
முட்டாள்தனமாக நான் ஏதோ சொல்லிவிட்டேன் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது.
ஆனால்... அப்போதே நான் நினைத்தேன்- அவன் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதே நல்லது என்று.
நான் சொன்னேன்: "டேய்... நீ சைக்கிள் கேரியரில் உட்கார வச்சு கொண்டு போனது என்னோட ஸார் கிடையாது... தெய்வம்!"
"அட கடவுளே..."- என் மகன் ஆச்சரியத்துடன் என்னை கண்களை அகல விரித்து வைத்துக் கொண்டு பார்த்தான்: "நீங்க சொல்றது உண்மையா அப்பா?"
அவன் கண்களில் நிலவின் பிரகாசத்தைப் பார்க்க முடிந்தது.
"உண்மையாத்தான் சொல்றேன்"- நான் சொன்னேன்.
"அதுனாலதான் அவருக்கு கனமே இல்ல..."- அவன் அதிசயப்பட்டுச் சொன்னான்: "எனக்குத் தெரிஞ்ச எல்லா பாட்டுகளையும் தெய்வமும் தெரிஞ்சு வச்சிருக்கு. ஒரே ஒரு பாட்டுத்தான் அதுக்குத் தெரியல..."
"என்ன பாட்டு...?"- நான் கேட்டேன்.
அவன் என் அருகில் வந்து நின்று கொண்டு சொன்னான்: "அப்பா... உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே ஒரு பாட்டு... பாபுக்காவோடது... நான் உறங்கப் போவதற்கு முன்பு..."
"ஹோ... அந்தப் பாட்டா?"- நான் மகிழ்ச்சியுடன் சொன்னேன்.
"அதேதான்..."- என் மகன் சொன்னான்.
எங்களுக்கு மேலே இரண்டு பறவைகள் சிறகுகளை அடித்தவாறு - இனிய ஓசையை எழுப்பிய வண்ணம் பறந்துபோயின. என் மகன் வெறுமனே அவற்றைப் பார்த்து விரலை நீட்டினான்.
அப்போது முற்றத்தின் அருகில் நின்றிருந்த பலாமரத்தின் இலைகளுக்குள் மறைந்திருந்த நிலவில் இருந்தவாறு பாபுக்கா, தெய்வத்திற்கு 'நான் உறங்கப் போவதற்கு முன்பு' என்ற அந்தப் பாடலைச் சொல்லித் தருவதை நான் கேட்டேன். நான் சிலிர்த்துப் போய் என் மகனின் தோள்மீது கை வைத்துச் சொன்னேன்: "உனக்கு அது கேக்குதா?"
"ஆமாப்பா..."- அவன் சொன்னான். சொன்னதோடு நிற்காமல், அந்தப் பாடலுக்கு அவன் உதட்டால் விசிலடித்தான்.
"வேண்டாம். ராத்திரி நேரம்..."- நான் சொன்னேன்.
"ஷ்.."- என் மகன் சொன்னான்: "அப்பா உங்களுக்குக் கேக்குதா?"
பலா மரத்தின் இலைகள் மறைத்திருந்த நிலவில் இருந்தவாறு தெய்வம், பாபுக்காவின் அந்தப் பாடலுக்கு விசிலடித்தது.
தெய்வத்தோடு சேர்ந்து பாபுக்காவும் பாடினார்:
"நான் உறங்கப்போவதற்கு முன்பு
உனக்குச் சொல்றேன் நன்றி முழுசா
இன்று நீ கருணை கொண்டு
தந்த நன்மைக் கெல்லாம் நன்றி!"
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook