போஸ்ட் மாஸ்டர்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7115
உலப்பூர் கிராமத்தின் போஸ்ட் மாஸ்டர் என்ற வகையின் தன் வேலைகளை அவர் ஏற்றுக் கொண்டார். அந்த கிராமம் மிகவும் சிறியதாக இருந்தாலும், அதற்கருகில் ஒரு சாயத் தொழிற்சாலை இருந்தது. அதன் உரிமையாளர் ஒரு ஆங்கிலேயர். அவர் எப்படியோ சிரமப்பட்டு அங்கு ஒரு தபால் நிலையம் உண்டாகும்படி செய்துவிட்டார்.
நம்முடைய போஸ்ட் மாஸ்டர் கல்கத்தாவைச் சேர்ந்தவர். அந்தச் சிறிய கிராமத்தில் இருக்கும் போது நீரைவிட்டு வெளியே விட்டெறிந்த மீனைப் போல அவர் உணர்ந்தார். அவருடைய அலுவலகமும் வசிப்பிடமும் இருள் நிறைந்த ஒரு மூங்கிலாலான குடிலுக்குள் இருந்தன. அதற்கு அருகில் எல்லா பக்கங்களிலும் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்த பசுமையான சிறிய குளமொன்று இருந்தது.
சாயத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மனிதர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. சொல்லப்போனால் நாகரீகமான மனிதனுக்கு அவர்கள் நண்பர்களாக இருப்பது என்பது சிரமமான விஷயமே. இன்னும் சொல்வதாக இருந்தால் கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு மனிதன் அவ்வளவு எளிதாக யாருடனும் நட்பு கொண்டு விடமாட்டான். மற்றவர்களுக்கு முன்னால், அவன் கர்வம் கொண்டவனாகத் தெரிவான். இல்லாவிட்டால் பரிதாபப்படும்படி இருப்பான். எது எப்படியோ, போஸ்ட் மாஸ்டருக்கு மிகவும் சிலரே பழக்கமானவர்களாக இருந்தார்கள். அதற்குமேல் அவருக்குத் தேவையும் இல்லை.
சில நேரங்களில் அவர் ஒன்றோ இரண்டோ கவிதைகளை எழுத முயற்சி செய்வார். இலைகளின் சலசலப்பும், வானத்தில் இருக்கும் மேகங்களும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்குப் போதும்- இப்படிப்பட்ட விஷயங்களை அவர் தன் கவிதைகளில் வெளிப்படுத்த முயல்வார். ‘அரேபிய இரவு’களில் நடப்பதைப்போல ஒரே இரவில் மரங்களையும் இலைகளையும் இல்லாமல் செய்து, அதற்குப் பதிலாக அவை ஏதுமற்ற சாலைகள் இருக்கும்படி செய்து, வரிசையாக நின்றிருக்கும் வீடுகளைப் பார்க்க முடியாமல் மேகங்களைக் கொண்டு மறைத்து... இப்படியெல்லாம் நடக்காமல் இருப்பதை அந்த ஏழை மனிதர் தன்னுடைய புதிய வாழ்க்கைக்கு கிடைத்த பரிசாக நினைத்துக் கொள்வார் என்பது கடவுளுக்குத் தெரியும்.
போஸ்ட் மாஸ்டருக்கு சம்பளம் மிகவும் குறைவு. தன்னுடைய உணவை அவரே சமையல் செய்ய வேண்டும். அவர் அதை ரட்டனுடன் பங்கிட்டு உண்பார். அந்த கிராமத்தைச் சேர்ந்த அனாதைச் சிறுமியான ரட்டன் அவருக்குத் தேவைப்படும் சிறு சிறு உதவிகளைச் செய்வாள்.
மாலை நேரங்களில் கிராமத்தின் மாட்டுத் தொழுவங்களில் இருந்து புகை கிளம்பி வந்து ஆக்கிரமித்திருக்கும் போது, புதர்களிலிருந்து பலவித சத்தங்கள் வந்து கொண்டிருக்கும் போது, தினமும் சந்திக்கக்கூடிய இடத்தில் கிராமத்துப் பாடகர்கள் தங்களின் நடுங்கும் குரலில் பாடல்களைப் பாடும்போது, எந்தக் கவிஞனாக இருந்தாலும் மூங்கில் காடுகளுக்குள் அசையும் இலைகளைப் பார்த்து, முதுகில் இனம் புரியாத புத்துணர்ச்சி பரவுவதை உணரும்போது, போஸ்ட் மாஸ்டர் தன் சிறிய விளக்கைப் பற்ற வைத்து, ‘ரட்டன்...’ என்று அழைப்பார்.
ரட்டன் அந்த அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே அமர்ந்திருப்பாள். உடனடியாக உள்ளே வருவதற்கு பதிலாக அவள், என்னைக் கூப்பிட்டீங்களா அய்யா?’ என்று கேட்பாள்.
‘‘நீ என்ன செய்துகிட்டு இருக்கே?’’- போஸ்ட் மாஸ்டர் கேட்பார்.
‘‘அடுப்பைப் பற்ற வைக்கப் போகிறேன்’’ என்று அவள் பதில் கூறுவாள்.
அப்போது போஸ்ட் மாஸ்டர் கூறுவார்: ‘‘ஓ... கொஞ்ச நேரம் கழித்து சமையலறையில் அடுப்பைப் பற்ற வைத்தால் போதும். இப்போ என் பைப்பை முதலில் பற்ற வை.’’
அடுத்த நிமிடம் சதைப் பிடிப்பாக இருக்கும் தன் கன்னங்களுடன் வீட்டிற்குள் நுழையும் ரட்டன் சிகரெட்டைப் பற்ற வைக்க கரிக்கட்டையை ஊதி எரிய வைப்பாள். அந்தச் சமயத்தில் பேசுவதற்கான சந்தர்ப்பம் போஸ்ட் மாஸ்டருக்குக் கிடைக்கும். ‘‘சரி... ரட்டன்...’’ அவர் இப்படித்தான் ஆரம்பிப்பார்: ‘‘உன் தாயைப் பற்றி நீ ஏதாவது நினைவில் வைச்சிருக்கியா?’’ அது ஒரு மறக்க முடியாத விஷயமாக இருக்கும். ரட்டன் பாதி விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருப்பார். மீதி ஞாபகத்தில் இருக்காது. அவளுடைய தாயை விட தந்தைதான் அவள்மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரைப் பற்றி அவள் அதிகமாக நினைத்து பார்த்திருக்கிறாள். அவர் தன் வேலைகளை முடித்து விட்டு மாலை நேரத்தில் வீட்டிற்குத் திரும்பி வருவார். ஒன்றிரண்டு மாலை வேளைகளில் மற்றவர்களை விட அவர் மிகவும் தெளிவாக, ஓவியத்தைப் போல அவளுடைய நினைவில் நின்றிருப்பார். போஸ்ட் மாஸ்டரின் பாதங்களுக்கு அருகில் ரட்டன் தரையில் உட்கார்ந்திருப்பாள். பலவிதப்பட்ட நினைவுகளும் அப்போது அவளைச் சுற்றிக் கொண்டிருக்கும். தனக்கிருந்த தம்பியைப் பற்றியும், கடந்து சென்ற மேகம் சூழ்ந்த ஒருநாளில் குளக்கரையில் அவனுடன் தான் மீன் பிடிக்கச் சென்றதையும், மீன் பிடிக்கும் தூண்டிலுக்கு பதிலாக ஒரு மரக்குச்சியை கையில் வைத்திருந்ததையும் அவள் நினைத்துப் பார்த்தாள். அந்த மாதிரியான சிறு சிறு நிகழ்ச்சிகள் அவளுடைய மனதிலிருந்து பெரிய விஷயங்களை வெளியேற்றின. அவர்கள் பேசப்பேச, பல நேரங்களில் மிகவும் நேரம் ஆகிவிடும். அதற்குப் பிறகு சமையல் செய்வதற்கு போஸ்ட் மாஸ்டர் மிகவும் சோம்பலாக இருப்பதைப்போல் உணர்வார். பிறகு ரட்டன் மிகவும் வேகமாக அடுப்பைப் பற்ற வைத்து, ரொட்டியைச் சூடு பண்ணுவாள். அதைக் காலையில் பண்ணி மீதமிருக்கும் உணவுடன் கலப்பாள். அவர்கள் இரவு சாப்பாட்டுக்கு அதுவே போதும்.
சில மாலை வேளைகளில் வெறுமனே இருக்கும் அந்தப் பெரிய குடிலின் மூலையில் போடப்பட்டிருக்கும் மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு போஸ்ட் மாஸ்டரும் தன்னுடைய வீடு, தாய், சகோதரி ஆகியோரைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியிருப்பார். வீட்டை விட்டு வந்து தனியாக இருக்கும் அவருடைய மனம் அவர்களை நினைத்துக் கவலைப்பட்டது. அவர்களைப் பற்றிய நினைவுகள் அவரை விடாமல் துரத்திக் கொண்டிருந்தன. ஆனால், அந்த விஷயங்களைத் தொழிற்சாலையில் பணிபுரியும் மனிதர்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்க முடியாது. அதே நேரத்தில் அந்த ஏழைச் சிறுமி அருகில் ருக்கும் போது, அவர் அந்த விஷயங்களை மிகவும் ஆழமாக நினைத்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் அம்மா, சகோதரன், சகோதரி என்று அவருடைய வீட்டு உறுப்பினர்களை மிகவும் உரிமையுடன் ஏதோ இதற்கு முன்பே தனக்கு அவர்களைத் தெரியும் என்பது மாதிரி அவள் குறிப்பிடுவாள். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தன்னுடைய சின்னஞ்சிறு இதயத்தில் ஒரு முழுமையான படத்தை வைத்திருந்தாள்.