கடல் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6789
அப்படி தொடர்ந்து படித்ததனால்தான், கண்ணின் பார்வை சக்தி சற்று குறைந்து போனது. எதுவுமே சற்று மங்கலாகத்தான் தெரிகிறது. பிறகு... வயதும் அதிகமாகிவிட்டதே! இப்போது அப்படிப் படிப்பதில்லை. என் மனைவிக்குத் தூங்குகிற போது கண்களில் வெளிச்சம் படுவது பிடிக்காது.
நான் சொல்ல வந்தது இதுதான். பார்வைக் குறைவு காரணமாக என்னால் தெளிவாகக் கூற முடியவில்லை. இருந்தாலும் அவன் அழுது கொண்டிருக்கிறான் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆமாம்... எனக்குத் திடீரென்று அப்போது தோன்றியது: “ஒரு ஆண் அழலாமா?” சந்தேகமே வேண்டாம். என் மனைவி சொன்னதை நான் நினைத்துப் பார்த்தேன்; “அவன் உண்மையிலேயே பைத்தியம்தான். பட்டப்பகல்ல கண்ணீர் விட்டு அழுதுக்கிட்டு இருக்கான். நீங்க சொன்னது சரிதான். அவன் தற்கொலை பண்ணிக்கத்தான் வந்திருக்கான்!”
“அவன் பைத்தியம் இல்லடி...” - நான் என் மனைவியிடம் சொன்னேன்: “அவன் ஏதோ சங்கடத்துல இருக்கான். துக்கம் தாங்க முடியாத அளவுக்கு மீறிப் போகுறப்போ, மனிதர்கள் பொதுவா இப்படித்தான் நடப்பாங்க...”
“பைத்தியம் இல்லைன்னா இங்க இருக்குற ஆளுங்க முன்னாடி இப்படியா ஒருத்தன் நடப்பான்? கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா? வேணும்னா பாருங்க. அவன் சாகணும்னுதான் வந்திருக்கான். அது மட்டும் நிச்சயம்...”
“அடியே முட்டாள்...” - நான் அவளிடம் சொன்னேன்: “சாகுறதுன்றது அவ்வளவு இலேசான ஒரு விஷயமில்லை. மனிதர்களுக்கு மரணத்தைப் பார்த்து பயம் கிடையாதா என்ன? மரணத்தைப் பார்த்து பயப்படலைன்னாகூட மரணத்திற்குப் பிறகு உள்ளதைப் பார்த்து பயப்பட மாட்டாங்களா?”
அவள் மீண்டும் சொன்னாள்: “பைத்தியத்துக்குப் பயம் இருக்குமா என்ன? சீராக சிந்திக்க முடியாதவர்களுக்கு வாழ்றதும், மரணமடையிறதும் எல்லாமே ஒண்ணுதான். அது ரெண்டுக்குமிடையே அவங்களைப் பொறுத்தவரை எந்தவித வித்தியாசமும் இல்லை...”
“அடியே முட்டாள்...” - நான் என் மனைவியிடம் சொன்னேன்: “வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையில், இன்றைக்கும் நாளைக்கும் நேற்றைக்கும் இடையில், தனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் வேறுபாடு பார்க்க முடியாதவர்கள் பகவத் கீதையில் என்ன பேர் சொல்லி அழைக்கப்படுகிறார்கள்?” உனக்குத் தெரியுமா? அவர்கள்தான் ஸ்திதப்ரக்ஞர்கள். அவர்கள் இந்த உலகத்தின் மகாத்மாக்கள்...”
அப்போதுதான் என் மனைவி நான் இதுவரை சொன்னதைக் கேட்காதது மாதிரி, வேறு விஷயத்திற்குத் தாவினாள். அவள் சொன்னாள்: “இங்க பாருங்க... அந்த ஆளு எங்கே போறான்னு பாருங்க...”
நான் பார்த்தேன். அவன் இலேசாக மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு மணலில் பதியும் கால்களுடன் சிறிது தூரத்தில் இருந்த கருங்கல்லால் ஆன சுவரை நோக்கி நடந்து கொண்டிருந்தான். எங்களுக்கு அவனின் பின்பக்கம் மட்டுமே தெரிந்திருந்ததால் அவன் அழுகிறானா இல்லையா என்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. ஆனால், அவனின் தோள்கள் ஏதோ சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பதைப்போல அவ்வப்போது ஆடின. எதையோ மறந்துவிட்டதைப்போல அவன் நின்று நின்று நடந்து போவதைப் பார்த்த என் மனைவி சொன்னாள்: “தூக்கத்துல நடக்குற மாதிரி இருக்கு...”
“ஆப்பரேஷன் செய்றதுக்காக மயக்க மருந்து கொடுத்து படுக்கப் போட்டுறக்கப்போ, எழுந்து நடக்குற மாதிரி இருக்கு” - நான் சொன்னேன்.
“யாருக்குத் தெரியும்? ஏதாவது பெரிய நோய் வந்தாலும் வந்திருக்கலாம். இல்லாட்டி - சாகுறதுக்காகப் போறானோ?”
எனக்கு அதைக் கேட்டு கோபம் வந்தது. “நீ என்ன கடவுளா அவனோட மனசைத் தெரிஞ்சுக்கிறதுக்கு?” - நான் அந்தக் கழுதையைப் பார்த்து சொன்னேன்: “ஒரு மனிதனைப் பற்றி கண்டபடி பேசறதுக்கு உனக்கு யார்டி அதிகாரம் கொடுத்தது? அவன் நல்லவன்னோ கெட்டவன்னோ சொல்றதுக்கு நீ யாரு? அவனோட வாழ்க்கையை உன்னோட வார்த்தைகளை வைத்து நீயே முடிக்கிறியா? நீ உண்மையாகவே ஒரு கழுதைதான்...”
நான் இப்படிச் சொன்னதும் அவள் ஒரேயடியாகக் குதிக்க ஆரம்பித்து விட்டாள். “நான் வாயில சொன்னதும், அவன் உடம்புக்கு ஏதாவது ஆயிடுச்சா என்ன? ஆமா... நீங்க ஏன் இப்படி ஒரேயடியா ஆர்ப்பாட்டம் பண்றீங்க?”
“அடியே...” - நான் சொன்னேன். “நாக்கோட விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீ அந்த ஆளை பார்த்தாகூட, அது ஒரு விதிதான். உன்னோட பார்வையை அவனால தடுக்க முடியுமா? இல்லாட்டி நீ அப்படிப் பார்க்குறதுக்கு முன்னாடி அவன் உன்னோட கண்களைக் குத்தி குருடா ஆக்கணும். இருந்தாலும் உன்னோட மனசு நினைக்கிறதை அவனால தடுக்க முடியுமா? அதற்காக அவன் உன்னைக் கொன்னு இல்லாம ஆக்கணும். புரியுதா?”
கேட்காதது மாதிரி அவள் வேறு பக்கம் பார்த்தவாறு சொன்னாள்: “அதோ பாருங்க. அந்த ஆள் கருங்கல் சுவர் மேல பிடிச்சு ஏறிக்கிட்டு இருக்கான்!” நான் பார்த்தபோது சுவர் மேல் ஏற்கனவே ஏறி உட்கார்ந்திருந்த சிறுவர்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அந்த ஆள் நடுங்கும் கைகளால் பிடித்தவாறு சுவர் மேல் ஏறிக் கொண்டிருந்தாள். கலங்கரை விளக்கைத் தாண்டி ஆரம்பித்த சுவர் கடலுக்குள் முடிந்தது.
“ஏய் பைத்தியம் இல்ல...” - நான் சொன்னேன்: “மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியமாக அந்த ஆளு இருந்திருந்தா, இந்தப் பசங்க அவனைப் பார்த்து கலாட்டா பண்ணி இருப்பாங்க. ஆனா, பசங்க அப்படி எதுவுமே செய்யல.. அவங்க அந்த ஆளை எப்படி மரியாதையுடன் பார்க்குறாங்கன்னு பாரு... ஒரு பெரிய ஆளு எதற்காக நாம இருக்குற இடத்துக்கு வர்றான்ற நினைப்பு மட்டும் அவங்கக்கிட்ட இருக்கு...”
“சின்னப் பசங்களுக்கு என்ன தெரியும்? சாக முயற்சி பண்றது பைத்தியக்காரத்தனம் தானே?”
நான் மணலில் படம் வரைந்து கொண்டிருந்தேன். நான் அவளிடம் சொன்னேன்: “அடியே... பைத்தியம்னா என்ன? வாழணும்னு நினைக்கிறதுக்கும், சாகணும்னு நினைக்கிறதுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கு? இரண்டுமே மனசு சம்பந்தப்பட்ட செயல்களே. சுயஉணர்வுடன் நான் என் வாழ்க்கையில எனக்குச் சரின்னு படுறதைச் செய்றதுக்குப் பேரு பைத்தியக்காரத்தனமா? ஆனால் நான் என் வாழ்க்கையில உன் தலையில அடிக்க வந்தால், அது...”
அப்போது என் மனைவி கத்தினாள்: “என் தெய்வமே...!”
நான் திரும்பிப் பார்த்தபோது அவன் கடலில் குதித்து முடித்திருந்தான். கற்சுவர் வழியாக அவன் ஓடுவதை என் மனைவி பார்த்திருக்கிறாள். நீர் தெறித்ததை அவள் பார்த்தாள் என்பது என் எண்ணம். ஆனால், சூரியன் முழுமையாக மறைந்துவிட்டிருந்தது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த சிலர் சுவரை நோக்கி ஓடிவந்தார்கள்.
என் மனைவியின் நாக்கு எங்கு போனதோ தெரியவில்லை. அவள் ‘கிடுகிடு’வென நடுங்கிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் அவள் சொன்னாள்: “நான் அப்பவே சொன்னேன்ல, அந்த ஆளு ஒரு முழு பைத்தியம்னு...”நான் அவளிடம் சொன்னேன். “தெரிஞ்சோ தெரியாமலோ செத்துப் போனவங்களைப் பற்றி பொய் சொல்லாதே!”