கரடி வேட்டை - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7124
‘இப்போ...’ - நான் மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்: ‘அந்தக் கரடி வரப்போகுது. நான் குறிவச்சு சுடப்போறேன். கரடி அப்படியே கீழே விழப் போகுது...’
அடுத்த நிமிடம் எனது இடப்பக்கம் சிறிது தூரத்தில் பனியில் ஏதோவொன்று விழுவது என் காதுகளில் கேட்டது. நான் உயர்ந்து நிற்கும் அத்தி மரங்களுக்கிடையே பார்த்தேன். ஐம்பது அடி தூரத்தில் கருப்பாக, பெரிதாக என்னவோ தெரிந்தது. நான் குறி வைத்து காத்திருந்தவாறு மனதிற்குள் நினைத்தேன்.
“கரடி பக்கத்துல வராமலா இருக்கும்?’
நான் காத்திருக்க, கரடி தன் காதுகளை அசைத்துக்கொண்டே திரும்பி பின்னால் நடந்தது. இங்கிருந்து பார்க்கும்பொழுது அதன் பக்கவாட்டு தோற்றம் முழுமையாக நன்கு எனக்குத் தெரிந்தது. உண்மையாகவே அது சற்று பருமன்தான். ஆர்வம் அதிகம் உண்டாக, நான் துப்பாக்கியை வெடிக்கச் செய்தேன். என் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு ஒரு மரத்தின்மீது போய் பட்டது. புகைக்கு நடுவில் அந்தக் கரடி பின்னால் திரும்பி மரங்களுக்கு மத்தியில் மறைவதை நான் பார்த்தேன்.
'சரி...'- நான் நினைத்தேன்: 'எனக்கான வாய்ப்பு போயிடுச்சு. இனிமேல் என் பக்கம் அது வராது. ஒண்ணு என் நண்பர் அதைச் சுடணும். இல்லாட்டி வரிசையா நிக்கிற தப்பட்டை அடிக்கும் ஆட்களுக்கு அவர் அந்த வாய்ப்பை விட்டுத் தரணும். எது எப்படியோ இன்னொரு முறை எனக்கு அந்த வாய்ப்பு வராது.'
எனினும் நான் மீண்டும் துப்பாக்கிக்குள் குண்டுகளை நிறைத்து வைத்துக் கொண்டு உற்றுப் பார்த்தவாறு நின்றிருந்தேன். விவசாயிகள் சுற்றிலுமிருந்து உரத்த குரலில் கத்தினார்கள். வலது பக்கம் என் நண்பர் நின்றிருந்த இடத்திற்கு மிகவும் அருகில் ஒரு பெண் உரத்த குரலில் கத்தியது என் காதுகளில் விழுந்தது.
"கரடி இங்கே இருக்கு! இங்கே இருக்கு! இங்கே வாங்க. இங்கே வாங்க. ஓ! ஓ!அய்! அய்!"
நிச்சயம் அவள் கரடியைப் பார்த்திருக்க வேண்டும். நான் கரடி இந்தப் பக்கம் வருகிறதா என்று பார்ப்பதை நிறுத்திவிட்டு, வலது பக்கமிருந்த என் நண்பரைப் பார்த்தேன். அதே நேரத்தில் காலில் பனிக் காலணிகள் இல்லாமல் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு என் நண்பர் இருக்கும் இடத்தை நோக்கி பாதையில் வேமாக ஓடிக் கொண்டிருந்தான் டெம்யான். அவன் என் நண்பருக்குப் பின்னால் மறைந்து கொண்டு கையிலிருந்த குச்சியால் எதையோ சுட்டிக் காட்டினான். அடுத்த நிமிடம் என் நண்பர் தன்னுடைய துப்பாக்கியை உயர்த்தி டெம்யான் காட்டிய திசையில் விசையை அழுத்தினார்.
'கடைசியில'- நான் எனக்குள் சொன்னேன். 'அவர் அந்தக் கரடியைக் கொன்னுட்டாரு...'
ஆனால், என் நண்பர் கரடியை நோக்கி ஓடவில்லை. ஒன்று அவர் அந்தக் கரடியைத் தவறவிட்டிருக்க வேண்டும்; இல்லாவிட்டால் குண்டு சரியாக பாயாமல் இருந்திருக்கவேண்டும்.
'அந்தக் கரடி ஓடியிருக்கும்'-நான்த நினைத்தேன்: 'அது திரும்பவும் ஓடியிருக்கும். ஆனா, நிச்சயம் இன்னொரு முறை என்கிட்ட வராது- ஆனா, இது என்ன?’
ஏதோவொன்று வேகமாக புயலைப்போல என்னை நோக்கி வந்தது. எனக்கு மிகவும் அருகில் பனி பறப்பதைப் போல் நான் உணர்ந்தேன். நான் எனக்கு முன்னால் உற்றுப் பார்த்தேன். அந்தக் கரடி எனக்கு வலது பக்கத்தில் என் நண்பருக்குப் பின்னால் புதர்கள் வழியாகப் பாதையில் வேகமாக ஒருவகை பயத்துடன் ஓடி வந்து கொண்டிருந்தது. நான் இருக்கும் இடத்திலிருந்து ஆறு அடி தூரத்தில் இருக்கும் அது. அந்தக் கரடியை என்னால் முழுமையாகப் பார்க்க முடிந்தது. அதன் கறுப்பு நிற மார்பு,பெரிய தலை, அதிலிருக்கும் சிவப்புப் புள்ளி- எல்லாமே எனக்கு நன்கு தெரிந்தன. அது என்னை நோக்கி வேகமாக வந்தது. வரும் வழியில் பனியை நாலா பக்கங்களிலும் சிதறடித்தவாறு வந்தது. அதன் கண்களைப் பார்த்தபோது அது என்னைப் பார்க்க வில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், பயத்தால் உண்டான பதற்றத்தில் கண்ணை மூடிக்கொண்டு வேகமாக பாதை வழியே வந்த கரடி நேராக நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு முன்னால் நின்றிருந்த மரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. நான் என் துப்பாக்கியை உயர்த்தி சுட்டேன். அது எனக்கு மிகவும் அருகில் இருந்தது. துப்பாக்கி குறி தவறிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டேன். என் குண்டு அந்தக் கரடியைத் தாண்டி சென்று விட்டது. சொல்லப்போனால் நான் சுட்ட சத்தத்தையே அது கேட்க வில்லை போலிருக்கிறது, அதனால் அது மேலும் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நான் என் துப்பாக்கியைச் சற்று இறக்கி மீண்டும் சுட்டேன். இப்போது குண்டு கரடியின் தலையைத் தொட்டுச் சென்றது. நான் கரடியைச் சுட்டுவிட்டேன். ஆனால், அது இறக்கவில்லை.
அது தன் தலையை உயர்த்தி, காதுகளை பின்னோக்கி மடக்கிக் கொண்டு பற்களைக் காட்டியவாறு என்னை நோக்கி வந்தது.
நான் என் இன்னொரு துப்பாக்கியை எடுத்தேன். நான் அதைத் தொட்டதுதான் தாமதம், கரடி என் மீது வேகமாகப் பாய்ந்து என்னை பனி மீது தள்ளிவிட்டு என்னைத் தாண்டி ஓடியது.
'நல்லவேளை... நான் பிழைத்தேன்'-எனக்குள் நான் நினைத்தேன்.
நான் இருந்த இடத்தைவிட்டு எழ முயற்சித்தேன். ஆனால், ஏதோவொன்று என்னை அழுத்தி எழவிடாமல் செய்தது. என்னைத் தாண்டி வேகமாகப் போன கரடி மீண்டும் திரும்பிவந்து என்மீது விழுந்து தன்னுடைய முழு உடம்பாலும் என்னை அழுத்தியது. ஏதோ கனமான ஒன்று என்னைப் போட்டு அழுத்துவதாகவும், ஏதோ வெப்பமான ஒன்று என் முகத்தின்மீது படுவதைப் போலவும் நான் உணர்ந்தேன். என்னுடைய முழு முகத்தையும் தன் வாய்க்குள் கொண்டு போக அது முயல்வதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என் மூக்கு ஏற்கெனவே அதன் வாய்க்குள் இருந்தது. கரடியின் வாயின் உஷ்ணத்தை நான் முழுமையாக உணர்ந்தேன். கரடியின் இரத்த வாடை 'குப்'பென்று என்மீது அடித்தது. அது என் தோள்களைக் கீழ்நோக்கி தன் காற்பாதங்களால் அழுத்தி என்னைச் சிறிதும் அசையவிடாமல் செய்தது. என்னால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான். அதன்படி என் தலையை கரடியின் வாயிலிருந்து என் மார்பை நோக்கி கீழே இழுத்தேன். என் மூக்கையும் கண்களையும் காப்பாற்ற முனைந்தேன். ஆனால், கரடியோ பற்களை அதன்மீது பதிக்க முயன்று கொண்டிருந்தது.