நிஸாகந்தி - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7407
கடிதம் சீக்கிரம் அவள் கையில் போய்ச் சேரவேண்டுமென்று எண்ணிய நான் அதிகாலை நேரத்திலேயே மாலதியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். ஒரு வெளுத்த ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ செடியின் கொம்பைக் கேட்டு வாங்க வந்திருப்பதாக காரணம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் மாலதியின் தோட்டத்தைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தேன்.
அப்போது அங்கு ஒரு சிறு ஆரவாரம் கேட்டது. அருகிலுள்ள சுமார் பத்துப்பேர் மாலதியின் வீட்டு வாசலில் கூட்டமாக நின்றிருந்தார்கள். நான் அவர்களுக்கு மத்தியில் நுழைந்து எட்டிப் பார்த்தேன்.
பயங்கரமான ஒர பாம்பை அடித்து வாசலில் போட்டிருந்தார்கள். அந்த பாம்பு சுமார் மூன்றடி நீளத்தில் இருந்தது.
அது ஒரு நல்ல பாம்பு!
“இந்த நல்லபாம்பு அந்தச் சாயங்காலம் பூக்குற பூச்செடிகள் இருக்குற இடத்துல இருந்துச்சு. நாங்க அந்த இடத்த வெட்டி சுத்தமாக்குறப்போ, அங்கே ஒரு பெரிய புற்றைப் பார்த்தோம். அதை இலேசா இடிக்கும்போது இந்தப் பாம்பு வெளியே வந்தது. இவ்வளவு காலமாக இந்த நல்ல பாம்பு இவ்வளவு பக்கத்துல இருந்திருந்தும் நம்ம யார் கண்ணுலயும் படாம இருந்ததுதான் அதிசயம்” - அந்தப் பாம்பை அடித்து நசுக்கிய வேலு ஆசாரி தன்னுடைய மூக்கில் விரல் வைத்துக் கொண்டு என்னுடைய முகத்தைப் பார்த்தவாறு சொன்னான்: “அது எப்படி கிடக்குதுன்னு பார்த்தியா? உடம்புல பாரு எவ்வளவு புள்ளிகள்னு!”
அந்த நல்ல பாம்பின் வால் தந்தி அலுவலகத்திலிருக்கும் மின்சார ஊசியைப்போல இலேசாக நகர்வதைப் பார்த்த ஆசாரி உஷாரானான். “என்ன... இன்னும் நீ சாகலியா?” என்று சொல்லியவாறு அவன் கையில் வைத்திருந்த பெரிய கொம்பால் அதன் தலையை மீண்டும் வேகமாக அடிக்கத் தொடங்கினான். பாம்பின் தலை நசுங்கி, இரத்தம் தெறித்தது.
நான் அதற்குமேல் அங்கு நிற்கவில்லை. நான் எப்படி வீட்டிற்கு வந்தேன் என்று எனக்கே தெரியாது. அதைப் பற்றி நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் என்னுடைய இதயத்தில் யாரோ நெருப்பை அள்ளிக் கொட்டுவதைப்போல் உணர்ந்தேன். நான் அந்தப் பூச்செடிகள் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் இருட்டில் உட்கார்ந்து கொண்டு ஒரு அழகுப்பெட்டகத்தை தினமும் பார்த்தவாறு இருக்க, எனக்கு அருகில் ஒரு பயங்கரமான விஷப்பாம்பு வாயைப் பிளந்து கொண்டு அந்த நிஸாகந்தியின் நறுமணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது என்ற உண்மையை நினைத்துப் பார்க்கும்போது உண்டான பயத்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தாலும் எனக்குப் பின்னால் விரித்துக்கொண்டு நிற்கின்ற ஒரு நல்லபாம்பை என்னுடைய மனத்திரையிலிருந்து அகற்றவே முடியவில்லை.
அன்று இரவு எனக்கு காய்ச்சல் வர ஆரம்பித்தது. அது நேரம் செல்லச் செல்ல அதிகரித்தது. நான் பயங்கரமான பல கனவுகளைக் கண்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறிக் கொண்டிருந்தேன். பார்க்கிற ஒவ்வொரு இடத்திலும் பாம்பு இருப்பதைப்போல் எனக்குத் தோன்றியது. கட்டிலின் மேல் ஒரு பாம்பு. ஜன்னல் வழியாக ஏராளமான பாம்புகள் நெளிந்து கொண்டு உள்ளே வருகின்றன. பெட்டியின் மேல் ஒரு நல்ல பாம்பு தலையை உயர்த்தி நின்று கொண்டிருக்கிறது. அதற்கருகில் ஒரு பாம்பு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
“அய்யோ... பாம்பு... பாம்பு...” என்று நான் வாய்விட்டு அலற ஆரம்பித்தேன். அதைக்கேட்டு வீட்டிலிருந்தவர்கள் கொம்பை எடுத்துக் கொண்டு ஓடிவந்து அறை முழுவதையும் அலசோ அலசு என்று அலசினார்கள். பின்னாலிருந்து ஒரு பாம்பு படத்தை விரித்துக் கொண்டு என் தோளையே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று மனதில் நினைத்ததுதான் தாமதம், திடுக்கிட்டு நான் எழுந்துவிட்டேன்.
அப்படி எனக்கு வந்த கனவுகளில் நான் மாலதியை பாம்பின் உடலையும் பெண்ணின் முகத்தையும் கொண்டிருக்கும் ஒரு நாகக்கன்னியாகப் பார்த்தேன். அவள் முகத்தைப் பார்த்து ஆனந்தத்தில் நான் திளைத்த நானேதான் இப்போது அவள் உடலைப் பார்த்துப் பயந்தேன்.
காய்ச்சல் எனக்கு ஒரு மாதம் நீடித்தது. படிப்படியாக நான் குணமானேன். ஒருநாள் நடந்து செல்லும்போது மாலதி வசித்த வீட்டின் முன்னால் ‘வாடகைக்கு இந்த வீடு விடப்படும்’ என்றொரு அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். விசாரித்ததில் அவளுடைய தந்தைக்கு கண்ணூருக்குத் தொழில் மாற்றம் கிடைத்து விட்டதாகவும், அதனால் அவர்கள் குடும்பத்துடன் ஒரு வாரத்திற்கு முன்பு கண்ணூருக்குப் போய் விட்டதாகவும் சொன்னார்கள்.
அதற்குப் பிறகு நான் மாலதியைப் பார்க்கவேயில்லை. அவளுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாள் என்று சமீபத்தில் எனக்குத் தெரிய வந்தது. அவளிடம் தர வேண்டும் என்று எழுதி வைத்த அந்தக் கடிதத்தை என்னுடைய பழைய கடிதங்களுக்கு மத்தியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்து அதை நான் கிழித்தெறிந்தேன்.
நிஸாகந்தியின் நறுமணம் எங்கிருந்தாவது காற்றில் கலந்து வந்தால் என்னுடைய பதினேழாம் வயதில் நடந்த அந்த பைத்தியக்காரத்தனமான காதலைப்பற்றிய சுவாரசியமான நினைவுகள் என் மனதில் வலம் வர ஆரம்பிக்கும். அந்த வாசனையில் மூழ்கிக் கொண்டே தூக்கக் கலக்கத்துடன் பாடம் படிக்கும் ஒரு மாணவியின் முகமும் படம் விரிந்து நிற்கும் ஒரு நல்லபாம்பின் உருவமும் ஒரே நேரத்தில் என் மனதில் தோன்றும். இனம் புரியாத அந்த பயத்தின் காரணமாகத்தான் என்னுடைய தோட்டத்தில் நிஸாகந்தி செடியையே நான் வைக்கவில்லை.