நெய் பாயசம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6926
பிள்ளைகள் தூங்கிவிட்டிருப்பார்களா? அவர்கள் ஏதாவது சாப்பிட்டிருப்பார்களா? இல்லாவிட்டால் அழுதழுது உறங்கி இருப்பார்களா? அழக்கூடிய உணர்வுகூட அவர்களுக்கு வந்திருக்க வில்லை. இல்லாவிட்டால் அவர் அவளை எடுத்து வாடகைக் காரில் ஏற்றியபோது உண்ணி ஏன் அழாமல் வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்? இளைய மகன் மட்டும் அழுதான். ஆனால், அவனுக்கு வாடகைக் காரில் ஏற வேண்டும் என்ற பிடிவாதம். மரணத்தின் அர்த்தத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது மட்டும் உண்மை.
அவர் அறிந்திருக்கிறாரா? இல்லை. தினமும் வீட்டில் பார்க்கக் கூடிய அவள் திடீரென்று ஒரு சாயங்கால வேளையில் யாரிடமும் விடை பெறாமல் தரையில் ஒரு துடைப்பத்திற்கு அருகில் விழுந்து மரணத்தைத் தழுவுவாள் என்பதை அவர் நினைத்திருப்பாரா?
அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அவர் சமையலறையின் சாளரத்தின் வழியாக உள்ளே பார்த்தார். அவள் அங்கு இல்லை.
முற்றத்தில் பிள்ளைகள் விளையாடுவதன் சத்தம் உரத்துக் கேட்டுக் கொண்டிருந்தது. உண்ணி சத்தம் போட்டுச் சொன்னான்: “ஃபஸ்ட் க்ளாஸ் ஷாட்.''
அவர் சாவியை எடுத்து முன்னறையின் கதவைத் திறந்தார். அப்போதுதான் அவள் கீழே கிடப்பதைப் பார்த்தார். வாயைச் சற்று திறந்து கொண்டு தரையில் சாய்ந்து படுத்திருந்தாள். மயக்கம் உண்டாகி விழுந்திருப்பாள் என்று நினைத்தார். ஆனால், மருத்துவமனையில் இருந்தபோது டாக்டர் சொன்னார்: “இதயத்துடிப்பு நின்றுவிட்டதுதான் காரணம். இறந்து ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது.''
பல உணர்ச்சிகள். அவள்மீது காரணமே இல்லாமல் ஒரு கோபம். அவள் இப்படி முன்கூட்டி எதுவுமே சொல்லாமல், எல்லா பொறுப்புகளையும் தன்னுடைய தலையில் வைத்துவிட்டுப் போய்விட்டாளே!
இனி குழந்தைகளை யார் குளிப்பாட்டுவார்கள்? அவர்களுக்கு யார் பலகாரங்கள் செய்து தருவார்கள்? உடல் நலம் பாதிக்கப்படும்போது யார் அவர்களை கவனிப்பது?
"என் மனைவி இறந்துவிட்டாள்.' - அவர் தனக்குள் முணுமுணுத்தார். "என் மனைவி இன்று திடீரென்று மாரடைப்பால் மரணத்தைத் தழுவியதால் எனக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும்.'
எவ்வளவு நல்ல ஒரு "லீவ் லெட்டர்' அது! மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அல்ல - மனைவி மரணமடைந்து விட்டாள் என்று. மேலதிகாரி ஒருவேளை அவரை அறைக்குள் அழைக்கலாம். "நான் மிகவும் வருந்துகிறேன்' என்று அவர் கூறுவார். ஹஹ! அவருடைய வருத்தம்! அவருக்கு அவளைத் தெரியாது. நுனியில் சுருண்டிருக்கும் அவளுடைய கூந்தல், தளர்ச்சியான புன்னகை, மிகவும் மெதுவான நடை- இவை எதுவுமே அவருக்குத் தெரியாது. அவை அனைத்தும் தனக்குத்தான் இழப்பு...
கதவைத் திறந்தவுடன் இளைய மகன் படுக்கையறையில் இருந்து ஓடி வந்து சொன்னான்: “அம்மா வரல...''
அவர்கள் இவ்வளவு சீக்கிரமாக எல்லாவற்றையும் மறந்து விட்டார்களா? வாடகைக் காரில் ஏற்றி வைத்த அந்த உடல் தனியாகத் திரும்பி வரும் என்று அவன் நினைக்கிறானா?
அவர் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டே சமையலறையை நோக்கி நடந்தார்.
“உண்ணி'' அவர் அழைத்தார்.
“என்ன அப்பா?''
உண்ணி கட்டிலில் இருந்து எழுந்து வந்தான்.
“பாலன் தூங்கிட்டான்.''
“ம்... நீங்க ஏதாவது சாப்பிட்டீங்களா?''
“இல்ல...''
அவர் சமையலறையின் திண்ணையின்மீது அடைத்து வைக்கப் பட்டிருந்த பாத்திரங்களின் மூடிகளைத் திறந்து பார்த்தார். அவள் தயார் பண்ணி வைத்திருந்த உணவுப் பொருட்கள் - சப்பாத்தி, சாதம், உருளைக்கிழங்கு குழம்பு, சிப்ஸ், தயிர், ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பிள்ளைகளுக்காக இடையில் அவ்வப்போது தயாரிக்கக்கூடிய நெய் பாயசம்...
மரணத்தின் கரம் தொட்ட உணவுப் பொருட்கள்! வேண்டாம்... அவை எதையும் சாப்பிடக்கூடாது.
“நான் கொஞ்சம் உப்புமா தயாரித்துத்தர்றேன். இதெல்லாம் ஆறிப் போயிருக்கு.'' அவர் சொன்னார்.
“அப்பா!''
உண்ணி அழைத்தான்.
“ம்....''
“அம்மா எப்போ வருவாங்க? அம்மாவுக்கு உடம்பு சரியாயிடுச்சா?''
உண்மைக்கு ஒருநாள் காத்திருக்கக்கூடிய பொறுமை உண்டாகட்டும்- அவர் நினைத்தார். இப்போது இந்த இரவுப் பொழுதில் பிள்ளைகளைக் கவலைக்குள்ளாக்கி என்ன கிடைக்கப் போகிறது?
“அம்மா வருவாங்க.'' அவர் சொன்னார்.
அவர் கிண்ணங்களைக் கழுவி, தரையில் வைத்தார். இரண்டு கிண்ணங்கள்.
“பாலனை எழுப்ப வேண்டாம். தூங்கட்டும்.'' அவர் சொன்னார்.
“அப்பா... நெய் பாயசம்.'' ராஜன் சொன்னான். அந்தப் பாத்திரத்தில் தன்னுடைய சுட்டுவிரலைத் தாழ்த்தினான்.
அவர் தன்னுடைய மனைவி அமரக்கூடிய பலகையின்மீது உட்கார்ந்தார்.
“உண்ணி, பரிமாறுகிறாயா? அப்பாவுக்கு முடியல. தலை வலிக்குது!''
அவர்கள் சாப்பிடட்டும். இனி எந்தக் காலத்திலும் அவள் தயாரித்த உணவு அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லையே!
பிள்ளைகள் பாயசத்தைச் சாப்பிட ஆரம்பித்தார்கள். அவர் அதைப் பார்த்துக் கொண்டே எந்தவித அசைவும் இல்லாமல் அமர்ந்திருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் கேட்டார்:
“சாதம் வேண்டாமா உண்ணி?''
“வேண்டாம்... பாயசம் போதும். நல்ல சுவையுடன் இருக்கு.''
உண்ணி சொன்னான்.
ராஜன் சிரித்துக் கொண்டே சொன்னான்:
“உண்மைதான். அம்மா அருமையான நெய் பாயசத்தை தயாரிச்சிருக்காங்க...''
தன்னுடைய கண்ணீரைப் பிள்ளைகளுக்குத் தெரியாமல் மறைப் பதற்காக அவர் உடனடியாக எழுந்து குளியலறையை நோக்கி நடந்தார்.