நம்முடைய இதயங்கள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7564
இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் மேஜை மேல ஒரு பாக்கெட் சிகரெட் இருக்கும் எனக்கே தெரியாமல், அது அங்கே இருக்குறதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் தோணாம இல்ல. அதை அங்கு கொண்டு வந்து வச்சது அவள்தான்!
நிறைய சாப்பிட்டு, நான் மந்தமாக உட்கார்ந்திருந்தேன். சிகரெட் இல்ல. நண்பன் வந்தாதான் பணம் கிடைக்கும். அந்த வெறி பிடித்த சூழ்நிலையில் அவளின் வாசனை... தேவி ஜன்னல் வழியா என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கள்ளங்கபடமில்லாமல் தேவி கேட்டாள்:
‘‘மனோகர், என்ன கவலையில இருக்கீங்க?’’
‘‘ஓண்ணுமில்லையே?’’
‘‘ஆனா, முகம் ரொம்பவும் வாட்டமா இருக்கே?’’
‘‘அதுவா?’’
‘‘ம்...’’- புன்னகைத்தவாறு அவள் கட்டாயப்படுத்தினாள்.
‘‘சொல்லுங்க, மனோகர்! உங்கக் கவலைக்குக் காரணம் என்ன?’’
‘‘கவலைக்குக் காரணம்- கொஞ்சம் பணம்தான்.’’
‘‘எவ்வளவு?’’
‘‘ஐம்பது ரூபாய்’’
‘‘ஐம்பது ரூபாய்...’’- மெதுவான குரலில் அவள் சொல்லிவிட்டு மறைந்து போனாள். கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு சின்ன துணிப் பொட்டலம் கனமாக என் மடியில வந்து விழுந்தது. ‘‘என்கிட்ட இவ்வளவுதான் இருக்கு. சாயங்காலம் அப்பா வந்தபிறகு...’’- இப்படிச் சொல்லிவிட்டு அவள் ஓடிட்டா. நான் அதைப் பிரிச்சுப் பார்த்தேன். ஒரு சின்ன கைக்குட்டை அதுல நாணயங்களாக ஐந்து ரூபாய்!
மூணு அணாவுக்கு (பதினெட்டு பைசா) ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினேன். நண்பன் வந்தப்போ மூணு அணாக்கள் வாங்க, அதை ஐந்து ரூபாய் நோட்டாக மாற்றி ஒரு புத்தகத்துக்குள்ளே வச்சு நான் கொடுத்தேன். கொஞ்ச நேரம் போனவுடன் அவள் வந்தாள். பன்னீர் மலரைப் போல அழகா இருக்குற முகம் ரொம்பவும் சிவந்து போயிருந்தது. நான் சொன்னேன்:
‘‘எனக்கு வேழ வழியில பணம் கிடைச்சது.’’
அவளுடைய குரல் இடறியது. அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள். ‘‘நான் தந்தது... எனக்கு அது திரும்பவும் வேண்டாம்...’’
வழக்கத்திற்கு மாறாக ஒரு அதிகாலை வேளையில் சட்டையே இல்லாமல் நான் குளியலறைக்குள்ளே போனேன். அன்னைக்குச் சாயங்காலம் தேவி கேட்டாள்:
‘‘மனோகர், நீங்க ஏன் பூணூல் போடல?’’
‘‘அதுவா?’’ நான் சிறிது தடுமாறினேன். ‘‘எங்க ஊர்ல குயவர்கள் கூட பூணூல் போடுவாங்க. பூணூல் போடுறதுதான் பிராமணனுக்கு அடையாளமா?’’
‘‘பிறகு?’’
‘‘ஓருவனின் சிந்தனை, அவனின்செயல்கள்- இவைதான் பிராமணனுக்கு அடையாளங்கள். என் நெஞ்சைப் பிளந்து பார்த்தால் தெரியும்- ‘ஓம்’ என்று எழுதப்பட்டிருக்கும் இதயத்துக்கு மேலே ஒரு பூணூல்! தேவி, நீ அதைப் பார்க்கணுமா?’
‘‘வேண்டாம்... வேண்டாம்...’’- மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே அவள் அழகுச் சிலையென பால்கனி தளத்தில் நின்னுக்கிட்டு இருந்தாள். நூற்றுக்கணக்கான மின்விளக்குகள் அதிர்ந்து பிரகாசித்தன. நான் கேட்டேன்:
‘‘தேவி, நீ என்னைக் காதலிக் கிறியா?’’
அதற்குப் பதில் என்பது மாதிரி அவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். நான் இன்னும் கொஞ்சம் நெருங்கிப் போனேன்.
‘‘தேவி...’’
‘‘ம்....’’
‘‘சொல்லு...’’
‘‘உங்களுக்குத் தெரியதா?’’
‘‘ஆனால்...’’
‘‘என்ன ஆனால்?’’- அவள் பதறிப்போய்க் கேட்டாள்.
‘‘நான் ஒரு சாதாரண மனிதன்.’’
‘‘நான் ராஜகுமாரி ஒண்ணும் இல்லையே!’’
‘‘ஆமாம்...’’
‘‘ஆமாமா?’’
கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரோஜா மலர் மலர்ந்து கொண்டிருந்தது. அதன் புது நறுமணத்திற்காக ஏங்கி ஏங்கி என் இதயம் நெருங்கி, அதற்குள் ஆழமாகச் செல்ல அவசரப்பட்டது. என் உள்ளங்கையில் இருக்குற ரோஜா மலர், விரல்களைக் கொஞ்சம் நெருங்கினால், மென்மையான இதழ்கள் கசங்கி, நிரந்தரமாக அது முடிவுக்கு வந்திடும். ஆனால் முழுமையடைந்து, நிறைந்து ததும்பி இருக்கும் இனிய, அழகான அந்தத் தோற்றம்... அதை மனதில் நினைக்கும்போது என்னால் எதையும் தெளிவா சிந்திக்கவே முடியல...
நள்ளிரவு நேரம் தாண்டியிருக்கும் இரண்டாவது யாமம். கண்ணாடி ஜன்னல் வழியாக நிலவொளி உள்ளே விழுந்து கொண்டிருந்தது. நண்பன் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான். பக்கத்து அறையில் மாயாதேவி. அவளுக்குப் பக்கத்தில் அவளோட தாயும், தந்தையும் பாடிஸ் மட்டும அணிந்து கூந்தலுக்குக் கீழே தன் கையை வைத்து தேவி கனவு கண்டு கொண்டிருக்கலாம்.
உடல் பயங்கரமாக வலித்தது. நான் எழுந்து உட்கார்ந்தேன். பிரபஞ்சம் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தது. நான் மெதுவாக இருமினேன். அதற்குப் பதில் என்பது மாதிரி பக்கத்து அறையில இருந்து ஒரு இருமல் சத்தமும் நீண்ட பெருமூச்சும் கேட்டது. என் இதயத்துல நெருப்புப் பற்றியதைப் போல அப்போ இருந்தது. நான் எழுந்தேன். வாசல் கதவு எங்கோ தூரத்துல இருக்குறது மாதிரி இருந்தது. என் கைகளும், கால்களும் நடுங்கின. கதவைத் தொட முடியல. நெருப்பால் உண்டாக்கப்பட்டதா என்ன? என் இதயத் துடிப்புதான் அங்கேயிருந்தும் கேட்குதா? எனக்குள் என்னவோ உடைஞ்சது மாதிரி இருந்தது. கதவில் கையை வைத்தேன். ‘‘கிர்... கிர்... கிர்...’’ - வாசல் கதவு திறந்தது. ‘‘கிர்... கிர்ர்....’’ - வானமும் பூமியும் நடுங்குற அளவுக்குப் பயங்கரமான சத்தம்! எல்லா உலகங்களும் என்னை வெறித்துப் பார்த்தன. பற்றி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு வளையத்திற்குள் நான்... கண்களால் பார்க்க முடியல. மூச்சு அடைத்தது. திறந்ததைப் போலவே நான் கதவை அடைத்தேன். ஜன்னலைத் திறந்துவிட்டேன். ஹாவ்! அமைதியான நிலவு வெளிச்சத்தில் உறங்கிக் கொண்டிருக்கும். பரந்துகிடக்கும், விசாலமான நகரம்! மெதுவாக வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்று... பல விஷயங்களையும் யோசித்து குமைந்து கொண்டிருந்த தலையை வெளியே நீட்டி நான் பார்த்தவாறு நின்னுக்கிட்டு இருந்தேன்.
இதயம் வெந்துக்கிட்டு இருந்தது. எல்லாத்தையும் நான் சொல்லி ஆகணும். வாய்விட்டு உரத்த குரல்ல அழணும் போல எனக்கு இருந்தது. அங்கேயிருந்து தூரத்தை நோக்கி நான் போகணும். நான் உயிருடன் இல்லாமல் போயிருந்தால்...! மரணம்! ஆமாம்... என் காதல் தேவதையின் கையால் நான் சாகணும்!
நான் போனேன். வானவில் வெளிச்சத்தில் போர்த்தப்பட்ட குளிர்கால நிலவு உதயமாவதைப் போல தேவி நின்று கொண்டிருந்தாள். வெளிச்சத்தில் மூழ்கியிருக்கும் மேற்கு வான விளிம்பு... சிவப்புப் பட்டு நூல் இரத்தக் கோடு போட்டு வெள்ளை நிற கைக்குட்டையில் ஓடிக்கொண்டிருக்கு. அதில் ‘னீணீஸீஷீ...’ என்பது வரை ஆங்கிலத்தில் பின்னப்பட்டிருக்கு. ஊசி முனை மஞ்சள் நிறத்தில் பிரகாசிக்கிறது. என்னைப் பார்த்ததும் அவள் கைக்குட்டையை மறைத்தாள். பிறகு மெல்லிய புன்சிரிப்புடன் கேட்டாள்:
‘‘மனோகர், அப்பாக்கிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க?’’
‘‘என் காஷ்மீர் பயணத்தைப் பற்றி...’’
‘‘அப்பா என்ன சொன்னாரு?’’
‘‘அங்கே இப்போ கடுமையான குளிர்காலம்னு சொன்னாரு.’’