கண்ணாடி வீடு - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6873
நான் என்னிடம் இருப்பவற்றையெல்லாம் உங்களுக்கு முன்னால் திறந்து வைத்திருக்கிறேன். நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லையா? இன்னுமா?
ஒரு அற்புத பொருளைப் போல மனிதர்கள் அவனைப் பார்த்தார்கள். அவர்களுடைய சந்தேகம் மேலும் அதிகமாயிருந்தது. அவன் மிகப்பெரிய திருடன் என்பதற்கு மேலாக அவன் ஒரு பைத்தியக்காரன் என்றும் அவர்கள் சொன்னார்கள். அவன் வெளிப்படையாக அவர்களிடம் கெஞ்சினான். நான் அன்னியன் அல்ல. என்னுடைய வீட்டில் ரகசியங்கள் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதற்காக நான் கண்ணாடியால் ஆன சுவர்களைக் கொண்ட வீட்டைக் கட்டினேன். அதற்குப் பிறகும் நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. என் முகத்தை உற்றுப்பாருங்கள். நான் உங்களுக்கு சொந்தமான மனிதன். சில நாட்கள் உங்களிடமிருந்து விலகியிருந்தேன். அவ்வளவுதான். ஏதோ அழகான தவறுகளுக்குப் பின்னால் கைகளை நீட்டிக் கொண்டு போனேன். இதோ... நான் திரும்பி வந்திருக்கிறேன்.
அவர்கள் அவனுடைய வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்கவேயில்லை. அவனைக் கிண்டல் பண்ணினார்கள். சிரித்தார்கள். வெளிப்படையாக வெறுத்தார்கள். திட்டினார்கள். திருடன் என்றும்; பைத்தியம் என்றும் அழைத்தார்கள். சுற்றிலும் இருந்தவர்கள் எல்லோரும் எதிரிகள் என்று தோன்றியதும், அவன் தன்னுடைய கண்ணாடி வீட்டிற்குள் நுழைந்து கதவை மூடிவிட்டுப் படுத்துவிட்டான். அவனுடைய கண்ணீர் கண்ணாடிச் சுவர்கள் வழியாகக் கடந்து வந்த பிரகாசத்தில் ஒளிர்ந்தது.
இந்த உலகமும் பொய்யானது. இங்கும் உண்மை இல்லை. இங்கும் ஆனந்தம் இல்லை. இரவில் எல்லோரும் தூங்கிய பிறகு, அவன் தன்னுடைய கண்ணாடி வீட்டை விட்டு வெளியேறினான்.
புறப்பட்ட இடத்திற்கே திரும்ப போகக் கூடாது. அது நரகம். பிறகு எங்குதான் போவது ?
எங்கு ?