விருந்தாளி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6920
கட்டிலில் கிடந்த ஆள் எழுந்து உட்கார்ந்து கொண்டு சொன்னான்: "நான் நேத்து பார்த்த படத்தில கதாநாயகன், தற்கொலை செய்துகிட்ட தன் தம்பியோட போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு, உடம்புல இருந்த தலையைச் சுத்தியிருந்த பேண்டேஜ் துணியை அவிழ்த்து, மூளையை மட்டும் கையில எடுத்துக்கிட்டு சவ அடக்கத்துக்கு வந்தவங்களுக்கு மத்தியில நடக்கிறான். தன்னோட ஒரு விரலை மூளையை நோக்கி சுட்டிக் காட்டியவாறு, அழுதுக்கிட்டே அவன் கேட்பான்: "கண்ணா, இது நீயாடா? இதுதானா நீ?” ''
"நீ பார்க்காத ஒரு படத்தோட பேரைச்சொல்லு...'' ஒருவன் சொன்னான்.
சினிமா பார்த்த ஆள் கட்டிலில் மீண்டும் சாய்ந்து கொண்டான். அவன் சொன்னான்: "உங்களுக்கு விருப்பமில்லைன்னா கேட்க வேண்டாம். அந்தக் காட்சியை நான் பார்த்தப்போ, என்னை மறந்து நான் அழுதுட்டேன். அந்தக் காட்சியில சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கு...''
"உனக்கு தெய்வம் அருள்புரியட்டும்...'' ஒரு ஆள் சொன்னான்.
"அவனுக்கு ஒரு ஸ்மால் ஊத்திக்கொடு...''
நான் சொன்னேன்: "நான் ஒரு முறை போஸ்ட்மார்ட்டம் செய்யிற அறையில, ஒரு நண்பனோட செத்துப்போன பிணத்துக்குப் பக்கத்துல...''
மது அருந்தாமல் அமர்ந்திருந்த இளைஞன் அறையின் மூலையில் இருந்தவாறு கேட்டான்: "சார்... தூக்குல தொங்கின ஆளோட நாக்கு வெளியே தொங்கும்ன்றது உண்மையா? நாக்கு வெளியே தொங்குறதை வச்சுத்தான் நடந்தது தற்கொலைன்ற முடிவுக்கே ஒருவர் வரமுடியுமா?''
கட்டிலில் இருந்த நண்பன் சொன்னான்: "இந்த உலகத்துல இருக்கிற எதைத்தான் உறுதியா நம்மால சொல்ல முடியுது? சரி... என் டம்ளரை யார் கொண்டு போனது?''
டாக்டர் சொன்னார்: "நாக்கு வெளியே தொங்குறதுன்றது அவ்வளவு முக்கியமான விஷயமில்ல...''
நான் சொன்னேன்: "ஒருமுறை விபத்துல சிக்கி செத்துப்போன என்னோட நண்பனின் போஸ்ட்மார்ட்டம் முடிஞ்ச உடலுக்குப் பக்கத்துல மத்த ஆளுங்க வர்ற வரைக்கும் நான்தான் காவலாளியா இருந்தேன். ஒரு பழைய அரசாங்க மருத்துவமனை இருக்குற இடத்துல கொஞ்சம் ஒதுக்குப்புறமா இருந்தது அந்த நாத்தம்பிடிச்ச அறை. நான் போனப்போ, பிணத்தை ரத்தம் படிஞ்ச ஒரு அழுக்காகிப் போயிருந்த வெள்ளைத் துணியால மூடியிருந்தாங்க. என் நண்பனோட முகம் ஒருபக்கம் கிழிஞ்சு போயிருந்துச்சு. அதை அங்கே தச்சிருந்தாங்க. ஒரு பழசாகிப்போன பொம்மை மாதிரி இருந்துச்சு பாக்குறதுக்கு. அப்போ பாதி ராத்திரி தாண்டியாச்சு. ஒரு அட்டெண்டர் வந்து என் நண்பனோட கால் பக்கத்திலும் தலைக்குப் பக்கத்திலும் ரெண்டு மெழுகுவர்த்தியை ஏத்தி வச்சான். ஒரு விதத்துல அது நல்லதாப் போச்சு. காரணம்- கொஞ்ச நேரத்துல மின்சாரம் போயிடுச்சு. நான் என் நண்பனோட முகத்தை துணியை நல்லா இழுத்துவிட்டு மூடினேன். ஏன் அதைப் பண்ணினேன்னா, விபத்துல கிழிஞ்சு போயிருந்த அந்த முகம் என்கிட்ட என்னவோ பேசப் போகுதுன்னு நான் நினைச்சதுதான்!''
"நீ உண்மையிலேயே பயந்துட்டியா என்ன?''
"அப்படிச் சொல்ல முடியாது. கிடக்குறது என் நண்பனாச்சே!''
"ஆனா, உன் நண்பன் வாயைத் திறந்து பேசியிருந்தான்னா?''
"நான் நிச்சயமா பயந்திருப்பேன்.''
"அதெப்படி? உன் நண்பன்தானே பேசுறான்?''
"இருக்கலாம். ஆனா, செத்துப்போனவங்க எப்படி பேச முடியும்? செத்துப் போனவங்க, செத்துப்போனவங்கதான். இல்லாட்டி, அது இயற்கைக்கு விரோதமானதா இருக்கும்.''
"ஹா... ஹா... ஹா...'' ஒருவன் சொன்னான்: "நீ இயற்கைக்கு விரோதம் அப்படி இப்படின்னெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டியா? இது ஒண்ணுதான் பாக்கி!''
டாக்டர் சொன்னார்: "செத்துப்போனவங்க கொஞ்ச நேரம் கழிச்சு உயிரோட வாழத் தொடங்கினா, தேவையில்லாம பல பிரச்சினைகள் வரும். மரணம்ன்றதுக்கு ஒரு முடிவு எப்பவும் இருக்கணும்ல...''
நான் சொன்னேன்: "நான் சொல்ல வந்தது அது இல்ல. நான் என் நண்பனோட செத்துப்போன உடலுக்குப் பக்கத்துல உட்கார்ந்திருந்ததா சொன்னேன்ல... அப்படியே என்னை மறந்து நான் கண்ணயர்ந்துட்டேன். இடையில அப்பப்போ கண்ணைத் திறந்து என் நண்பனோட பிணத்தைப் பார்ப்பேன். அவனைப் பார்க்குறப்போ மனசில வித்தியாசமான ஒரு எண்ணம் தோணும். அவனை எழுப்பிப் பார்த்தா என்ன அப்படின்னு மனசுக்குள்ள ஒரு ஆவல் தலையை நீட்டிப் பார்க்கும். ஆனா அவனைக் கூப்பிடுறது அவன் காதுலயே விழலேன்னா? பயந்துக்கிட்டு பேசாம இருந்திடுவேன். கொஞ்ச நேரத்துல திரும்பவும் அயர்ந்து உறங்கிடுவேன். அவன் பக்கத்துல இருந்த ரெண்டு மெழுகுவர்த்தியும் முழுசா எரிஞ்சு அணைஞ்சு போச்சு. திரும்பவும் நான் கண்ணைத் திறந்து பார்க்குறப்போ, இருட்டுக்கு மத்தியில் என் நண்பன் மூச்சுவிடுற சத்தம் என் காதுகள்ல வந்துவிழற மாதிரி இருந்துச்சு. நான் மெதுவா அவன் பேரைச்சொல்லி கூப்பிட்டுப் பார்த்தேன். பிறகு என்ன நினைச்சேனோ, என் ரெண்டு காதுகளையும் நானே விரல்களை வச்சு அடைச்சுக்கிட்டேன்!''
"நீ எத்தனை ஸ்மால் சாப்பிட்ட?'' ஒருவன் கேட்டான்.
"அவன் சொல்லி முடிக்கட்டுமே!'' மற்றொருவன் சொன்னான்: "இல்லைன்னா அவனுக்கு இன்னைக்கு உறக்கமே வராது...''
நான் சொன்னேன்: "கொஞ்ச நேரத்துல மின்சாரம் வந்துடுச்சு. வெளியே ஒரு டாக்ஸி கார் வந்து நின்னுச்சு. நான் வெளியே போய் பார்த்தேன். காருக்கு மேலே ஒரு சவப்பெட்டி இருந்துச்சு. கார்ல இருந்து என் நண்பனோட வயசான அப்பா இறங்கி வந்தாரு. நான் பக்கத்துல போய் அவர் கையைப் பிடிச்சேன். அவர் என்கிட்ட கேட்டாரு: "எங்கே இருக்கான் அவன்?” நான் சொன்னேன்: "இந்த அறையிலதான் இருக்கான்.” அவர் வேதனை கலந்த முகத்தோட இருந்தாரு. என் கையை விட்டுட்டு இருட்டுல நடந்துபோனாரு. நான் பின்னால ஓடிக்கிட்டு சொன்னேன்: "அங்கேல்ல, இங்கே...” அவர் நான் சொன்னதைக் காதிலேயே வாங்காம, ஒரு மரத்துக்குக் கீழே போய் உட்கார்ந்து ஒண்ணுக்கு இருந்துக்கிட்டு இருந்தார். அவர் ஒண்ணுக்கு இருந்து முடிக்க ரொம்ப நேரம் ஆச்சு. எல்லாம் முடிஞ்சு எந்திரிச்சு நின்னப்போ, தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சாரு. கையில இருந்த கம்பை ஊனிக்கிட்டு யாரோட உதவியும் இல்லாம அவர் பிணம் இருந்த அறைக்குள்ள நுழைஞ்சாரு. என் நண்பன் முகத்தை மூடியிருந்த துணியை நீக்கினாரு. பக்கத்துல உட்கார்ந்து அவன் முகத்தைப் பார்த்துச் சொன்னாரு: "என் மகனே!” அப்போ அவனோட
கிழிஞ்சு போன முகம் ஏதாவது சொல்லும்னு நினைச்சேன். "அப்பா... நான் இங்கே இருக்கேன். நீங்க கவலைப்படாதீங்க...'ன்னு அவன் கட்டாயம் சொல்லுவான்னு நினைச்சேன்.'' அதற்குமேல் பேச முடியாமல் கதையை நிறுத்தி, என்னைச் சுற்றிப் பார்த்தேன்!
"கொஞ்சம் கொஞ்சமா சொல்லி போஸ்ட்மார்ட்டம் வரை கொண்டு வந்துட்டே?'' ஒருவன் சொன்னான்.