போஸ்ட் மாஸ்டர் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7115
ஒரு மதியப் பொழுதில் மழை பெய்து சற்று ஓய்ந்திருந்த நேரத்தில் குளிர்ச்சியான காற்று வீசிக் கொண்டிருந்தது. சுட்டெரித்துக் கொண்டிருந்த வெயிலில் ஈரமான புற்கள், இலைகள் ஆகியவற்றின் வாசனை, களைப்படைந்து போயிருக்கும் பூமியின் வெப்ப மூச்சை ஒருவரின் உடல்மீது கொண்டு வந்து விடுவதைப்போல இருந்து. பகல் நேரம் முழுவதும் ஓய்வே இல்லாத ஒரு பறவை இயற்கையைப் பற்றிய மனக் குறையைக் கூறியவாறு பறந்து கொண்டிருந்தது.
போஸ்ட் மாஸ்டருக்கு செய்வதற்கு எந்த நேலையும் இல்லை. நன்கு கழுவி விடப்பட்ட இலைகளையும், மீதமிருந்த மழை மேகங்களையும் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, அவருக்கு வேறு வழியில்லை. போஸ்ட் மாஸ்டர் அவற்றைப் பார்த்துக் கொண்டே தனக்குள் சிந்தித்தார். ‘என்னதான் நூறு உள்ளங்கள் அருகில் இருந்தாலுள், ஒரு அன்பான மனித உயிரைத்தான் என் உள்ளத்திற்கு அருகில் வைத்திருக்கிறேன்!’ தொடர்ந்து அவர் அந்தப் பறவை என்ன சொல்ல நினைக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். முணுமுணத்துக் கொண்டிருப்பதும், கூற நினைப்பதும் அதே உணர்வுகளைத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். மிகவும் குறைவான சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிராமத்து போஸ்ட் மாஸ்டர் தன் வேலைக்கு மத்தியில் கிடைத்த அமைதியான- ஆழமான நடுப்பகல் வேளையில் அதே மாதிரியான சிந்தனை ஓட்டத்தில் இருப்பார் என்பதை யாரும் தெரிந்திருக்க மாட்டார்கள். யாரும் நம்பவும் மாட்டார்கள்.
போஸ்ட் மாஸ்டர் மிகவும் களைப்படைந்து ‘ரட்டன்...’ என்று அழைத்தார். ரட்டன் அப்போது கொய்யா மரத்திற்கு அருகில் அலைந்து கொண்டிருந்தாள். கொய்யாக் காய்களை தின்பதில் அவள் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள். தன்னுடைய எஜமானின் குரல் கேட்டவுடன் மூச்சைக்கூட ஒழுங்காக விடாமல் ஓடிய அவள் ‘‘நீங்க என்னை கூப்பிட்டீங்களா அய்யா?’’ என்றாள். ‘‘நான் நினைச்சேன்’’- போஸ்ட் மாஸ்டர் சொன்னார்: ‘‘உனக்கு படிக்கிறதுக்கு சொல்லித் தரலாம்னு.’’ அதற்குப் பிறகு பிற்பகலில் அவளுக்கு அவர் எழுத்துக்களைக் கற்றுத் தந்தார்.
அந்த வகையில் மிகவும் குறைவான கால அளவில் ரட்டன் முடிந்த வரையில் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக் கொண்டாள்.
மழை பெய்வது நிற்பது மாதிரி தெரியவில்லை. வாய்க்கால்கள், பள்ளங்கள், வெற்றிடங்கள் அனைத்தும் நீரால் நிறைந்து வழிந்தன. இரவு, பகல் எந்நேரமும் மழைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. தவளைகளின் சத்தங்களும்தான். கிராமத்து சாலைகள் நடக்க முடியாத அளவிற்கு ஆயின. எல்லா பொருட்களும் படகுகள் மூலம்தான் போய்க் கொண்டிருந்தன.
நிறைய மேகங்கள் சூழ்ந்திருந்த ஒரு காலை வேளையில் போஸ்ட் மாஸ்டரின் இளம் மாணவி அவருடைய அழைப்பை எதிர்பார்த்து கதவுக்கு வெளியே நீண்ட நேரமாக காத்திருந்தாள். எப்போதும் ஒலிப்பதைப் போல அவருடைய குரல் ஒலிக்கவில்லை. ஆனால் அவள் தன்னுடைய நாயின் காதைப் படமாகப் போட்ட புத்தகத்தை எடுத்துக் கொண்டு மெதுவாக அறைக்குள் நுழைந்தாள். அவளுடைய எஜமானர் தன்னுடையபடுக்கையில் கால்களை நீட்டியபடி படுத்திருப்பதை அவள் பார்த்தாள். அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாக அவள் நினைத்தாள். விரல் நுனியில் என்ன செய்வது என்று தெரியாமல் அவள் நின்று கொண்டிருந்தபோது, அவர் ‘‘ரட்டன்’’ என்று பெயர் சொல்லி அழைப்பது அவளுடைய காதுகளில் விழுந்தது. உடனடியாக திரும்பிய அவள் ‘‘நீங்க தூங்கிக்கிட்டு இருந்தீங்களா அய்யா?’’ என்று கேட்டாள். அதற்கு போஸ்ட் மாஸ்டர் பலவீனமான குரலில் சொன்னார்: எனக்கு உடல்நலம் சரியில்லை. என் கை ரொம்பவும் சூடாக இருக்கு.’’
வீட்டை விட்டு வெளியே இருக்கும் தனிமையான சூழ்நிலையில் மழை உண்டாக்கியிருக்கும் இருட்டில், அவருடைய வேதனை நிறைந்த உடம்பை கவனத்துடன் பார்த்துக் கொள்ள யாராவது தேவைப்பட்டது. ஒலித்துக் கொண்டிருக்கும் வளையல்களைக் கொண்ட மென்மையான கைகள் தன்னுடைய நெற்றியைத் தொடும் காட்சியை அவர் நினைத்துப் பார்த்தார். தன்னுடைய தாயும் சகோதரியும் பாசத்திற்குரிய பெண்களாக தனக்கு அருகில் இருப்பதை அவர் கற்பனை பண்ணிப் பார்த்தார். வீட்டை விட்டு வெளியே இருப்பது அவருக்கு ஏமாற்றத்தைத் தரவில்லை. ரட்டன் இப்போது சிறுமியாக இருக்கவில்லை. அவள் உடனடியாக தாயின் இடத்தைப் பிடித்துக் கொண்டு, கிராமத்து டாக்டரை அழைத்துக்கொண்டு வந்தாள். சரியான வேளைகளில் நோயாளிக்கு மாத்திரைகளை கொடுத்தாள். தலையணைக்கு அருகில் இரவு முழுவதும் உ?ட்கார்ந்திருந்தாள். அவருக்கு கஞ்சி தயாரித்து கொடுத்தாள். அவ்வப்போது அவரைப் பார்த்து, ‘‘இப்போ பரவாயில்லையா அய்யா?’’ என்று கேட்டாள்.
தான் படுத்திருந்த நோயாளி படுக்கையை விட்டு எழுந்திருப்பதற்குச் சற்று முன்னால் போஸ்ட் மாஸ்டர் தனக்குள் கூறிக் கொண்டார்: ‘‘இதற்கு மேலும் இங்கே இருந்தால் சரியாக இருக்காது. நான் இங்கிருந்து வேறு இடத்திற்குப் போனால்தான் சரியாக இருக்கும்.’’ உடனடியாக அவர் இடமாற்றம் கேட்டு கல்கத்தாவிற்கு மனு ஒன்றை அனுப்பினார். கிராமத்தில் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டியிருந்தார்.
நோயாளியை அருகில் நர்ஸைப்போல பார்த்துக் கொண்டிருந்த தன் வேலையிலிருந்து விடுபட்ட ரட்டன் திரும்பவும் கதவுக்கு வெளியே தன்னுடைய பழைய இடத்தில் போய் உட்கார்ந்தாள். ஆனால், அந்தப் பழைய அழைப்புச் சத்தத்தை அதற்குப் பிறகு அவள் கேட்கவே இல்லை. சில நேரங்களில் போஸ்ட் மாஸ்டர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாரா அல்லது படுக்கையில் கால்களை நீட்டிக்கொண்டு படுத்திருக்கிறாரா, இல்லாவிட்டால் தன்னை மறந்து காற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாரா என்பதை அவள் திருட்டுத் தனமாக தலையை நீட்டிப் பார்ப்பாள்., தன்னை அவர், அழைக்கமாட்டாரா என்று ரட்டன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, போஸ்ட் மாஸ்டர் தன்னுடைய விண்ணப்பத்திற்கு பதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அந்தச் சிறுமி தன்னுடைய பழைய பாடங்களையே திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்தாள். அவருடைய பயம் இப்போது குறைந்து விட்டிருந்தது. அவர் அவளை அழைக்கும்போது எழுதுவது, படிப்பது இரண்டிலும் அவள் முன்னேறியிருப்பதை அவரால் தெரிந்து கொள்ள முடியும். கடைசியாக ஒரு வாரத்திற்குப் பிறகு, ஒரு மாலை நேரத்தில் அவளுக்கு அழைப்பு வந்தது. இதயம் உற்சாகத்தில் மிதக்க, ரட்டன் அறைக்குள் நுழைந்து கேட்டாள்: ‘‘என்னைக் கூப்பிட்டீங்களா அய்யா?’’
போஸ்ட் மாஸ்டர் சொன்னார்: ‘‘நான் நாளைக்குப் போகப் போறேன் ரட்டன்.’’
‘‘எங்கே போறீங்க அய்யா?’’
‘‘நான் வீட்டுக்குப் போகப் போறேன்.’’
‘‘எப்போ திரும்பி வருவீங்க?’’
‘‘நான் திரும்பி வரமாட்டேன்.’’