கடல்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6789
ஒரு நாள் நானும் என் மனைவியும் சேர்ந்து - அது என்ன தேதி என்பது சரியாக ஞாபகத்தில் இல்லை. போன மாதத்தில் என்பதை மட்டும் சொல்ல முடியும். நாங்கள் ஒரு நாள் மாலை நேரத்தில் கடற்கரையில் உட்கார்ந்திருந்தோம். எங்களுக்குள் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். சொல்லப் போனால் நாங்கள் உட்கார்ந்திருந்தோம் என்று கூறுவது கூடத் தப்பு. ஒரு கல்லின் மேல் சாய்ந்து நின்றிருந்தோம் என்று சொல்வதே பொருத்தமானது. கடல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தன் ஆக்கிரமிப்பை நீட்டிவிடக்கூடாது என்பதற்காக கொண்டு வந்து போடப்பட்ட கல் அது.
பொதுவாக நானும் என் மனைவியும் சூரியன் மறையும் நேரம் வரை கடற்கரையிலேயே இங்குமங்குமாய் சுற்றிக் கொண்டிருப்போம். சூரியன் மறைந்த பிறகு மக்கள் கூட்டம் இல்லாத இடமாகப் பார்த்து நாங்கள் போய் உட்காருவோம். அன்று அது நடக்கவில்லை. வேறொரு காரணமும் இல்லை. விரும்பத்தகாத ஒரு நிகழ்ச்சி அன்று நடந்துவிட்டதே காரணம். அதற்குப் பிறகு என் மனைவி பல நாட்கள் கடற்கரைப் பக்கமே வரவில்லை. எனக்கும்கூட அங்கு செல்லப் பிடிக்கவில்லை.
காலப்போக்கில் அதை நாங்கள் மறந்தே விட்டோம். மறதி என்பது உண்மையிலேயே ஒரு கொடைதான். ஒரு வகையில் பார்க்கப் போனால் மறதி என்ற ஒன்று மட்டும் இல்லாமற் போயிருந்தால் மனிதர்களுக்கு என்றோ பைத்தியம் பிடித்திருக்கும். ஞாபகங்களின் குவியல்களால் பைத்தியம் பிடிக்காமல் வேறென்ன செய்யும்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அந்த ஞாபகம் கடந்த கால அனுபவங்களைப் பற்றியோ எதிர்கால ரகசியத்தைப் பற்றியதாகவோ இருந்தால் பரவாயில்லை.
நடக்கப்போகிற விஷயத்தை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்! அன்று நடந்தது என்ன தெரியுமா? அன்று பகல் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. சாயங்காலம் ஆனபோதுதான் - வானத்தில் ஒரு தெளிவே உண்டானது. மண் நன்றாக நனைந்திருந்தது - கல்லின் மேல் சாய்ந்தவாறு - நானும் என் மனைவியும் ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் வாக்குவாகம் செய்து கொண்டிருந்தோம். அவளுடன் எப்போது பேசினாலும் அதுதான் நடக்கும்.
அவளின் நாக்கு பேச ஆரம்பித்தாலே, நான் சொல்வதற்கு எதிராகத்தான் பேசும். அவள் ஒன்றும் அறிவில்லாதவள் இல்லை. இருந்தாலும் அன்று என்னவோ ஆரம்பத்திலிருந்தே அவள் என்னுடன் தலைக் கனமாகத்தான் பேசிக் கொண்டிருந்தாள். அவள் சொல்வதை நான் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். மனிதக் குழந்தைகளைக் கண்ணாடி பாத்திரத்தில் பிறக்க வைப்பது குறித்து ஏதோ பத்திரிகையில் பிரசுரமான ஒரு பொய்யான செய்தியை அவள் என்னிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“நீ போடி...” நான் அவளிடம் சொன்னேன்.
“சோதனைச் சாலைகளில் குழந்தைகளைப் பிறக்க வச்சா, அந்தக் குழந்தைங்க அங்கே இருந்து வர்ற மற்ற பொருட்களை மாதிரித்தான் இருக்கும். பேரையும் நம்பரையும் எழுதி ஒட்டி வச்சு, என்னென்ன பொருட்கள் கலக்கப்பட்டிருக்கு... அவற்றோட சதவிகிதம் எவ்வளவு போன்ற விஷயங்களைத் தெளிவா எழுதிவச்சு... இதைத்தான் உண்மையிலேயே செய்யணும். அப்படி உருவாகி வர்ற குழந்தைகளை ஒன்று விற்பனைக்கு வைக்கலாம். இல்லாட்டி பைத்தியக்கார மருத்துவமனை போன்ற ஒரு இடத்துல அடைச்சு வைக்கலாம்.”
“இதோ வர்றேன் ஒரு பைத்தியக்காரன்” - அவள் சொன்னாள்.
எனக்கு அதைக் கேட்டு கோபம்தான் வந்தது. இது அவள் எப்போதும் செய்யும் ஒரு காரியம்தான். ஏதாவதொரு விஷயத்தைப் பற்றி அவள் தேவையில்லாமல் பேசிய பிறகு நான் பதிலடி கொடுத்தால், அவள் விஷயத்தை வேறு பக்கம் திருப்புவதற்கு முனைவாள்.
“உன் பைத்தியக்காரனைக் கொண்டு போய் மரத்துல தொங்க விடு. நல்லா நெருப்புல காயப்போடு. இங்க பாரு... இனிமேல் நீ என்கூட பேசக் கூடாது. தெரியுதா?” - நான் என் மனைவியிடம் சொன்னேன்.
“பாவம்... சாகப் போறேன்” - அவள் கையால் சுட்டிக் காட்டியவாறு சொன்னாள். எருமையின் வாயில் யார் வேதத்தை ஓதுவார்கள்? நான் அவள் சுட்டிக்காட்டிய பக்கம் பார்த்தேன். சற்று தூரத்தில் ஒரு மனிதன் தலையைக் குனிந்தவாறு மணலில் உட்கார்ந்திருந்தான். குனிந்த தலையை இரு கைகளாலும் பிடித்தவாறு அவன் தரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“பைத்தியக்காரன் மாதிரி தெரியல... சாப்பாட்டுக்கு வழி இல்லாத ஒரு ஏழை மாதிரி தெரியுது...” நான் சொன்னேன்.
“இல்லை இல்லை... நான்தான் சொல்றேனே அவன் ஒரு பைத்தியக்காரன்னு...” - என் மனைவி சொன்னாள்: “நடந்து வர்றப்போ கடலைக் கையால நீட்டி என்னவோ தனக்கு மட்டும் கேக்குற மாதிரி அவன் சொன்னான்.”
“ஒருவேளை தற்கொலை செய்துக்குற எண்ணத்துல இருப்பானோ?” - என்னையே மறந்துபோய் நான் சொன்னேன். அப்படி நான் சொல்லியிருக்கக்கூடாது. என் தவறுதான். மனிதர்களைத்தான் நாம் வகை வகையாக வாழ்க்கையில் பிரித்துப் பார்க்கிறோமே! கதைகளிலும், நம்முடைய உலக அனுபவங்களிலும் யாரையாவது பார்த்துவிட்டால்... அவ்வளவுதான் இனம்பிரிக்க ஆரம்பித்து விடுவோம்.
“எனக்குத் தெரியும். அந்த மாதிரி மனிதன்தான்” “ ஓ... அப்படிப்பட்ட மனிதன்தான், இல்லே?” - இப்படிப் போய்க் கொண்டிருக்கும் விஷயங்கள். நம் விருப்பப்படி வாளை எடுத்து வீசிக் கொண்டிருப்போம். எனக்கு அந்த மனிதனைப் பார்த்தபோது துயரமுற்ற சோகமயமான கதாநாயகர்கள்தான் ஞாபகத்தில் வந்தார்கள். அதனால்தான் அபத்தமாக அப்படிச் சொல்லிவிட்டேன். காரணம் - என் மனைவி காதில் கட்டாயம் அது விழுந்தாக வேண்டும்.
அவன் தற்கொலை செய்து கொள்வதற்காக வந்திருக்கிறான் என்பதை நான் எப்படித் தீர்மானித்தேன்? அவன் அப்போது என்ன செய்து கொண்டிருந்தான்? அவன் அப்போது உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து விட்டிருந்தான். தூக்கத்தில் இருப்பதைப் போல சில நிமிடங்கள் அதே இடத்தில் நின்றான். அவன் இளைஞனாக இருந்தான்.
முகத்தில் மீசை வளர்ந்திருந்தது. தலைமுடி தாறுமாறாகக் கலைந்து காணப்பட்டது. அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்ததை அவனுக்கு அருகில் போனபோதுதான் நானே உணர்ந்தேன். அவன் அணிந்திருந்த ஆடைகள் அவனின் உடலோடு ஒட்டிக் கிடந்தன. காலையில் பெய்த மழையில் அவன் நன்றாக நனைந்திருக்க வேண்டும். வியர்வையாக அது இருக்க வாய்ப்பில்லை. அவனின் கண்களில் - அதாவது ... நீண்ட காலமாக எனக்குப் படுக்கையில் படுத்தவாறே படிக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. அப்படிப் படிக்காமல் போயிருந்தால் இப்போது இருக்கும் அறிவு எங்கே இருந்து வந்திருக்கும்?