அஜீரணக் கோளாறா... இனி அலற வேண்டாம்!
- Details
- Category: ஆரோக்கியம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7467
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
மரகதம் போலவே, வண்டலூரில் பெட்டிக்கடை நடத்திவரும் மணி என்பவரும், ‘ஆயில் புல்லிங்’, எப்படிப்பட்ட பலனை தனக்குத் தந்தது என்று கூறினார்:
“நான் வண்டலூரில் ஒரு சிறிய பெட்டிக் கடை வைத்திருக்கிறேன். தினமும் விடியற்காலை 5 மணிக்கெல்லாம் கடையைத் திறப்பேன்; இரவு பத்து மணிக்குத்தான் பூட்டுவேன். முழுநேரமும் கடைக்குள்ளேயே இருக்கவேண்டும்.
6 மாதங்களாக, நான் சாப்பிடும் எந்த உணவும் ஒழுங்காக ஜீரணம் ஆவதில்லை. அடிக்கடி புளியேப்பம் வந்துகொண்டு இருந்தது.
ஜீரணம் ஆகாததால் பசி என்பதே பல நேரங்களில் ஏற்படுவது இல்லை. அதையும் மீறி சாப்பிட்டால், நகர்வதற்குக்கூட முடிவதில்லை. சுறுசுறுப்பு என்பதே இல்லாமல் போய்விடும். பல நேரங்களில் சாப்பிட்ட உணவு முழுவதும் வாந்தியாக வெளியேறிவிடும். நீண்டநேரம் உட்கார்ந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ இருப்பதால்தான் அஜீரணக் கோளாறு இருக்கிறது என்று நான் நினைத்திருந்தேன்.
‘ஜீரணக்கோளாறு என்றால் என்ன?’ என்றுகூடத் தெரியாத எனக்கு, இப்படியொரு நிலைமை வரும் என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை. இந்தக் கஷ்டத்தினால் கடையிலும் என்னால் முழுமையாக இருக்க முடிவதில்லை. சோர்ந்துபோய் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன்.
கடையின் மூலமாகத்தான் வீட்டின் வாடகை, குடும்பச் செலவு எல்லாவற்றையும் சரிக்கட்ட வேண்டும். வியாபாரத்தை ஒழுங்காகச் செய்யாமல் கடையை அடைத்துவிட்டால், வீட்டின் நிலைமை என்ன ஆகும்?
எல்லா பிரச்னைகளுக்கும் மூலகாரணமாக இருந்த அஜீரணக் கோளாறை எப்படி சரிக்கட்டுவது என்று பலரிடமும் விசாரித்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மருந்தைக் கூறினார்கள்.
அவர்கள் கூறிய மருந்துகள் ஒவ்வொன்றையும் வாங்கி பயன்படுத்திப் பார்த்தேன். அந்த நேரத்துக்கு சரியாகுமே தவிர, நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை. பணம் செலவானதுதான் மிச்சம்.
இந்த சூழ்நிலையில்தான், எனக்குத் தெரிந்த மளிகைக் கடை அண்ணாச்சி நல்லெண்ணெய்யின் சிறப்பைக் கூறினார். என்னுடைய அஜீரணக் கோளாறைப் பற்றி நான் அவரிடம் கூறியதும், ‘தினமும் நல்லெண்ணெய்யை கொப்பளியுங்கள். உங்களுக்கு இருக்கும் அஜீரணப் பிரச்னை சுத்தமாக இல்லாமல் மறைகிறதா இல்லையா பாருங்கள்’ என்று சவாலாகக் கூறினார்.
வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பெற்றவர் - அண்ணாச்சி. பல மேடுகளையும் பள்ளங்களையும் பார்த்தவர். நிறைவான குடும்ப வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருப்பவர். பேரன், பேத்திகள் எடுத்தவர். உழைப்பால் முன்னுக்கு வந்த மனிதர். மருத்துவம், ஆன்மிகம் என்று பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர். தான் கற்றதை வாழ்க்கையிலும் பின்பற்றிப் பார்ப்பவர். நல்லெண்ணெய் விஷயத்தில்கூட அப்படித்தான்!
தான் பயன்படுத்தி, நல்லதொரு பலனைக் கண்டிருப்பார்; அதனால், சிரமப்பட்டுக்கொண்டு இருக்கும் எனக்கு அதை சிபாரிசு செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அதிகநேரம் நான் எடுத்துக் கொள்ளவில்லை.
அண்ணாச்சி கூறியபடி, மறுநாள் காலையிலேயே நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி, இருபது நிமிடங்கள் அதை அப்படியே வைத்திருந்து கொப்பளிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து அதைச் செய்தேன்.
இரண்டே வாரங்களில் அஜீரணக்கோளாறு மறையத் தொடங்கியது; சாப்பிட்ட உணவுகள் அனைத்தும் ஒழுங்காக ஜீரணமாயின; பசி எடுக்க ஆரம்பித்தது; புளியேப்பம் வருவது நின்றது; ராத்திரியில் அடிக்கடி வயிற்றுப்போக்கு உண்டாவது நின்றது; வாந்தி என்பதே இல்லை; நாளடைவில் அஜீரணம் ‘இல்லவே இல்லை’ என்ற நிலை வந்தது.
‘எந்தவிதமான செலவும் இல்லாமல் சாதாரணமாக கொப்பளிக்கும் நல்லெண்ணெய்க்கு இப்படியொரு சக்தியா?’ என்று நான் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். நினைத்துப் பார்க்கமுடியாத பலனை நல்லெண்ணெய் கொடுக்கும் என்பதை நான் இப்போது அறிந்துகொண்டேன்.
பெட்டிக்கடை வியாபாரியான எனக்கு, நல்லெண்ணெய்யின் சிறப்பு இவ்வளவு காலமாக தெரியாமல் இருந்திருக்கிறதே என்பதை நினைத்து, வருத்தப்பட்டேன்.
அதுவரை ரீஃபைண்ட் ஆயிலில் சமையல் செய்துகொண்டிருந்த என் மனைவியிடம்,‘நல்லெண்ணெய்யைத்தான் பயன்படுத்த வேண்டும்’ என்று கூறினேன்.
நல்லெண்ணெய்யால் நான் குணமடைந்ததை நேரில் பார்த்த என் மனைவி, சொன்னவுடன் ரீஃபைண்ட் ஆயிலை தவிர்த்துவிட்டு, நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டாள்.
இன்று, மனதில் நினைக்கும் எதையும் நான் சாப்பிடுகிறேன். அஜீரணக் கோளாறு என்பதே இல்லாமல் நிம்மதியுடன் இருக்கிறேன். இந்த நிம்மதியைத் தந்த நல்லெண்ணெய்க்குத்தான் நான் மிகவும் நன்றி கூறவேண்டும்!”