கரடி வேட்டை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7124
நாங்கள் கரடி வேட்டைக்காகப் போயிருந்தோம்.என் நண்பர் ஒரு கரடியைச் சுட்டார். ஆனால் அவர் சுட்டது கரடியின் உடலில் ஒரு காயத்தை உண்டாக்கியது. அவ்வளவுதான். கரடியின் உடலிலிருந்து சிந்திய இரத்தம் துளித்துளியாக பனியில் தெரிந்தது. காயம்பட்ட கரடி ஓடிப்போய் விட்டது.
காட்டில் நாங்கள் அனைவரும் ஒரே கூட்டமாக நின்றிருந்தோம்.
கரடியைப் பின்பற்றி உடனடியாக நாங்கள் செல்வதா, இல்லாவிட்டால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துச் செல்வதா என்பதை நாங்கள் தீர்மானித்தாக வேண்டும். நாங்கள் அங்கிருந்த விவசாயிகளிடம் காயத்துடன் போன கரடியை அன்று பிடித்துவிட முடியுமா என்று கேட்டோம்.
“முடியாது... நிச்சயம் முடியாது” - என்றார் ஒரு வயதான விவசாயி. தொடர்ந்து அவர் சொன்னார்: “கரடியை கொஞ்ச நேரம் விட்டுடுங்க. அது சற்று ஓய்வு எடுக்கட்டும். ஐந்து நாட்கள்ல நீங்க அதைச்சுற்றி வளைச்சிட முடியும். இப்போ கரடியைப் பின் தொடர்ந்து போனா, நீங்க அதைத் தேவையில்லாம பயமுறுத்தினது மாதிரி இருக்கும். நிச்சயம் அது சாதாரண நிலைக்கு வராது.”
அப்போது ஒரு இளம் விவசாயி அந்த வயதான மனிதருடன் வாக்குவாதம் செய்தான். இப்போதே பின்பற்றிச் சென்றால் நிச்சயம் அந்தக் கரடியைப் பிடித்துவிடலாம் என்றான் அவன்.
“இந்த மாதிரி பனி இருக்குற நேரத்துல அந்தக் கரடி ரொம்ப தூரம் போக முடியாது. இன்னும் சொல்லப்போனா அந்தக் கரடி ரொம்பவும் தடியா வேற இருக்கு. சாயங்காலத்துக்குள்ள அது ஏதாவதொரு இடத்துல போய் அடங்கிடும். நாம பனிக் காலணிகளைப் போட்டுக்கிட்டு வேகமா போனா நிச்சயம் அந்தக் கரடியைப் பிடிச்சிட முடியும்.”
என்னுடன் இருந்த நண்பர் கரடியைப் பின்பற்றி உடனடியாகச் செல்வது என்ற எண்ணத்திற்கு எதிராக இருந்தார். சற்று தாமதித்து போவதே நல்லது என்ற கருத்தைக் கொண்டிருந்தார் அவர். நான் அவரைப் பார்த்து, “நாம தேவையில்லாம இந்த விஷயத்தைப் பற்றி விவாதம் செய்யவேண்டாம். உங்களுக்கு எப்படிப் பிரியமோ அப்படிச் செய்யிங்க. ஆனா, நான் டெம்யான் கூட சேர்ந்து கரடி போன வழியைப் பின்பற்றிப் போறேன். நாம கரடியைப் பிடிச்சிட்டோம்னா நல்லது தான். அப்படிப் பிடிக்காமப் போனா அதுனால நாம இழக்கப்போறது ஒண்ணுமில்ல. இப்பக்கூட அப்படியொண்ணும் நேரம் அதிகம் ஆகல. இன்னைக்கு நாம செய்யிற அளவுக்கு வேற வேலை எதுவும் நமக்கு இல்லைன்றதையும் நாம நினைச்சுப் பார்க்கணும்” என்றேன்.
திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது.
மற்றவர்கள் சக்கரமில்லாத வண்டிகளில் ஏறி கிராமத்திற்குத் திரும்பினார்கள். டெம்யானும் நானும் கொஞ்சம் ரொட்டியை எடுத்து வைத்துக் கொண்டு காட்டிலேயே இருந்துவிட்டோம்.
அவர்கள் எங்களை விட்டுச் சென்றபிறகு, டெம்யானும் நானும் எங்களின் துப்பாக்கிகளை எடுத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தோம். கதகதப்பான மேலங்கியை இடுப்பு வாருக்குள் விட்ட நாங்கள் கரடியின் பாதையை அடியொற்றி நடந்தோம்.
தட்ப வெட்பநிலை மிகவும் நன்றாக இருந்தது. எங்கும் பனி ஆக்கிரமித்திருந்தது. சுற்றிலும் அமைதி நிலவியது. பனிக் காலணிகளை அணிந்து நடப்பது என்பது ஒருவிதத்தில் மிகவும் சிரமமான ஒன்றாகவே இருந்தது. பனி மிகவும் அடர்த்தியாகவும் மென்மையாகவும் இருந்தது. காட்டில் பனிக் கட்டியாக உறைந்திருக்கவில்லை. முந்தைய நாள்தான் அது புதிதாகப் பெய்திருக்கிறது. அதனால் எங்களின் பனிக்காலணிகள் பனிக்குள் ஆறு அங்குல ஆழத்திற்குப் புதைந்தன. சில நேரங்களில் இன்னும் அதிகமாகக் கூட உள்ளே சென்றன.
தூரத்திலிருந்து பார்க்கும்போதே கரடி நடந்துசென்ற தடம் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அது எப்படியெல்லாம் நடந்து சென்றிருக்கிறது என்பதை அந்தத் தடத்தைக் கொண்டு எங்களால் தெரிந்துகொள்ள முடிந்தது. சில நேரங்களில் தன்னுடைய வயிற்றை வைத்துப் பனியில் உழுதுகொண்டு அது சென்றிருப்பதை எங்களால் அறிந்துகொள்ள முடிந்தது. பெரிய மரங்களுக்குக் கீழே கரடியின் சுவடுகள் நன்கு தெரிந்தன. ஆனால், சிறு செடிகள் அடர்ந்திருக்கும் புதர் பகுதிக்கு வந்தவுடன் டெம்யான் நின்றான்.
“நாம போற பாதையை விட்டு இப்போ விலகணும். அந்தக் கரடி அனேகமா இங்கே பக்கத்துலதான் எங்கேயாவது இருக்கணும். பனியைப் பார்க்கறப்போ உங்களுக்கே நல்லா தெரியும்- கரடி கீழ் நோக்கிப் போயிருக்குன்னு. நாம இந்தப் பாதையைவிட்டு சுற்றிப் பார்ப்போம். ஆனா, ரொம்பவும் அமைதியா நாம போகணும் எந்தவித சத்தம் எழுப்புவதோ, இருமுவதோ கூடாது. இல்லாட்டி நம்மளைப் பார்த்து அது உஷாராயிடும்.”
அதனால் நாங்கள் போய்க்கொண்டிருந்த பாதையை விட்டு, இப்போது இடது பக்கமாகத் திரும்பினோம். ஐந்நூறு கஜதூரம் நடந்திருப்போம். மீண்டும் கரடியின் சுவடுகள் எங்களுக்கு முன்னால் நன்கு தெரிந்தன. நாங்கள் அந்தச் சுவடுகளைப் பின்பற்றி நடந்தோம். அவை எங்களை ஒரு சாலையில் கொண்டுபோய் விட்டன. சாலையை அடைந்ததும் நாங்கள் நின்றோம். சாலையில் கரடி எந்தப் பக்கமாக போயிருக்கிறது என்பதை ஆராய்ந்தோம். இங்குமங்குமாக பனியில் கரடியின் பாதங்களும் நகங்களும் தெரிந்தன. சில இடங்களில் ஒரு விவசாயியின் பட்டையால் ஆன காலணியின் தடங்களும் தெரிந்தன. கரடி நிச்சயமாக கிராமத்தை நோக்கித்தான் சென்றிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.
சாலையில் நாங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது, டெம்யான் சொன்னான்: “இப்போ இந்த சாலையை நோட்டம் பண்ணி ஒரு பிரயோஜனமும் இல்ல. நாம அந்தக் கரடி எந்தப் பக்கம் போயிருக்குன்னு பார்ப்போம். பனியில இருக்குற தடத்தை வச்சு இடது பக்கம் போயிருக்கா இல்லாட்டி வலது பக்கம் போயிருக்கான்னு பார்க்கணும். அது எங்கேயாவது திரும்பியிருக்கணும். ஏன்னா, கிராமத்துக்குள்ள அது போக முடியாதே!”
கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் நாங்கள் அந்தச் சாலை வழியே நடந்தோம். அப்போது எங்களுக்கு முன்னால் கரடியின் காலடிச் சுவடுகள் சாலையை விட்டு விலகிச் செல்வதைப் பார்த்தோம். நாங்கள் அதையே உற்றுநோக்கினோம். எங்களுக்கே வியப்பாக இருந்தது! அது கரடியின் பாதம் பதிந்த தடம்தான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் அந்தச் சுவடுகள் சாலையைவிட்டு விலகி காட்டுக்குள் போகவில்லை. மாறாக, காட்டைவிட்டு விலகி சாலைக்குள் செல்வது மாதிரி இருந்தன. பாதத்தின் முன்பகுதி சாலையை நோக்கி இருந்தது.
"இது வேற கரடியா இருக்கணும்" என்றேன் நான்.
டெம்யான் அந்தப் பாதச்சுவடையே உற்றுப் பார்த்துவிட்டு என்னவோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான்.
"இல்ல..."- அவன் சொன்னான்: "அதே கரடியோட பாத அடையாளம்தான் இது. அது தந்திரத்தனமா இப்படியொரு காரியத்தைச் செஞ்சிருக்கு. சாலையைவிட்டு நடக்குறப்போ அது வேணும்னே பின்னோக்கி நடந்திருக்கு."