நம்முடைய இதயங்கள் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7564
‘‘ம்... நான் சொன்னப்போ நீங்க நம்பல...’’
‘‘நம்பாம இல்ல...’’
‘‘பிறகு...?’’
நான் விஷயத்தை மாற்றினேன். நான் கேட்டேன்:
‘‘தேவி, இந்தக் கைக்குட்டை யாருக்கு?’’
‘‘தேவனுக்கு...’’- அவள் கடைக் கண்களால் என்னைப் பார்த்தாள். என் கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டது. எனக்குள்ள ஒரு பதைபதைபப்பு உண்டானது. அவள் பக்கத்துல வந்தாள்.
‘‘மனோகர், சொல்லுங்க...’’
‘‘தேவி, நான் காதலிக்கிறேன்...’’
‘‘யாரை?’’
‘‘உன்னை.’’
‘‘அதற்கா அழுகை?’’
அவள் சிரித்தாள்.
‘‘தேவி, நான் போறேன்.’’
‘‘எங்கே?’’
‘‘ரொம்பவும் தூரத்துல இருக்குற ஏதாவதுதொரு இடத்துக்கு...’’
‘‘என்னை இங்கே விட்டுட்டா?’’
‘‘ஆமா... நீ என்னைக் காதலிக்கல.’’
அவள் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். ஊசி முனையால் விரலைக் குத்தி ஒரு துளி ரத்தத்தை வெளியேற்றி, அதை அந்தக் கைக்குட்டையில் ஒற்றினாள். நான் சொன்னேன்:
‘‘தேவி, நான் ஒரு பொய் சொல்லிட்டேன்.’’
‘‘என்ன சொல்றீங்க?’’
நான் உண்மையைச் சொன்னேன்: ‘‘நான் ஒரு முஸ்லிம்மான். என் பேரு ஹமீது...’’
இடி விழுந்ததைப் போல அவள் அதிர்ச்சியடைந்தாள். அவளின் முகம் தாளைப் போல வெளிறிப்போனது. பதைபதைப்புடன் அவள் என்னைப் பார்த்தாள்.
‘‘ஹ... மி... து... முஸல்... மான்...!’’
நிலைகுலைந்து அவள் சுவர் மீது சாய்ந்து நின்றாள். என் அழிவை எதிர்பார்த்து தலையில கையை வச்சு நான் கீழே உட்கார்ந்தேன். வேதனையுடன் நிமிடங்கள் ஒன்று, இரண்டு, மூன்றுன்னு நகர்ந்து கொண்டிருந்தது. வெந்து புகைந்து கொண்டிருந்த யுகங்கள் நிறைய கடந்ததைப் போல எனக்கு இருந்தது. என் கன்னத்தை இரண்டு கைகள் தொட்டன. கண்ணீரில் நனைந்த என்னுடைய முகம் உயர்ந்தது. தேவியின் முகத்தில் கொஞ்சம்கூட இரத்தம் இல்லை. எங்களுடைய கண்கள் ஒன்றையொன்று பார்த்தன. தேவி பதைபதைப்பான குரலில் சொன்னாள்: ‘‘யாராக இருந்தாலும் நான் உங்களைக் காதலிக்கிறேன்....’’
சூரியன் உதிக்கும் புலர்காலைப் பொழுதைப்போல மறுநாள் அவள் வந்தாள். அந்த அளவிற்கு இதய மோகினியாக தேவி அதற்கு முன்பு நான் பார்த்ததே இல்ல. அவள் சிரித்தாள். ‘‘இந்தாங்க... உங்களக்கு ஒரு பரிசு’’- ரத்தம் படிந்த கைக்குட்டையில் அவளுடைய புகைப்படம்! அதை என் மடியில வச்சப்போ, கண்ணீர்த் துளிகள் அதன் மீது விழுந்தன. மடியில வச்சிருந்த மலர்களை அவள் எடுத்தாள். ‘‘இந்தாங்க.. இதையும்...’’ புகைப் படத்தில் மலர்களை வைத்துவிட்டு பைத்தியம் பிடித்தவளைப் போல அவள் சிரித்தாள். அவள் கேட்டாள்: ‘‘நான் இறந்துட்டா, நீங்க என்ன செய்வீங்க?’’
எதுவும் சொல்லாமல் நான் அதை என் முகத்தில் வைத்து அழுத்தினேன். கண்களைத் திறந்தபோது அவள் போய்விட்டிருந்தாள். அன்னையில இருந்து தேவியிடம் பெரிய மாற்றம் மாறுதல், இதயத்தில் நெருப்பு அணைந்து போனதைப் போல அவளின் முகத்திலிருந்து ஒளி குறைந்து போயிருந்தது. இரண்டு வாரங்களில் படுக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு அவள் ஆயிட்டா. நோய்க்கான காரணம் என்னன்னு டாக்டர்களால்கூட கண்டுபிடிக்க முடியல. அந்தந்த நேரத்துக்கு மருந்துகள் தந்தேன். நான் அறையிலேயே இருந்து அவளைப் பத்திரமா பார்த்துக் கொண்டேன். இரவு ரொம்ப நேரம் ஆச்சு. எல்லாரும் தூக்கத்துல இருந்தாங்க. அந்தத் தளர்ந்துபோன கைகள் உயர்ந்தன. வெளிறிப் போன உதடுகள் மெதுவாக முணுமுணுத்தன.
‘‘ஹமீது!’’
‘‘என்ன தேவி?’’
‘‘நான்இறந்துட்டா, நீங்க என்னை நினைப்பீங்களா?’’
‘‘என் தேவி, நீ இறக்க மாட்டே. சீக்கிரம் நீ நல்லாயிடுவே....’’
எங்களின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. நான் அந்த முகத்தை நோக்கிக் குனிந்தேன். அந்தக் கைகள் என் கழுத்தைச் சுற்றி வளைத்தன. நாங்கள் மறந்துவிட்டோம். அழகான ஒரு புன்னகை. தேவி சுக நித்திரையில் ஆழ்ந்தாள். நான் விளக்கின் திரியை இறக்கினேன்.
மறுநாள் சாயங்காலம் தேவியின் உடல் எரியூட்டப்பட்டது.
புகை வண்டியின் கம்பார்ட்மெண்டில் அமர்ந்து கதயைக் கேட்டவர்கள் அந்த இளைஞனையே வெறித்துப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவர் கேட்டார்:
‘‘பிறகு?’’
அதற்கு அவன் பதிலெதுவும் கூறவில்லை.
கூறுவதற்கு என்ன இருக்கிறது?