கரடி வேட்டை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7124
நாங்கள் அந்தக் கரடியின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி நடந்தோம். டெம்யான் சொன்னது சரியாகவே இருந்தது. கரடி பத்து எட்டுகள் பின்னோக்கி வைத்திருந்தது. அதற்குப்பிறகு ஒரு அத்தி மரத்திற்குப் பக்கத்தில் திரும்பி அது ஒழுங்காக முன்னோக்கி நடந்திருந்தது. டெம்யான் சிறிது நேரம் அந்த இடத்தில் நின்றுவிட்டுச் சொன்னான்:
“நாம இப்போ நிச்சயம் அந்தக் கரடி இருக்குற இடத்தைக் கண்டுபிடிச்சிட முடியும். நமக்கு முன்னாடி ஒரு சதுப்பு நிலம் இருக்கு. அந்த இடத்துல நாம பதுங்கிக்கணும். இப்போ நாம இந்த இடத்தை ஒரு சுற்று சுற்றி வருவோம்!”
அத்தி மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியை நாங்கள் வலம் வந்தோம். நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். சொல்லப்போனால் இதற்கு மேல் நடப்பதற்கே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் புதர் வழியாக மெதுவாக நகர்ந்தேன். அப்போது என்னுடைய பனிக் காலணிகள் அதற்குள் சரியாக மாட்டிக்கொண்டன. எனக்கு முன்னால் ஒரு சிறு அத்திச்செடி நின்றிருந்தது. எனக்கு நடந்து பழக்கமில்லை யாதலால், என்னுடைய பனிக் காலணிகள் சறுக்கின. அதன் விளைவாக சறுக்கியபடி நான் பனியால் மூடப்பட்ட ஒரு மரத்துண்டிற்கு அருகில் வந்தேன். நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். என்னுடைய உடம்பிலிருந்து வியர்வை அருவியென ஒழுகிக் கொண்டிருந்தது. நான் என் உடம்பிலிருந்த உரோம ஆடையை நீக்கினேன். அதே நேரத்தில் டெம்யான் படகில் சவாரி செய்வதைப் போல மெதுவாக நடந்தான். அவனுடைய பனிக்காலணிகள் எந்தவித பிரச்சினையுமில்லாமல் இயங்கின. எந்தப் புதரிலும் அவை சிக்கிக் கொள்ளவுமில்லை. சறுக்கிவிடவும் இல்லை. சொல்லப்போனால் என்னுடைய உரோம ஆடையை எடுத்த அவன் தன்னுடைய தோள்மீது அதைப் போட்டுக்கொண்டு என்னை வேகமாக நடக்கும்படி சொன்னான்.
மேலும் இரண்டு மைல்கள் நடந்தோம். சதுப்பு நிலத்தின் மறுபக்கத்தை நாங்கள் அடைந்தோம். நான் மிகவும் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். என்னுடைய பனிக்காலணிகள் கால்களைவிட்டு கழன்றுகொண்டே இருந்தன. என்னுடைய பாதங்கள் நடக்க முடியாமல் தடுமாறின. திடீரென்று எனக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்த டெம்யான் நின்று தன்னுடைய கைகளை ஆட்டினான். நான் அவனுக்கு மிகவும் நெருக்கமாக வந்தேன். அவன் இலேசாக குனிந்து தன் கையால் சுட்டிக் காட்டியவாறு மெதுவான குரலில் சொன்னான்:
“புதருக்கு மேலே பறவைகள் சத்தம் போடுறது உங்களுக்குக் கேட்குதா? தூரத்துல இருக்குற கரடியை அந்தப் பறவைகள் பார்த்திருக்கணும். நிச்சயம் அந்தக் கரடி அங்கேதான் இருக்கு...”
நாங்கள் திரும்பி மேலும் அரை மைலுக்கு சற்று அதிகமாக நடந்தோம். மீண்டும் நாங்கள் பழைய பாதைக்கே வந்து சேர்ந்தோம். சுருக்கமாகச் சொல்லப்போனால் நாங்கள் அந்தக் கரடி இருக்கும் இடத்தைச் சுற்றித்தான் இருக்கிறோம். நாங்கள் விட்டுப்போன பாதைக்கு அருகில்தான் அது எங்கோ இருக்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. நாங்கள் நின்றோம். நான் என்னுடைய தொப்பியைக் கழற்றிவிட்டு, என் ஆடைகளை தளர்த்தி விட்டேன். நீராவியில் குளித்துவிட்டு வந்த மனிதனைப் போல உஷ்ணத்துடனும் நீரில் மூழ்கிய எலியைப் போல நனைந்துபோயும் நான் இருந்தேன். டெம்யான் கூட மிகவும் வியர்வையில் நனைந்து போயிருந்தான். அவன் தன் சட்டையின் கைப்பகுதியைக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
“சரி, சார்... நாம நம்ம வேலையை செய்திருக்கோம். இப்போ நமக்கு ஓய்வு தேவை.”
அந்தி நேரத்துச்சிவப்பு காட்டிலிருந்த மரங்கள் வழியாகத் தெரிந்தது. நாங்கள் எங்களின் பனிக் காலணிகளைக் கழற்றி அவற்றின் மீது உட்கார்ந்தோம். பைகளைத் திறந்து ரொட்டியையும் உப்பையும் வெளியே எடுத்தோம். முதலில் நான் கொஞ்சம் பனியையும் அதற்குப்பிறகு கொஞ்சம் ரொட்டியையும் சாப்பிட்டேன். ரொட்டி மிகவும் ருசியாக இருந்தது. இந்த அளவிற்கு ருசியான ரொட்டியை இதற்கு முன்பு சாப்பிட்டதாக நான் உணரவில்லை. நன்றாக இருட்டும்வரை நாங்கள் அந்த இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுத்தோம். பிறகு நான் டெம்யானிடம் “கிராமம் மிகவும் தூரத்தில் இருக்கிறதா?” என்று கேட்டேன்.
“ஆமாம்... இங்கிருந்து கிராமம் எட்டு மைல் தூரத்துல இருக்கு. இன்னைக்கு ராத்திரி நாம அங்க போயிருவோம். ஆனா, இப்போ நாம ஓய்வெடுக்கணும். உங்க உரோம மேலாடையைப் போட்டுக்கோங்க சார். ஜலதோஷம் பிடிச்சிக்கப் போவுது” என்றான் அவன்.
டெம்யான் அத்தி மரத்திலிருந்து கிளைகளை ஒடித்து பனிமீது படுக்கை அமைத்தான். நாங்கள் இருவரும் அருகருகில் படுத்தோம். எங்கள் தலைகளை எங்களின் கைகள் மீது வைத்துக்கொண்டோம். நான் எப்படித் தூங்கினேன் என்று தெரியவில்லை. இரண்டு மணி நேரம் கழித்து, ஏதோ ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.
நான் எங்கு இருக்கிறேன் என்பதே தெரியாமல் என்னை மறந்து உறங்கியிருக்கிறேன். என்னைச்சுற்றிப் பார்த்தேன். எனக்கே வியப்பாக இருந்தது. நான் ஏதோ ஒரு ஹாலில் இருந்தேன். பிரகாசித்துக் கொண்டிருந்த வெண்மையான தூண்கள் சுற்றிலும் இருந்தன. நான் தலையை உயர்த்தி வெண்மையான பனிப் படலத்தினூடே தெரியும் இருட்டையும் அதற்கு மத்தியில் பளிச்சிடும் வண்ண விளக்குகளையும் பார்த்தேன். கூர்மையாகப் பார்த்த பிறகுதான் நானே சுய உணர்விற்கு வந்தேன். நாங்கள் காட்டில் இருப்பதையே அப்போதுதான் உணர்ந்தேன். ஒரு ஹால், தூண்கள் என்று நான் நினைத்தவை பனி படர்ந்த மரங்கள் என்பதே அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. வண்ண விளக்குகள் என்று நான் நினைத்தவை மரக்கிளைகளுக்கு நடுவில் கண்சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் என்பதே அப்போதுதான் உணர்ந்தேன்.
மரக்கிளைகள் பனி விழுந்து மிகவும் கனமாகக் காணப்பட்டன. டெம்யான் பனியால் மூடப்பட்டிருந்தான். என்னுடைய உரோம மேலாடை முழுவதும் பனியாக இருந்தது. அந்தப் பனி முழுவதும் மரங்களிலிருந்து விழுந்தது. நான் டெம்யானை எழுப்பினேன். இருவரும் எங்களின் பனிக்காலணிகளை எடுத்து அணிந்து புறப்பட்டோம். காடு மிகவும் நிசப்தமாக இருந்தது. எந்த ஒரு ஓசையும் எங்கும் கேட்கவில்லை. எங்களின் பனிக்காலணிகள் பஞ்சைப் போன்ற மென்மையான பனியில் படும்போது உண்டான சத்தம் மட்டுமே கேட்டது. அவ்வப்போது பனியில் உராயும் மரங்கள் உண்டாக்கிய சத்தமும் கேட்டது. ஒரே ஒருமுறை மட்டும் ஏதோ ஒரு உயிரினத்தின் ஓசை எங்கள் காதுகளில் விழுந்தது. ஏதோ ஒன்று எங்களுக்கு மிகவும் சமீபத்தில் ஓசை உண்டாக்கியவாறு வேகமாக ஓடியது. அது நிச்சயம் கரடியாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், ஓசை கிளம்பிவந்த இடத்தைப் போய்ப் பார்த்தால் அங்கு முயல்களின் பாதச் சுவடுகள் தெரிந்தன. அந்த இடத்தில் ஏராளமான ஆஸ்பென் மரங்கள் பட்டை உரிக்கப்பட்டு நின்றிருந்தன. அந்தப் பட்டைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பல முயல்களை நாங்களே பார்த்தோம்.