மறக்கும்... பற்கள் கடிக்கும் பழக்கம்
- Details
- Category: ஆரோக்கியம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6185
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த நாராயணன் அனுபவம்:
“நான் வங்கி ஒன்றில் பணிபுரிகிறேன். என்னுடைய 9 வயது மகனுக்கு சில வருடங்களுக்குமுன் ஒரு கெட்டப்பழக்கம் இருந்தது. ஆபத்தான பழக்கம் என்றுகூட சொல்லலாம். திடீரென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் தன்னுடைய பற்களை ‘நறநற’வென்று கடிக்க ஆரம்பித்துவிடுவான். பற்கள் ஒன்றோடொன்று உராயும்போது, எழும் சத்தம் என்னவோபோல இருக்கும்.
பெரும்பாலும் தூக்கத்தில் இந்தப் பழக்கம் அதிகமாக இருந்தது. அவனுக்கு அருகில் படுத்திருக்கும் எனக்கு, அவன் மீது இனம்புரியாத பரிதாபம் உண்டாகும். பற்களைக் கடிக்கும் பழக்கத்தை எப்படி இல்லாமல் செய்வது என்பதை யார் யாரிடமோ விசாரித்தேன். ஆனால், யாரும் சரியான வழிமுறையைக் கூறவில்லை.
இப்படியே அதை விட்டுக்கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்று முடிவுசெய்தேன். ஒருநாள் சென்னையில் உள்ள அமெரிக்க நூல் நிலையத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு இருந்த ஒரு நூலில் பற்களைக் கடிக்கும் பழக்கம் இல்லாமல் போவதற்கு என்ன வழி என்பது கூறப்பட்டிருந்தது. ‘தினமும் காலையில் நல்லெண்ணெய்யில் ‘ஆயில் புல்லிங்’செய்தால் காலப்போக்கில் நிலைமை சீராகிவிடும்’ என்று அதில் இருந்தது.
மறுநாளே என் மகனை, நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளிக்கச் செய்தேன். சுமார் ஒருமாதம் தொடர்ந்து‘ஆயில் புல்லிங்’ செய்தபிறகு, நான் எதிர்பார்த்த மாற்றம் அவனிடம் உண்டானது. பற்களைக் கடிக்கும் பழக்கம் அவனிடமிருந்து முற்றிலுமாகப் போய்விட்டது. இப்போது அவன் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இரவில் நிம்மதியாகத் தூங்குகிறான். அவனுக்கு அருகில் படுத்திருக்கும் நானும்தான்.”