பாலம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7235
அவர்கள் என்னென்னவோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். தொப்பி அணிந்திருந்த மனிதர் நதியைச் சுட்டிக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். என்னவோ நடக்கப் போகிறது என்பதை மட்டும் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
அதிகாரிகள் நகரத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்.
சிறிது நாட்களில் பாலம் அடைக்கப்பட்டது. அதன்மீது வாகனங்கள் செல்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதைப் பார்த்து உடலில் குருதியே நின்றுவிட்ட மாதிரி இருந்தது எங்களுக்கு. எதையோ இழந்துவிட்டதைப் போல் நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தோம்.
பாலத்தின் தூண்களில் பாசி படர ஆரம்பித்துவிட்டது. அதுவே பாலத்தின் பலவீனத்தையும் பறைசாற்றியது.
பாலத்தை முற்றிலுமாக அகற்றப் போகிறார்கள் என்பதை அறிந்த போது, அதனால் உண்டான அதிர்ச்சியை எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பூமியை இரண்டாகப் பிளப்பதைப் போல் நாங்கள் உணர்ந்தோம். அது உண்மையான தகவல்தான் என்பதைக் கூட எங்களால் நம்பமுடியவில்லை.
நதியின்மீது பாலம் இல்லை! கனவில்கூட எங்களால் அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. எப்படி முடியும்? யாரால் முடியும்?
மொத்த கிராமமும் சுடுகாடு மாதிரி ஆகிவிட்டது. இறுதியில் துயரமான அந்த நாள் வந்து சேர்ந்தது. நான்கு தலைமுறையினரைச் சந்தித்ததும்- அவர்கள் பாதங்கள் படிய நடந்து சென்றதுமான அந்தப் பாலம் எங்களை விட்டுப்போகப் போகிறது… பாலத்தின் கரையில் ஊரே கூடிவிட்டது. கூட்டத்தில் பெண்களும் குழந்தைகளும்... ஏன் முதியவர்களும்கூட இருந்தார்கள். பாலத்திற்கு இறுதி விடை கொடுக்க எல்லாரும் வந்திருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் என் கண்கள் இதுநாள்வரை சந்தித்திராத ஒரு மனித முகத்தைச் சந்தித்தது. ஒரு கிழவர்... வெள்ளை வேட்டியும், அரைக்கைச் சட்டையும் அணிந்திருந்தார். தோளில் ஒரு துண்டு, காதுகளில் கடுக்கன், தலையில் முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தது.
அது... அது... வேறு யாருமல்ல குஞ்ஞம்பு மாஸ்டர்தான். அவரை முதலில் கண்டபோது அவர்தான் குஞ்ஞம்பு மாஸ்டர் என்பதைக் கூட என்னால் நம்பமுடியவில்லை.
காலை பத்து மணிக்கே பாலத்தை இடிக்கும் வேலை ஆரம்பமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் ஒரே ஆரவாரம். பாலத்தின் மேல் பெரிய பெரிய இரும்புக் கம்பிகள் வந்து விழுந்தன. எங்களின் மனதில் நிரந்தரமாகக் குடி கொண்டிருக்கும் அந்தப்பாலம்...
சூரியன் வானத்தில் பயணம் செய்யச் செய்ய, பாலத்தின் தோற்றப் பொலிவும் மாறிக்கொண்டே இருந்தது. உழுத நிலத்தைப் போல காட்சியளித்தது பாலம்.
அப்போதுதான் எங்கிருந்தோ வந்த அந்த முதியவரை என் கண்கள் சந்தித்தன. தோளில் கிடந்த துண்டை வாயில் திணித்துக் கொண்டு தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தார் அவர்.
அவர் யாராக இருக்கக்கூடும்; அவர் எதற்காக அழவேண்டும் என்பதை அறியவேண்டும் என்ற ஆவல் எனக்குள் பிறந்தது. என்னுடைய துயரத்தை மறைத்துக் கொண்டு அவரருகில் போனேன் நான்.
வேறு யாரும் அந்த முதியவரைக் கவனித்தது மாதிரி தெரியவில்லை. ஒவ்வொருவருடைய கவனமும் வாழ்வை முடித்துக் கொள்ளப் போகும் பாலத்தின் மீதே இருந்தது. காதுகளில் பணியாட்களின் கூக்குரலும், இரும்புக் கம்பிகளின் ‘ணங் ணங்’ ஓசையும் ஒலித்துக் கொண்டிருந்தன. எத்தனை கொடூரமான ஓசைகள் அவை.
அருகில் சென்று நான் நிற்பதைக்கூட அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. மெதுவாகத் தோளைப் பற்றியவாறு அவரிடம் நான் கூறினேன்.
“மாமா...”
அவருடைய காதில் என் வார்த்தைகள் விழவில்லை போலிருக்கிறது. பாலத்தைப் பார்த்தவாறு இருந்த அவருடைய விழிகள் இரண்டிலுமிருந்தும் கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது.
மீண்டும் அவரின் தோளைக் குலுக்கி அழைத்தேன். அப்போதுதான் நான் கூறியது காதில் விழுந்த மாதிரி லேசாகத் தலையைத் திருப்பி என்னை அவர் பார்த்தார். கன்னங்கள் இரண்டிலும் அப்போதும் கண்ணீர் வழிந்து கொண்டுதானிருந்தது.
“மாமா, நீங்க எங்கேயிருந்து வந்திருக்கீங்க...?”
“...”
“மாமா... ஏன் அழறீங்க?”
நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கூறுவதாகத் தெரியவில்லை. பாலத்தின் கைப்பிடிச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழும் ஓசை காதில் கேட்டது. அதைக் கேட்டு முதியவரின் அழுகை மேலும் மேலும் பெரிதானது.
வெயில் படிப்படியாக கூடிக்கொண்டேயிருந்தது. தண்ணீரில் வெயில் பட்டு மேற்பகுதி ஒளிர்ந்து கொண்டிருந்தது. பாலத்தின்மீது போடப்பட்டிருந்த தார் சூரியனின் கடுமையைத் தாங்க முடியாமல் பாகென உருகிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் தங்களின் வீடு நோக்கிப் புறப்பட ஆரம்பித்தனர். கரையில் நின்றிருந்த மனிதக் கூட்டம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது.
பிற்பகல் ஆனபோது, சுமார் இருபது பேர் மட்டுமே அங்கு எஞ்சி நின்றனர். அவர்களிலும், பெரும் பகுதியினர் குழந்தைகளே.
இப்போதும், முதியவரின் பார்வை சூரியனை நோக்கியே இருந்தது. அவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிவது சிறிதும் நிற்கவில்லை. பாலத்தின் கடைசி நிமிடங்களைப் பார்ப்பதற்காக எங்கோயிருந்து வந்திருக்கும் இந்த மனிதர் யாராக இருக்கமுடியும்? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவருடைய கண்ணீருக்குப் பின்னால் ஏதோ ஒரு கதை இருக்கிறது. இந்தப் பாலத்திற்கும் முதியவருக்கும் இடையில் உள்ள அந்தத் தொடர்பு என்னவாக இருக்க முடியும்? அதை அறிய ஆசைப்பட்டது என் மனம்.
“மாமா, உங்களுக்குப் பசியொன்றும் எடுக்கலையா?”
நான் அவரின் அருகில் போய் நின்றேன். என்னைக் கண்டதும் தோளில் கிடந்த துண்டால் தன் கண்களை ஒற்றிக்கொண்டார். அப்போது அவருடைய உடலில் ஒரு நடுக்கம் இருப்பதை என்னால் உணர முடிந்தது.
“தேநீர் குடிப்போம், வாங்க...”
பாலத்திற்கு வெகு அருகிலேயே இருந்தது பீட்டரின் தேநீர்க் கடை. கடைக்கு அவரையும் அழைத்துச் செல்லலாம் என்று பார்த்தேன். அழைத்துப்போயாவது, கண்ணீருக்குப் பின்னால் மறைந்திருக்கும் அந்தக் கதையைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா!
ஆனால், மனிதர் வந்தால்தானே?
மீண்டும் அவர் என்மீது இருந்த பார்வையை அகற்றி பாலத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். இப்போது பாலத்தின் ஒரு கைப்பிடிச் சுவர் முழுமையாக அகற்றப்பட்டிருந்தது. இருந்தாலும், என்னுடைய முயற்சியை நான் கைவிடுவதாக இல்லை. இத்தனைக் காலமும் எங்கள் மத்தியில் இருந்துவிட்டு இதோ வாழ்க்கையை முடிக்கப் போகும் பாலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவராகத்தான் இந்த வயதான கிழவர் இருக்கமுடியும் என்று என் உள்மனம் கூறியது. அந்தக் கதையை என் மனம் அறியத் துடித்தது. என்னுடைய முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போய்விடவில்லை.
பசியை மறந்து தாகத்தை மறந்து கண்ணீர் வழியும் விழிகளுடன் வெயிலின் கொடுமையையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்கும் அந்த முதியவர் வேறு யாருமல்ல- குஞ்ஞம்பு மாஸ்டர்தான்.