கண்ணாடி வீடு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6873
அறுவடை முடிந்திருந்த வயலில் பனித்துளிகள் விழுந்த சிறு நெல்செடிகள் மீது அதிகாலை நேரத்தின் குளிர்ந்த காற்று வீசியடித்துக் கொண்டிருந்தது. இளம் வெயிலின் மங்கலான கீற்றுகள் ஆங்காங்கே ஒளிந்து கொண்டும் மறைந்து கொண்டும் நகர்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். காகங்கள் கரைவதையும் வண்ணாத்திக் கிளிகள் பாட்டு பாடுவதையும் அவன் கேட்டான். வானத்தில் மாடப்புறாக்கள் கூட்டமாகப் பறந்து சென்றன.
கீழே பூமியில் வெள்ளைக் கொக்குகள் வரப்பில் அடி வைத்து அடி வைத்து நடந்து கொண்டிருந்தன. அவனுக்கு மகிழ்ச்சி உண்டானது. வாழ்க்கையில் முதலில் பார்க்கும் பாதைகள் ஏற்கெனவே அறிமுகமானவையாக இருக்கின்றன. சேறு, வைக்கோல் ஆகியவற்றின் வாசனையைக் கொண்ட இங்குள்ள மனிதர்கள் அவனுக்கு மிகவும் வேண்டியவர்கள். நடக்க நடக்க, அறிமுகம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆழமான ஒரு உறவு அது.
வீடுகளின் களங்களில் கதிர்களை மிதிப்பதும், உதிர்ப்பதும் நடக்கின்றன. காற்றிற்குப் புது நெல்லின் மணம் இருக்கிறது.
இந்த கிராமம் என்னுடையது. இந்த மண்ணின் அம்சம் நான். என்னுடைய உலகம் இது. இதன் எல்லைகளுக்கு வெளியே உலகம் இல்லை. இதுவரையில் ஏதோ மாய வலைக்குள் நான் சுற்றித் திரிந்தேன். கருப்பு நிறத்தில் பைண்ட் செய்யப்பட்ட தடிமனான புத்தகங்களும் கணுக்கால்களை மூடும் கருப்பு நிற ஆடைகளும் உள்ள ஒரு கபட உலகத்தில்.
குளத்தில் குளித்து முடித்து ஈரத்துணி அணிந்து நடந்து செல்லும் இளம் பெண்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது அவன் கனவு கண்டான். இவர்கள் என்னுடைய ஆட்கள் - உறவினர்கள். இவர்களில் ஒருத்திக்கு நான் புடவை கொடுப்பேன். பிறகு... இந்த கிராமத்திலிருக்கும் ஒரு சிறிய வீட்டில், ஒரு சிறிய அறையில், ஒரு சிறிய கட்டிலில் நான் என்னுடைய சுகங்களின் சொர்க்கத்தை உண்டாக்குவேன். அந்த வீட்டின் சுவர்களை கலைத்தன்மைகள் கொண்ட ஓவியங்களால் அலங்காரம் செய்ய வேண்டும். வாசலில் நல்ல வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட நாற்காலிகள் இருக்க வேண்டும். முற்றத்தில் பூச்செடிகள் இருக்க வேண்டும். ஒரு துளசித் தரையும். முற்றத்தில் வெள்ளை மணல் கொண்டு வந்து போடவேண்டும். அநத் மணலை வாரித் தின்று என் மகன் வளர வேண்டும். அவனுக்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும்.
ஜரிகை போட்ட துணிகளைத் தலையில் சுற்றிக் கட்டிக் கொண்டு, வெள்ளி கட்டிய கழிகளுடன் தேநீர்க் கடையை நோக்கி நடக்கும் வயதான மனிதர்களை அவன் பார்த்தான். இல்லத்தரசர்கள்... வேலை செய்வதற்கும் செய்ய வைப்பதற்கும் பிள்ளைகள் இருப்பார்கள். இந்த மண்ணில் நீண்ட காலம் கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு இப்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் அப்படியொரு சூழ்நிலை வரும். வீட்டுக் காரியங்களை என் மகன் பார்ப்பான். அவன் மிகவும் சந்தோஷப்பட்டான்.
ஆனால், இதற்கெல்லாம் ஒரு ஆரம்பம் வேண்டாமா?
எதற்காக இல்லை?
இது என்னுடைய கிராமம். இங்குதான் என்னுடைய மூதாதையர்கள் பிறந்ததும் வளர்ந்ததும். அவர்களுடைய உழைப்பின் மணம் இந்த மண்ணில் இருக்கிறது. அவர்களுடைய ரத்தம் இங்கே விழுந்து மண் சிவந்திருக்கிறது. அவர்களுடைய பின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தான் இங்குள்ள மனிதர்கள். அண்ணன்மார்கள், அக்காமார்கள், தங்கைமார்கள், மாமன்மார்கள்...ஓ! உங்கள் மீது நான் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறேன்! எந்த அளவிற்கு! நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் ஏன் என்னை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை? நங்கள் ஏன் மகிழ்ச்சியடையவில்லை? இழந்துவிட்டதைத் திரும்ப அடைந்துவிட்டோம் என்ற சந்தோஷம் உங்களிடம் உண்டாக வேண்டும். இளவரசனின் திரும்பி வரல் இது!
ஆனால், அவனை யாரும் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. கடந்து சென்றவர்கள் ஒவ்வொருவரும் அவனை சந்தேகத்துடன் பதைபதைப்புடனும் பார்த்தார்கள். அவனுடைய சோர்வடைந்து போயிருந்த கண்கள் அவர்களை நோக்கித் திரும்பியபோது மனம் நிறைய ஒரே ஒரு வேண்டுகோளே இருந்தது. நீங்கள் என்னை அறிமுகமாகும் எண்ணத்துடன் பாருங்கள். அன்பு வேண்டாம்... உதவி வேண்டாம்... அவையெல்லாம் வழியில் தானாகவே கிடைக்கும். எனக்கு அறிமுகம் மட்டும் போதும்... அதை மறுத்து விடாதீர்கள்.
அவனுடைய வேண்டுகோள் யாரும் பொருட்படுத்தாமல் அலைந்து கொண்டிருந்தது. ஆட்கள் அவனை மீண்டும் சந்தேகத்துடன் பார்த்தார்கள். பெண்களும் குழந்தைகளும் அவனைக் கண்டபோது பயந்து ஒதுங்கி வேறு பக்கமாக நடந்து சென்றார்கள். அவனுக்கு ஆச்சரியமும், அதைவிட வருத்தமும் உண்டானது.
என்னிடம் என்ன இருக்கிறது இந்த அளவிற்கு பயப்படுவதற்கு? இந்த அளவிற்கு வெறுப்பதற்கு? இப்படி விலகி நடப்பதற்கு? தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள் மனிதர்களே! நான் அன்னியன் அல்ல. உங்களுடைய உறவினன்... சொந்தக்காரன்...
வசிக்க இடம் தேடி அவன் அலைந்து திரிந்தான். இடம் கிடைக்கவில்லை. வாடகை கொடுக்க அவன் தயாராக இருந்தான். விலை கொடுப்பதற்கு அவன் தயாராக இருந்தான். எனினும், அவனுக்கு வீடு கிடைக்கவில்லை. ஒரு அறையைக்கூட கொடுப்பதற்கு யாரும் மனம் வைக்கவில்லை. அறிமுகமில்லாத ஆளுக்கு வீடு தருவதை அவர்கள் விரும்பவில்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் என்றார்கள். அவன் ஏதோ குற்றவாளியாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருப்பவனாக இருக்க வேண்டும் என்று அவர்கள் சந்தேகப்பட்டார்கள். அவர்களுக்கு இதற்கு முன்பு தெரிந்திராத ஆள் தேவையில்லை. வெளியூர் ஆள் வேண்டாம்.
ஆனால், நான் இதற்கு முன்பு தெரியாதவன் அல்ல. உங்களுடைய சொந்தக்காரன் தான். அவன் அவர்களுடைய கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். புல், கொடிகளில் இருந்த பனித்துளிகளைப் பிரகாசிக்கச் செய்து கொண்டு, வெயில் அதிகரித்த போது அவனுடைய கண்ணீர்த் துளிகளும் பிரகாசித்தன.
மழை இல்லாத காலம... ஏதாவது மரத்திற்கு அடியில் படுத்துத் தூங்கலாம். குளிரைத் தாங்கிக் கொள்ளலாம்.
ஆனால், அந்தச் சூழ்நிலை வரவில்லை. சிவந்து கூர்மையாக இருந்த கண்களையும், பெரிய மீசையையும், தாடியையும் கொண்டிருந்த ஒரு தடிமனான மனிதன் அவனுக்குத் தங்குவதற்கு இடம் தந்தான். அந்த மனிதனும் வெளியூர்க்காரன் தான். இந்த கிராமத்திலிருக்கும் மனிதர்கள் வெளியூர்க்காரர்களைச் சந்தேகத்துடனே பார்த்தார்கள். அவன் இங்கு தனியாக இருப்பவன். இங்கு வந்து நீண்ட நாடகள் ஆகியும் நண்பர்கள் யாரும் இல்லை. பல நாட்களாக தனிமையின் வேதனையைத் தின்று வாழ்ந்து கொண்டிருப்பதாக அந்த தடிமனான மனிதன் சொன்னான். அவர்கள் தூங்குவதற்காகப் படுத்தார்கள். தடிமனான மனிதன் சொன்னதைக் கேட்டபோது, அவனுக்கு இரக்கம் தோன்றியது. அதற்குப் பிறகு எதுவும் தோன்றவில்லை.