
மாலை நேரம் மறைந்து நிலவு சிரிக்கத் தொடங்கியது. நான் மரத்தின் மேலேயே உட்கார்ந்திருந்தேன். மனிதர்கள் உறங்குவது வரை நான் மரத்தை விட்டு கீழே இறங்கவில்லை.
நிலவு நடு வானத்திற்கு வந்த வேளையில் நான் மரத்திலிருந்து கீழே இறங்கினேன். சுற்றிலும் ஒரே மயான அமைதி. இரு பக்கங்களிலும் மரங்கள் அடர்ந்ததும், நிலவு ஒளி வீசிக் கொண்டிருந்ததுமான அகலமான சாலை வழியே நான் நடந்து சென்றேன். வழியில் பார்த்த ஒரு வீட்டில் கூட வெளிச்சம் கிடையாது. காதுகளைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக் கொண்டு, மிகவும் எச்சரிக்கையுடன் நான் நடந்தேன். பயமொன்றும் தோன்றவில்லை. இருந்தாலும், மனதில் ஒரு சிறிய சலனம் இருக்கவே செய்தது. நள்ளிரவு நேரம்... மனிதர்கள் எல்லோரும் உறங்கி விட்டனர். நிலவு காய்ந்து கொண்டிருக்கும் பெரிய சாலை. நான் மட்டும் தன்னந்தனியாக.
மூன்று மைல் தூரம் நடந்திருப்பேன். ஒரு வளைவில் திரும்பியபோது நான் அந்தக் கோவிலின் கொடி மரத்தை நிலா வெளிச்சத்தில் பார்த்தேன். கொடி மரம் தங்க நிறத்தில் தகதகத்தது.
நான் நடந்து கோவில் முன் போய் நின்றேன். அப்போது நான் ஒரு காட்சியைக் கண்டேன். பயப்படக் கூடிய காட்சி அல்ல அது. இரக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் இது. நான் இருந்த இடத்தில் இருந்து சுமார் பத்து அடித் தூரத்தில் ஒரு ஆள் மண்ணில் புரண்டு கொண்டிருந்தார். வெள்ளை ஆடை அணிந்திருந்தார். வயது முப்பத்தைந்து இருக்கும்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னைப் போல ஆதரவில்லாத மனிதராக இருக்க வேண்டும். வழிப் போக்கனாக இருக்கலாம். ஏதாவது உதவி தேவைப்பட்டால், செய்யலாமே! என்ன உதவி இவருக்குத் தேவைப்படும்?
"உங்களுக்கு என்ன வேணும்?" - நான் கேட்டவாறு அவருக்குப் பக்கத்தில் போனேன். கீழே மெல்ல அமர்ந்தேன். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. அப்போதும் என் மனதில் பயம் தோன்றவில்லை. பயப்படுவதற்கு இதில் என்ன இருக்கிறது? நான் அந்த மனிதருக்குப் பக்கத்தில் போய் அமர்ந்தால்...? அது... மனிதனே இல்லை!
வெளுத்த - மலை போல ஆஜானுபாகுவான ஒரு காளை மாடு! கொம்புகளை ஆட்டியவாறு நான்கு கால்களாலும் அது எழுந்து நின்றபோது, நானே ஆடிப் போனேன்.
"ஓ... நீயா?" - ஏதோ தெரிந்தது மாதிரி நான் சொன்னேன். அதோடு நிற்காமல் அதன் தொடையில் பாசத்தோடு ஒரு அடி கொடுக்கவும் செய்தேன். மின்சாரம் பாய்ந்தது போல அந்தக் காளை விறைப்புடன் துள்ளி பாய்ந்து, பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தபோது மர இலைகள் காற்றில் பறப்பதையும், மரங்கள் பேயாட்டம் ஆடுவதையும் என் கண்களால் கண்டேன். ஒரு நிமிடம் மனதில் ஒரு வித பதற்றம் உண்டானது. அதற்கு மேல் அங்கு நான் நிற்கவில்லை. திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடக்கத் தொடங்கினேன். நடக்கும்போதே நான் நினைத்தேன் : ஒரு வேளை நிலவொளியில் அப்படி எனக்குத் தெரிந்திருக்கலாமோ! ஆனால், மனம் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறதே! என்னுடைய சந்தேகம் என்னவென்றால் முப்பத்தைந்து வயது மனிதர் எப்படி அவ்வளவு சீக்கிரமாக ஒரு மலை போன்ற வெள்ளைக் காளை மாடாக மாறினார்?
பொதுவாக அந்த வழியே யாரும் அந்த நேரத்தில் நடந்து போவதில்லை. பின்னால் ஒரு நாள் நானே கேட்க நேர்ந்தது - பயங்கரமான எத்தனையோ சம்பவங்கள் அங்கு நடந்திருக்கின்றன. சிலர் பயந்து நடுங்கிப் போயே மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள். ஆமாம்... நான் ஏன் பயந்து நடுங்கவில்லை? - பல நேரங்களில் நானே நினைத்துப் பார்ப்பேன்... நிலவைக் காணும்போது... நிலா வெளிச்சம் நிறைந்திருக்கின்ற சாலையில்...
மங்களம்.
சுபம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook