நிலா வெளிச்சம் நிறைந்த சாலையில்...
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6566
நிலா வெளிச்சம் நிறைந்திருக்கின்ற சாலை என்று சொன்னால் அவ்வளவு பொருத்தமாக இருக்காது. "தனிமை சூழ்ந்த" என்பதையும் அதோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். விஷயம் என்னவென்று நானே கூறுகிறேன். அந்தச் சாலைக்குப் பக்கத்திலேயே ஒரு பாம்புகள் நிறைந்த காடும், பழைய ஒரு கோவிலும் இருக்கின்றன. இரவு நேரங்களில் தன்னந்தனியே யாரும் அந்த வழியில் நடந்து போக மாட்டார்கள். பயங்கரமான சம்பவங்கள் பலவும் அங்கே இதற்கு முன்பு நடைபெற்றிருப்பதே காரணம். பலர் பயந்து நடுங்கியே செத்துப் போயிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நான் ஏன் பயந்து சாகவில்லை?
நடந்த சம்பவத்தை நான் விவரித்தபோது, சில பழமைவாதிகள் என்னிடம் கேட்ட கேள்வி இது.
உண்மையில் எனக்கு அந்தக் கோவிலைப் பற்றி எதுவுமே தெரியாது. அந்த வழியும் இதற்கு முன்பு எனக்குத் தெரியாது. ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே அந்தப் பாதையில் நான் நடந்து போனேன். அந்தப் பாதையில் பதினொரு மைல் தூரம் நடந்து சென்று விட்டால், நான் தப்பித்து விடலாம் என்று பலரும் கூறினார்கள். எதையும் மறைக்காமல் கூறுவதாக இருந்தால், நான் போலீஸ்காரர்கள் கையில் சிக்காமல் ஓடிக் கொண்டிருந்தேன்.
நடந்தது இதுதான்.
ராஜ துரோகத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒரு கதை. நான் தான் அதை எழுதியிருந்தேன். அது பிரசுரமாகியிருந்த பத்திரிக்கையை அரசாங்கம் படிக்க நேர்ந்தது. பத்த்ரிக்கையின் சொந்தக்காரரைக் கைது செய்தது. என் பெயரில் வாரண்ட் பிறப்பித்து, அரசாங்கம் என்னைத் தேடிக் கொண்டிருந்தது. கைது செய்யப்பட்ட பத்திரிக்கைச் சொந்தக்காரர் மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியே வந்துவிட்டார்.
போலீஸ்காரர்கள் என்னை வலை வீசித் தேடிக் கொண்டிருந்தார்கள். என் வீட்டைச் சோதனை செய்தார்கள். மூன்று நான்கு முறை சோதனை செய்தார்கள். ராஜ துரோக புத்தகம் எழுதியதற்காக என்னைப் பற்றி அரசாங்கம் தற்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் என் பெற்றோர்களுக்கு அவர்கள் எடுத்துரைத்தார்கள். அந்த மகிழ்ச்சியான செய்தி என்ன தெரியுமா?" அவனோட வலது கையை ஒடிக்கப் போறோம்" என்பதுதான். அதாவது... என்னை அடித்து உதைப்பது மட்டுமல்ல, என் வலது கையைப் பிரத்யோகமாக அங்குலம் அங்குலமாக வெட்டித் துண்டாக்க வேண்டும் என்பதும் அவர்களின் தீவிர விருப்பம்.
இந்த மிகப் பெரிய செயலை நிறைவேற்றுவதற்காக போலீஸ்காரர்கள் நான் எங்கே இருக்கிறேன் என்று தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் என் பழைய புகைப்படம் ஒன்று கிடைத்து விட்டது. என் வீட்டில் இருந்து அவர்கள் எடுத்துக் கொண்டு போன புகைப்படம் அது. உலகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கின்ற சுருள்முடி சகிதமாக இருக்கும் ஒரு இளைஞனின் படம் அது. அவனைத்தான் இப்போது போலீஸ்காரர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆள் தலை முழுக்க வழுக்கை உடையவன், உலகத்தைப் பார்த்துச் சிரிக்காதவன், வயதானவன். இந்த விஷயங்களை மிகவும் தாமதமாகத்தான் போலீஸ்காரர்களே தெரிந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு தான் அவர்கள் பழைய புகைப்படத்தைக் கிழித்து எறிந்து விட்டு, வழுக்கைத் தலையைக் கொண்ட வயதான மனிதனைத் தேடத் தொடங்கினார்கள்.
காலம் படுவேகமாக ஓடிக் கொண்டிருந்தது. என்றோ வாங்கிய கடனுக்கு வட்டி கூடிக் கொண்டே போவதைப் போல என் பெயரில் வழக்குகளும் கூடிக் கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் என்னைப் பிடித்தே ஆவது என்ற உறுதியான தீர்மானத்திற்கு வந்து விட்டார்கள். நான் எழுதிய புத்தகங்களுக்குத் தடை விதித்தார்கள். என் கதைகளைப் பிரசுரிக்கக் கூடாது என்று எல்லாப் பத்திரிகைகளுக்கும் உத்தரவு அனுப்பினார்கள். என்னைப் பிடிப்பவர்களுக்கு இனாம் தரப்படும் என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது. அதோடு என்னைக் கைது செய்யும் போலீஸ்காரர்களுக்குப் பதவி உயர்வு தருவதாகவும் அரசாங்கம் கூறியது. விஷயம் இவ்வளவு தீவிரமாகிப் போனதை நான் அறியவில்லை.
பண சம்பந்தமான ஒரு முக்கிய தேவைக்காக யாருக்கும் தெரியாமல் நான் அந்த நகரத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு ஓட்டலுக்குப் போனேன். என்னை நன்கு தெரிந்திருந்த அந்த ஓட்டல்காரன் ஒரு ரகசிய அறைக்கு என்னைக் கொண்டு போய் அமர்த்தினான். நான் பார்க்க வேண்டிய நண்பனுக்கு அங்கிருந்தே செய்தியை அந்த ஆளே அனுப்பினான். இது நடந்த போது சுமார் ஆறு மணி இருக்கும். சூரியன் இன்னும் மறையவில்லை. நான் இருந்த ஓட்டலுக்குப் பக்கத்திலேயே ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. என் திட்டம் - நண்பனிடம் பணம் வாங்கிவிட்டு இரவு ஒன்பது மணிக்கு படகில் இங்கு கிளம்பி விட வேண்டும் என்பது.
பத்து நிமிடங்கள் சென்றிருக்கும், நண்பன் இன்னும் வந்து சேரவில்லை. அதற்கு முன்பே நான் வந்திருக்கும் செய்தியை எப்படியோ அறிந்து கொண்டே போலீஸ்காரர்கள் என்னைத் தேடி ஓட்டலுக்கு வந்து விட்டார்கள்.
அவர்களுக்கு நான் வந்தது எப்படித் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. ஓட்டல் மேலாளர் வெளிறிப் போன முகத்துடன் என் அருகில் வந்து கூறினான்:
"சார்.. ஓடித் தப்பிச்சிடுங்க!"
ஆனால், தப்பி ஓட ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. முன் பக்க வாசல்! அங்கே நான்கைந்து போலீஸ்காரர்களும் ஒரு இன்ஸ்பெக்டரும் நின்றிருந்தார்கள்.
ஓட்டல்காரன் சமையலறை வழியாக வெளியே போய் சுவர் மேல் ஏறி குதித்து ஓடி விடும்படி கூறினான். நான் அவன் சொன்னபடி சுவர் மேல் ஏறி கீழே குதித்துச் சாலையை அடைந்தேன். மரங்களுக்கிடையே போகும் மலைப்பாதை அது. மூச்சுகூடச் சரியாக விடாமல் நான் முக்கால் மைல் தூரம் வேகமாக ஓடினேன். மலைமேல் ஏறினேன். மரங்கள் நிறைய இருந்ததால், ஒரு மரத்தின் மேல் அமர்ந்தேன்.