
"உண்மையிலேயே புரட்சிதான். அதாவது சரிநிகர் சமத்துவம்."
"அறிவு, அழகு, பலம் எல்லாமே சமத்துவமா இருந்தா உண்மையிலேயே நல்லதுதான். அதுக்கு முன்னாடி சுஹாசினி... உன்னைத் தூண்ல கட்டி வச்சுத் தொடையில 12 அடிகள் தரணும். அடிபட்ட இடத்துல மிளகையும் உப்பையும் அரைச்சுத் தேய்க்கணும்."
"பார்க்குறப்போ அந்த அளவுக்குக் கடின இதயம் உள்ள ஆளாத் தெரியலியே!"
"நான் ஒரு பாவப்பட்ட மனுஷன்"
"பிறகு எதற்கு என்னை அடிச்சுக் கொல்லணும்னு சொன்னீங்க?"
"உலகத்துல இருக்கிற எல்லோருக்கும் வீடும், உணவும், ஆடைகளும் வேணும். வாழ்க்கை மொத்தத்துல சமத்துவமாகவும் அழகாகவும் இருக்கும்னு சொல்ல முடியுமா என்ன? இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் எது சமத்துவம்? எது அழகு? சுஹாசினி, உன்னைப் போல பெண் உலகம் அழகானதா என்ன? கோணப் பார்வை உள்ளவளும், பல்லு நீண்டவளும், அழகில்லாத முகத்தைக் கொண்டவளும் இங்கு இருக்கத்தானே செய்கிறார்கள்!"
"அதையெல்லாம் சரி பண்ணிடலாமே! ப்ளாஸ்டிக் சர்ஜரி இருக்கே!"
"இருக்குல்ல... அறிவையும், பலத்தையும், அழகையும் ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம்..."
"பயங்கரமான எண்ணம்..."
"நிச்சயமா. சர்வதேச அளவு கற்பனை இல்ல... சாதாரண கற்பனைதான்..."
"சரி... நான் போய் உங்க மனைவியைக் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன். அவுங்க என்னைக் கொல்லுவாங்களா என்ன?"
சுஹாசினி உள்ளே போனாள். காற்றினிலே வரும் கீதத்தை மீண்டும் ஆரம்பத்திலிருந்து வைத்தேன். அது முடிந்தபோது சுஹாசினி வந்தாள்.
"அவங்க ரொம்ப நல்லவங்க.... எனக்குப் பிடிச்சுப் போச்சு. சாப்பாட்டுல உப்பு பார்க்கச் சொன்னாங்க. ஒரு துண்டு இறைச்சியையும் ஒரு துண்டு உருளைக்கிழங்கையும் தந்தாங்க. இறைச்சியையும் ரொட்டியையும் இங்கே கொண்டு வந்து தருவாங்க. எனக்கும் தருவாங்க. நல்லா சமைச்சிருக்காங்க."
"நீ ஒரு சாப்பாட்டுப் பிரியைன்னு தெரியுது!"
"நான் வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாதவ. அதே நேரத்துல நான் ஒரு இலக்கியவாதியும் கூட. நல்லா மேடை ஏறிப் பேசுவேன். என்னோட திறமைகள் எல்லாத்தையும் அவங்கக்கிட்டே சொன்னேன்."
"அப்போதான் உனக்கு உப்புப் பார்க்க தந்தாங்களா?" - நான் கேட்டேன்:" இலக்கியவாதின்னு சொன்னது...?"
"கவிதை எழுதுவேன். நிறைய எழுதி இருக்கேன். சிறுகதைகளும் நாவலும் எழுத எண்ணம் இருக்கு. என்னோட கவிதை - என்னோட காதலன்" என்று சொன்ன சுஹாசினி தலையைச் சாய்த்துப் புன்னகைத்தவாறு பார்த்தாள்.
"நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? வெறும் சாதாரணக் காதல் இல்ல. படு அழகான காதல். அந்த அளவுக்கு உங்களைக் காதலிக்கிற அந்தப் பெண்ணை நீங்கள் கல்யாணம் பண்ணிப்பீங்களா? அந்தப் பெண்ணை மனைவியா ஆக்கிக்குவீங்களா?" - சுஹாசினி கேட்டாள்.
"அந்தப் பெண் யார்?"
"இதோ முன்னாடியே நிற்கிறேனே! நான் தான் - சுஹாசினி!"
அவள் சொன்னதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சி ஒன்றும் உண்டாகவில்லை. மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. காற்றினிலே வந்த கீதம்! இதை 60 வருடத்திற்கு முன்னால் நான் கேட்டிருக்க வேண்டும். காற்றில் தவழ்ந்து வந்த இனிய கீதமே நமஸ்காரம்! கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு இடத்திலிருந்தே நீ வந்தாய். எங்கோ போகவும் போகிறாய். இந்த யாத்திரை சுகமான யாத்திரையாக அமையட்டும். சுஹாசினி, உன் இந்த யாத்திரை சுகமான ஒரு யாத்திரையாக அமையட்டும்.
"பிரியமுள்ள சுஹாசினி... உன் வயது பத்தொன்பது. எனக்கு வயது எண்பதுக்கு மேலே. உடல்ரீதியாகத் தளர்ந்தவன், நோயாளி... புரியுதா? எந்த நேரத்திலும் நான் இறக்கலாம். பிரியமான பெண்ணே, கருணை வடிவமான தெய்வம் எல்லா வசதிகளையும் தந்து உனக்கு அருள் புரியட்டும்."
அப்போது மனைவி இரண்டு பிளேட்டையும், ரொட்டியையும், இறைச்சியையும் எடுத்துக்கொண்டு வருகிறாள். தொடர்ந்து தண்ணீரும், தேநீரும்.
இரண்டு பிளேட்டுகளில் இறைச்சியை எடுத்து, ரொட்டியையும் வைத்து இரண்டு பேரும் சாப்பிட்டோம். தண்ணீர் குடித்தோம். கை கழுவினோம். தேநீர் அருந்தினோம். பாத்திரங்களை எடுத்துக் கொண்டு மனைவி போனாள்.
சுஹாசினி சொன்னாள்:
"எனக்கு ஒரு புத்தகம் தரணும்."
"கடிதம் தர்றேன். எல்லாப் புத்தகங்களையும் புத்தகக் கடைசியில் வாங்கிக்கோ- காசு எதுவும் இல்லாமல்."
"புத்தகங்கள் எல்லாம் என்கிட்ட இருக்கு. ஒரே ஒரு புத்தகத்தில "அன்புடன் சுஹாசினிக்கு"ன்னு எழுதி கையெழுத்துப் போட்டுத் தரணும்."
"அதே மாதிரி எழுதி புத்தகத்தைத் தபால்ல அனுப்பி வைக்கிறேன்."
"வேண்டாம். நான் வருவேன். வர்றப்போ உங்களுக்குப் பிடித்தமானது எதுவோ, அதை நான் கொண்டு வர்றேன்."
"சுஹாசினி... நீ இங்கே வந்தாலே போதும். வர்றதுக்கு முன்னாடி கார்டு போடணும்."
சுஹாசினியின் கண்களில் இருந்து இரண்டு துளி கண்ணீர் புறப்பட்டு வழிந்தது.
"நான் அவங்கக்கிட்ட சொல்லிட்டு வந்திர்றேன்."
சிறிது நேரத்தில் வந்து சொன்னாள்:
"சொல்லுங்க. உங்களுக்கு என்ன பிடிக்கும்? நான் வர்றப்போ கொண்டு வர்றேன்."
"சுஹாசினி அருகில் வந்து நின்றாள். அப்போது அவளை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு, ஆசை தீரும் வரை முத்தங்கள் தர வேண்டும் போல் இருந்தது.
வலது கையை சுஹாசினியின் தலையில் வைத்தவாறு சொன்னேன்:
"எல்லா வசதிகளையும் தந்து தெய்வம் உனக்கு அருள் செய்யட்டும், சுஹாசினி...!"
இரண்டு பாதங்களையும் தொட்டு தலையில் வைத்தவாறு "நான் வருவேன்" என்று கூறியவாறு புறப்பட்டாள் சுஹாசினி. அவளின் இனிய "கம கம" வாசனை!
"குஸர்கயா லோ எஸமானா கைஸா கைஸா” - பங்கஜ் மல்லிக்கின் இனிய குரல் காற்றில் தவழ்ந்து வந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook