நான் உறங்கப் போவதற்கு முன்பு...
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6852
நேற்று மாலையில் நான் எங்களுக்குச் சொந்தமான நிலத்தின் வடக்குப் பக்கத்தில் இருக்கிற பாதை வழியே மது அருந்தக்கூடிய பாரை நோக்கி நடந்துபோனபோது, எனக்கு எதிரில் தெய்வம் வந்தது.
"உனக்கு என்னை ஞாபகத்துல இருக்கா?"- தெய்வம் கேட்டது.
லைன்மேனுக்கு வேறு எங்கோ சீக்கிரம் போகவேண்டிய சூழ்நிலை போலிருக்கிறது. பகலிலேயே தெருவிளக்குகள் 'பளிச்' என்று ஜெகஜோதியாக எரிந்து கொண்டிருந்தன.
"என் தெய்வமே!"- நான் சொன்னேன். தொடர்ந்து புன்சிரிப்பைத் தவழ விட்டேன்.
தெய்வமும் புன்னகை தவழ நின்றது.
"நான் சொன்னபடி நீ இப்பவும் நடக்குறியா?"- தெய்வம் புன்னகை மாறாமல் என்னையே உற்றுப் பார்த்துக் கேட்டது.
"என்னால் எந்த அளவுக்கு முடியுதோ, அந்த அளவுக்கு நீங்க சொன்னபடி நடக்குறேன், தெய்வமே!"- நான் சொன்னேன்.
"சரி... நீ இப்போ எங்கே போறே?"- தெய்வம் கேட்டது.
"நான் என் மகனோட சைக்கிளை ரிப்பேர் பண்ணக் கொடுத்திருக்கேன். அதை வாங்கப் போறேன்"- பாரில் இருந்து திரும்பி வருகிற வழியில் சைக்கிளை எடுப்பதாக என் திட்டம். பாதி உண்மையை மட்டுமே தெய்வத்திடம் கூறியதன் வெளிப்பாடு என் முகத்தில் தெரிந்திருக்கலாம்.
"நீ அவனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்துட்டே... ஆனா, என்னைப் பத்தி ஏதாவது அவன்கிட்ட சொல்லியிருக்கியா?"- தெய்வம் கேட்டது.
"இல்ல தெய்வமே"- நான் சொன்னேன். "அதுக்குச் சரியா நேரம் கிடைக்காததுதான் காரணம்..."
தெய்வம் கவலை மேலோங்க என்னைப் பார்த்தவாறு கேட்டது: "டேய்... எனக்கு நேரம் கிடைச்சுத்தானா உன்னைப் பார்க்க நான் வந்திருக்கேன்! நேரம்ன்றது ஒரு சாதாரண விஷயம்... இது உனக்குப் புரியலியா?"
நான் குற்ற உணர்வுடன் என் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன். அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன்.
காரணம்-
என் மகன் தூரத்தில் சைக்கிளை மிதித்தவாறு வந்து கொண்டிருந்தான்.
ஏதோ ஒரு சினிமா பாட்டுக்கு விசிலடித்தவாறு அவன் வருவது தெரிந்தது. தன் தாயிடம் அவன் காசு வாங்கிக்கொண்டு போய் சைக்கிளை வாங்கி வந்த விஷயம் எனக்குத் தெரியாது.
என் முகத்தில் தெரிந்த வேறுபாட்டைப் பார்த்த தெய்வம் திரும்பிப் பார்த்தது.
என் மகன் என்னைப் பார்த்ததும் விசிலடிப்பதை நிறுத்திவிட்டு சைக்கிளை விட்டுக் கீழே இறங்கினான். அவன் சொன்னான்: "அப்பா... இன்னும் ரெண்டு ரூபா சைக்கிள் கடையில கொடுக்க வேண்டியதிருக்கு. நீங்க கொடுத்திடுறீங்களா?"
தெய்வம் அவனைப் பார்த்துச் சிரித்தது. அப்போதுதான் அவன் தெய்வத்தையே பார்க்கிறான். அவன் கூச்சப்பட்டதுடன்- அதே சமயம் முகத்தை கம்பீரமாகவும் வைத்துக் கொண்டு தெய்வத்தை உற்றுப் பார்த்தான். "இது யார்?"- என்று வாய் திறந்து கேட்காமல், அந்தக் கேள்வி முகத்தில் தொனிக்க என்னை அவன் பார்த்தான்.
"நான் யார்னு உனக்குத் தெரியுமா?"- தெய்வம் அவனிடம் கேட்டது.
"தெரியாது"- அவன் கூச்சத்துடன் சொன்னான்.
தெய்வம் சைக்கிள் மணியை ஒன்றிரண்டு முறை அடித்தது.
"மணி நல்லா இருக்கு"- தெய்வம் சொன்னது.
அதைக் கேட்டதும் என் மகனின் முகம் மலர்ந்தது.
"உனக்கு டபுள்ஸ் வச்சு ஓட்டத் தெரியுமா?"- தெய்வம் அவனிடம் கேட்டது.
அவன் என்னைப் பார்த்தவாறு- தயங்கிய குரலில் சொன்னான்: "எப்பவாவது ஓட்டுவேன்."
"உன்னோட பேர் என்ன?"- தெய்வம் கேட்டது.
"ராஜு"- அவன் சொன்னான்.
"இப்போ உனக்கு என்ன வயசு நடக்குது?"
"பதினாலு."
"அப்படியா? என்னைப் பின்னாடி உட்கார வச்சு சைக்கிளை ஓட்டுறியா?"- தெய்வம் சைக்கிளின் ஹேண்டிலில் கை வைத்தவாறு கேட்டது.
"ஆறரை மணி 'ரட்சகன்' பஸ்ஸை நான் பிடிக்கணும். நடந்து போனா பஸ் போயிடும்!"
என் மகன் மீண்டும் என்னைப் பார்த்தவாறு தெய்வத்திடம் சொன்னான்: "நீங்க அதிக கனமா இல்லாம இருந்தா ஓட்டிடுவேன்."
"எப்படி ஓட்டுறேன்னு பார்த்திடுவோமே!"- தெய்வம் சொன்னது: "உன்னோட அப்பாவோட சம்மதம் வேணும். அவ்வளவுதானே! அதை நான் பார்த்துக்குறேன்!"
யார் இவர் என்பது இன்னும் தெரியவில்லையே என்ற எண்ணத்துடன் அவன் தெய்வத்தையே பார்த்தான்.
தெய்வம் சொன்னது: "நான் உன்னோட அப்பாவின் ஸார்..."
அவன் மரியாதையுடன்- அடக்க ஒடுக்கமாக நின்றான்.
"அதுக்காக பயப்பட வேண்டாம்"- தெய்வம் அவனை நோக்கிச் சிரித்தவாறு சொன்னது: "நான் அடிக்கிற ஸார் இல்ல.."
அவன் சைக்கிளைத் திருப்பி அதன்மேல் ஏறி, ஒரு காலை நிலத்தில் ஊன்றி, சைக்கிளை இலேசாகச் சாய்த்து மரியாதை மேலோங்க தெய்வம் கேரியரில் ஏறுவதற்காகக் காத்திருந்தான். தெய்வம் கேரியரில் அமர்ந்ததும், என் மகன் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு, எந்தவித தயக்கமும் இல்லாமல் சைக்கிளை முன்னோக்கி மிதித்தான். 'பையன் தைரியசாலிதான்'- மனதிற்குள் நான் சொல்லிக் கொண்டேன்.
தெய்வம் என்னை நோக்கி தலையை ஆட்டியது. அடுத்த நிமிடம் அதுவும் ஒரு சினிமா பாடலுக்கு விசிலடிக்கத் தொடங்கியது.
ராஜு வியப்புடன் தலையைத் திருப்பி "ஸார், உங்களுக்கு அந்தப் பாட்டு தெரியுமா?"- என்று கேட்பது என் காதில் விழுந்தது.
அப்படி அவன் தலையைத் திருப்பிய போது சைக்கிள் இலேசாக ஆடியது. அவன் அடுத்த நிமிடம் அதைச் சரிபண்ணி நேராக ஓட்டினான். மேற்கில் சிவப்பு வர்ணத்தில் இருந்த சூரியனை நோக்கி அவர்கள் போவதையே பார்த்தவாறு நான் நின்றிருந்தேன்.
அவன் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் திரும்பிப் போவதை நான் பாரின் ஜன்னல் வழியே பார்த்தேன். தன் இடது கையை மட்டுமே அவன் ஹேண்டிலில் வைத்திருந்தான். வலது கையை கால் முட்டியின் மீது வைத்தவாறு அவன் வேகமாக சைக்கிளைச் செலுத்திக் கொண்டிருந்ததை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. அம்மா எங்கே திட்டிவிடப் போகிறாளோ என்ற பயம் அவனுக்கு.
பிரார்த்தனை முடித்து, நான் முற்றத்தில் நின்றிருந்தபோது, அவன் என் அருகில் வந்தான்.
"அப்பா... உங்க ஸார் கனமாவே இல்ல...."- அவன் என்னிடம் சொன்னான். "ஒரு ஆள் பின்னாடி உட்கார்ந்திருந்த மாதிரியே தெரியல. நடுவத்தானிக்குன்னு வந்ததும் நான் ஸாரை இறங்கச்சொல்லிட்டு, சைக்கிளைக் கொஞ்ச நேரம் கையால தள்ளிட்டுப் போகணும்னு நினைச்சேன். ஆனா, அப்பா... சைக்கிள் காத்தைப்போல எவ்வளவு வேகமா அந்த மேட்டுல ஏறிச்சுன்னு நினைக்கிறீங்க! எனக்கே அதைப் பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு..."
"அதுதான் தெய்வத்தோட விளையாட்டுன்றது"- நான் சொன்னேன்.
அவன் அதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை.
"தெய்வம் அதுக்குப் பிறகு உன்கிட்ட என்ன சொன்னது?"- நான் கேட்டேன்.
"தெய்வமா? எந்த தெய்வத்தைச் சொல்றீங்க?"- அவன் வியப்புடன் என்னைப் பார்த்தான். நான் அதிகமாக மது அருந்திவிட்டேன் போலிருக்கிறது என்பது மாதிரி என்னைப் பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.