
உங்களுடைய கவலையில் பங்கெடுக்க என்னால் முடியவில்லை நண்பரே! காரணம் - நம்முடைய கவலைகள் வெவ்வேறானவை. சில நாட்களில் இங்கேயிருந்து நான் விலகிப் போயிருந்தேன். அவ்வளவுதான். இது என்னுடைய கிராமம். மனதில் தோன்றிய இந்த விஷயங்களை அவன் கூறவில்லை. கூறினால் அவனுக்கு இடம் தந்தவன் கிண்டல் பண்ணி சிரிப்பான் என்று அவன் பயந்தான். மறுநாள் முதல் அவனைப் பற்றிய சந்தேகம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதை அவன் பார்த்தான். தடிமனான மனிதன் மீது கொண்டிருந்த பகை தன்மீதும் திரும்புவதை அவன் பார்த்தான். இந்த தாடிக்காரன் இங்கிருந்து போயிருந்தால் நன்றாக இருக்குமே என்று அவன் ஆசைப்பட்டான். நன்றி கெட்ட செயல் என்றாலும், அப்படி ஆசைப்படாமல் இருக்க முடியவில்லை.
கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களின் நட்பைச் சம்பாதிக்க அவன் முயற்சித் தான். ஆனால், விளைவோ தோல்வியாக இருந்தது. அவன் பலரிடமும் பேசினான். அவர்கள் எல்லோரும் ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டு, அவனிடமிருந்து விலகி ஓடுவதுதான் உண்மையிலேயே நடந்தது. அவர்களுடைய கண்களில் சந்தேகமும் பயமும் இருந்தன. இறுதியில் தனக்குள் என்னவோ ரகசியங்கள் மறைந்திருக்கின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான்.
சில நாட்களுக்குப் பிறகு அவனுடைய விருப்பங்களில் ஒன்று நடந்தது. தடிமனான மனிதன் வீட்டை அவனிடம் ஒப்படைத்து விட்டு, அந்த ஊரை விட்டுக் கிளம்பினான். போக ஆரம்பித்த போது தடியன் சொன்னான். இனி நான் திரும்பி வரமாட்டேன்.
அவனுக்கு மகிழ்ச்சி உண்டானது. இனியாவது அவர்களுடைய சந்தேகங்கள் தீரும். எனக்கு வேண்டியவர்கள் என்மீது சந்தேகப்படும் மோசமான சூழ்நிலை மாறும். என்னுடைய மனிதர்களுடன் சேர்ந்து அவர்களில் ஒருவனாக நான் இந்த கிராமத்தில் வாழ்வேன். இங்கு வேலை செய்வேன். இங்குதான் என்னுடைய சொர்க்கம் இருக்கிறது.
அவனுடைய எதிர்பார்ப்புகள் அளவற்றவையாக இருந்தன. தாடிக்காரன் போன பிறகும், மனிதர்கள் அவனிடம் நெருங்கவில்லை. ஒரு காட்சிப் பொருளையோ, காட்டு மிருகத்தையோ பார்ப்பதைப் போல அவர்கள் அவனைப் பார்த்தார்கள். அவனுடைய வீட்டை அவர்கள் சந்தேகத்துடன் பார்த்தார்கள். அவன் பயங்கரமான ஏதோ ரகசியங்களின் இருப்பிடம் என்று அவர்கள் நினைத்தார்கள்.
அவனுடைய கவலை தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. நான் என்னுடைய இதயத்தை உங்களுக்கு முன்னால் திறந்து வைத்திருக்கிறேன். நீங்கள் அதைப் பார்க்க மறுக்கிறீர்கள். இதோ என்னுடைய ரத்தம். இது உங்களுடையதுதானே என்று பாருங்கள். என்னுடைய ஆடைகள் வேறு மாதிரி இருப்பதை உணர்ந்து, நான் அதைக் கழற்றி எறிந்து விட்டு இங்கு வந்திருக்கிறேன். அப்போது எனக்கும் உங்களுக்குமிடையே ஏதாவது வேறுபாடு இருக்குமா? தோற்றமும் நடவடிக்கைகளும் ஒரே மாதிரிதானே இருக்கின்றன! எனினும், நீங்கள் என்மீது ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? என்னைப் புரிந்து கொள்ளுங்கள். இது நான்தான்.
பலன் எதுவும் உண்டாகவில்லை. அவன் ரகசியங்களின் இருப்பிடம் என்றும்; அவனுடைய வீடு கெட்ட செயல்களின் மையம் என்றும் அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் அதை ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளவும் செய்தார்கள். மெதுவாக தங்களுக்குள் கூறிக் கொண்டிருந்த விஷயங்களை அவன் காதில் விழும்படி அவர்கள் கூறவும் ஆரம்பித்தார்கள்.
குளிர்ந்த காற்றும் இருட்டும் குள்ள நரிகளின் ஊளையும் மட்டுமே இருந்த இரவு வேளைகளில் அவன் கவிழ்ந்து படுத்து அழுதான். அவர்களுடைய சந்தேகத்தைத் தீர்ப்பதற்கு என்ன வழி? அவனுடைய சிந்தனை அந்தப் பிரச்சினையில் மட்டுமே தங்கி நின்றது. எவ்வளவு யோசித்தும், ஒரு வழியும் தெரியவில்லை. என்னவெல்லாமோ கூறியும், அவர்கள் நம்பத் தயாராக இல்லை. நாக்கு குழைந்து போய் விட்டிருக்கிறது. வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போயிருக்கிறது. அவன் இருட்டையே பார்த்தான். எதுவும் இல்லை. முழுமையான இருள் மட்டும்தான் இருந்தது. எதற்கும் பதில் இல்லை. இறுதியில் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. என்னை அவர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். என் வீட்டில் கெட்ட செயல்களோ ரகசியங்களோ நடக்கின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த வீட்டிற்கு சுவர்கள் இல்லாமல் இருந்தால் அவர்களுடைய சந்தேகம் இல்லாமல் போய்விடும். அப்போது என் வீட்டில் என்ன நடக்கிறது என்று அவர்கள் தெரிந்து கொள்ளலாமே! ஆனால், காற்றும் மழையும் வரும்போது எப்படி இருப்பது? அப்போது சுவர்கள் இல்லாமல் இருக்க முடியாதே!
அதைத் தொடர்ந்து அவன் கண்ணாடிச் சுவர் கொண்ட வீட்டை உண்டாக்கினான். முற்றிலும் நன்கு தெரியக்கூடிய கண்ணாடியால் ஆன சுவரைக் கொண்ட வீடு. அதைக் கட்டுவதற்கு ஏராளமான பணம் செலவானது. அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னிடம் ரகசியங்கள் எதுவும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். அப்போது என்னைப் புரிந்து கொள்வார்கள். என்னை அவர்களுடைய கூட்டத்தில் சேர்த்துக் கொள்வார்கள். என்னுடைய விருப்பங்கள் நிறைவேறும். கனவுகள் நனவாகும். இனிமேல் நான் அழ வேண்டியதில்லை. எந்த நேரத்திலும்... எந்த நேரத்திலும்...
வீட்டின் வேலை முடிந்து விட்டது. படுக்கையறை, சுவர்கள் இருந்த இடத்தில் கண்ணாடியாலான சுவர்களாலான ஒரு வீடு. சூரிய ஒளி அதில் விருப்பம்போல பயணித்தது. நிலவும் அப்படித்தான். அதற்குள் இருந்த எந்தவொரு பொருளும் ரகசியம் இல்லாததாக ஆனது. எல்லாவற்றையும் வழியில் நடந்து செல்பவர்கள் பார்க்கலாம். சமையலறை, படுக்கையறை எல்லாவற்றையும் பார்க்கலாம். அவனுக்கு மகிழ்ச்சி உண்டானது. உங்களுடைய சந்தேகப் பார்வைக்கு எதிராக இருக்கும் ஒரு சவால்தான் இந்த வீடு. நீங்கள் என்னைச் சந்தேகித்தவர்கள். இப்போது புரிந்து கொள்ளுங்கள். சிவந்த கண்களைக் கொண்ட தாடிக்காரனைப் போல அன்னியம் அல்ல நான். வெறுக்கப்பட வேண்டியவன் அல்ல. என்னிடம் ரகசியங்கள் இல்லை. இதோ... எல்லாவற்றையும் உங்களுக்கு முன்னால் பார்க்கும்படி வைத்திருக்கிறேன். பாருங்கள். கூர்ந்து பாருங்கள். போதும் என்று தோன்றும்வரை பாருங்கள்.
அவன் சிரித்தான்.
அவனுடைய கண்ணாடி வீடு தலையை உயர்த்திக் கொண்டு கம்பீரமாக நின்றிருந்தது - வன்முறைக்கு முன்னால் தளர்ந்தும், தளரத் தயாராகாமல் இருக்கும் மனிதத் தன்மையைப்போல...
மனிதர்கள் ஆச்சரியத்துடன் அவனுடைய வீட்டைப் பார்த்தார்கள். எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுடைய பார்வையில் இல்லை. எதையும் தேட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆனால், சந்தேகம் இருந்தது - ஆச்சரியம் இருந்தது - வெறுப்பு இருந்தது. அவர்களுடைய கண்களில் உணர்ச்சிகளைப் பார்த்தபோது அவன் அதிர்ந்துபோய் விட்டான். அவர்கள் சந்தேகப்படுகிறார்கள் - ஆச்சரியப்படுகிறார்கள் - வெறுக்கிறார்கள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook