
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா (Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
நங்கநல்லூரிலிருந்து வந்திருந்த, 55 வயது மதிக்கத்தக்கவர் கூறினார்:
“எனக்குப் பல வருடங்களாக மூட்டு வலி இருந்தது. சரியாக நடக்கமுடியாது. நடந்தால், தாங்கமுடியாத அளவுக்கு வலி. படுத்தால் அடித்துப் போட்டதைப் போல இருக்கும். உடலில் ஏற்படும் வலியை நினைத்து, பல நேரங்களில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.
உட்கார்ந்த இடத்தைவிட்டு எழமுடியாமல் தவித்து இருக்கிறேன். ஒழுங்காக கால்களை நீட்டிப் படுக்கமுடியாது. முழங்கால்களில் அப்படி ஒரு வேதனை.
எத்தனையோ மருந்துகளைத் தடவிப் பார்த்தேன். எந்தப் பலனும் இல்லை. பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டேன்; அவர்கள் தந்த மருந்துகளையும், மாத்திரைகளையும் உட்கொண்டு பார்த்தேன். சொல்லிக்கொள்கிற வகையில் எந்த மாற்றமும் இல்லை.
நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. ஆனால், உடல் நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இப்படி உடல் வேதனையுடன் சிரமப்பட்டுக் கொண்டு இருப்பதைவிட, தற்கொலை செய்துகொள்வோமா என்றுகூட பல நேரங்களில் நான் யோசித்தது உண்டு.
இந்த நிலையில்தான் ‘ஆயில் புல்லிங்’ பற்றி என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். நல்லெண்ணெய்யைக் கொப்பளித்ததால் தன் உடலில் இருந்த பல நோய்கள் இல்லாமல் போய்விட்டதையும், உடல் நலத்தில் மிகச்சிறந்த முன்னேற்றம் உண்டானதையும் விளக்கினார். என்னையும் ‘ஆயில் புல்லிங்’ செய்யும்படி உற்சாகமாகக் கூறினார்.
மறுநாள் காலையிலேயே ‘ஆயில் புல்லிங்’ பண்ணத் தொடங்கிவிட்டேன்.
தினமும் காலையில் குளிப்பதற்கு முன்னால் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளித்தேன். தொடர்ந்து, இதைச் செய்யும்போது என்னிடம் உண்டான மாற்றங்களைக் கண்டு நானே வியந்தேன்.
என்னுடைய மூட்டு வலி படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. முன்பு அடிக்கொரு தரம் முழங்காலைப் பிடித்துக்கொண்டு தவித்தவாறு நின்றுகொண்டிருந்த நான், இப்போது அதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு விட்டேன். உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்திருப்பதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்த நான், எந்த கஷ்டமும் இல்லாமல் நடக்க ஆரம்பித்தேன்.
இப்போது, எனக்கு மூட்டு வலி இருந்ததையே மறந்துவிட்டேன். எவ்வளவோ பணம் செலவு செய்து, எத்தனையோ மருந்துகளை உட்கொண்டு பயன்பெறாத நான், மிக மிகக் குறைந்த செலவில் ‘ஆயில் புல்லிங்’ செய்து நூறு சதவீதம் பலன் அடைந்திருக்கிறேன்.
இப்படிப்பட்ட ஒரு வழியை எனக்குக் காட்டிய என் நண்பருக்கு, நான் உண்மையிலேயே நன்றிக்கடன் பட்டவன்.”
இந்த வார்த்தைகளைக் கூறும்போது அந்த மனிதரின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும், நோய் குணமானதால் மனதில் உண்டான நிம்மதியின் வெளிப்பாட்டையும் பார்த்தபோது, எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook