார்த்தாள். போஸ்ட் மாஸ்டர் சொன்னார்: ‘‘நான் போறதை நினைச்சு கவலையே பட வேண்டாம் ரட்டன். எனக்குப் பின்னால் வர்றவரிடம் உன்னை நல்லா பார்த்துக் கொள்ளும்படி நான் சொல்றேன்.’’ உண்மையான பாசத்துடன் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு பெண்ணின் இதயத்தைப் புரிந்து கொள்வது என்பது சாதாரண ஒரு விஷயம் இல்லையே!

பெரிய அளவில் புகார் என்று இல்லையென்றாலும், தன் எஜமானரிடம் திட்டுகள் வாங்கியிருக்கிறாள். ஆனால், இந்த அன்பான வார்த்தைகளை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் அடக்க முடியாமல் அழுதவாறு சொன்னாள்: ‘‘வேண்டாம்... வேண்டாம்... என்னைப் பற்றி நீங்க யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நான் இங்கே இருக்க விரும்பல...’’

அதைக் கேட்டு போஸ்ட் மாஸ்டர் அமைதியாக இருந்தார். ரட்டனை இந்த மாதிரி இதற்கு முன்பு அவர் பார்த்ததே இல்லை.

புதிதாக வேலைக்கு வந்தவர் உரிய நேரத்தில் வந்துவிட்டார். அவரிடம் போஸ்ட் மாஸ்டர் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, புறப்படுவதற்குத் தயாரானார். புறப்படுவதற்குத் தயாரானார். புறப்படுவதற்கு சற்று முன்பு ரட்டனை அழைத்துச் சொன்னார். ‘‘இந்தா... இதுல உனக்காக ஒரு தொகை இருக்கு. சில நாட்களுக்கு இது உனக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.’’ அவர் தன்னுடைய முழு மாதத்தின் சம்பளத் தொகையிலிருந்து தன் பயணச் செலவுக்காக ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு மீதியை தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து வெளியே எடுத்தார். ரட்டன் அவருடைய கால்களில் விழுந்து அழுதாள். ‘‘அய்யா, நான் கெஞ்சிக் கேட்டுக்குறேன். எனக்கு எதுவும் தராதீங்க. எனக்காக கொஞ்சம் கூட கவலைப்படாதீங்க.’’ அதைக் கூறிய அவள் அங்கிருந்து ஓடி பார்வையிலிருந்து மறைந்தாள்.

போஸ்ட் மாஸ்டர் ஒரு நீண்ட ஒரு பெருமூச்சை விட்டு, தன்னுடைய படுக்கையைக் கையில் எடுத்துக் கொண்டு, குடையை தோளில் வைத்து அவருடைய பல வண்ணங்களைக் கொண்ட தகரத்தலான பெட்டியை ஒரு மனிதன் தூக்கிக் கொண்டு செல்ல, படகை நோக்கி மெதுவாக நடந்தார்.

அவர் போகும் போது, படகு புறப்பட்டுக் கொண்டிருந்தது. மழை நீர் விழுந்து நிறைந்திருந்த ஆறு, பூமியிலிருந்து வந்த நிற்காத கண்ணீரைப்போல தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது. போஸ்ட் மாஸ்டர் தன் இதயத்தில் வலி ஏற்படுவதை உணர்ந்தாள். வாய்விட்டுத் கூறாத மிகப்பெரிய துங்கங்களைக் கொண்ட அன்னை பூமியே வந்து நின்றதைப்போல, தனக்கு முன்னால் வந்து நின்ற கவலைகள் நிறைந்த அந்த கிராமத்துச் சிறுமியின் முகத்தை அவர் நினைத்துப் பார்த்தார். திரும்பிப் போய் உலகம் கைவிட்ட அந்த யாருமற்ற அனாதைச் சிறுமியைத் தன்னுடனே அழைத்துக் கொண்டு வந்துவிடலாமா என்றுகூட அவர் ஒரு நிமிடம் நினைத்தார். ஆனால் காற்று பயணத்திற்கு ஏற்றபடி பலமாக இருந்தது. கொந்தளித்துக் கொண்டிருந்த நீரில் பாதி தூரத்தை அப்போது படகு கடந்து விட்டிருந்தது. கிராமத்தை விட்டு முழுமையாக படகு தாண்டி வந்திருந்தது. கிராமத்திற்கு வெளியே இருந்த சுடுகாடு கண்ணில் தெரிந்தது.

வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருந்த ஆற்று நீரின் மார்பில் பயணித்துக் கொண்டிருந்த பயணி உலகத்தில் கணக்கிட முடியாத சந்திப்புகளுக்கும் பிரிவுகளுக்கும் தத்துவரீதியான விளக்கங்கள் கொடுத்து தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டார். மரணம், நிரந்தர பிரிவு ஆகியவற்றிலிருந்து யாரும் திரும்பி வராத நிலைக்கு அவர் விளக்கங்கள் கூறிக் கொண்டார்.

ஆனால் ரட்டனுக்கு எந்த தத்துவமும் இல்லை. கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அவள் அஞ்சல் நிலையத்தையே சுற்றிக் கொண்டிருந்தாள். தன்னுடைய எஜமான் திரும்பி வருவார் என்று இதயத்தின் மூலையில் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை இப்போதும் அவள் வைத்திருந்தாள். ஆனால் அங்கிருந்து அவள் போகாமலே இருந்தாள். மடத்தனமான மனித இதயத்தைப் பற்றி என்ன சொல்வது?

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பாலம்

பாலம்

June 18, 2012

ஒட்டகம்

ஒட்டகம்

February 23, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel