வைரமுத்துவை கதாசிரியராக அறிமுகப்படுத்தியவர்! - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4647
'கவிதாலயா'விற்காக அமீர்ஜான் இயக்கிய படம் 'புதியவன்.' ஒரு திரைப்பட இயக்குநரை மையமாகக் கொண்ட கதை. இயக்குநராக நடித்தவர் கல்கத்தா விஸ்வநாதன். காதலர்களை படங்களில் இணைத்து வைக்கும் அவர், உண்மை வாழ்வில் தன் மகனின் காதலுக்கு எதிராக இருப்பார். அந்த எதிர்ப்பை அமீர்ஜான் புதுமையாக காட்டியிருப்பார். மகனாக நடிக்கும் முரளி படத்தின் கதாநாயகியை நோக்கி பாடல் காட்சியில் வேகமாக ஓடி வர, அதை ரிவர்ஸில் ஓடச் செய்து, பிரிந்து செல்வதைப் போல இயக்குநராக வரும் கல்கத்தா விஸ்வநாதன் 'எடிட்டிங்' செய்வதாக படமாக்கப்பட்ட காட்சி, படம் பார்ப்போர் அனைவரின் மனதிலும் இடம் பெற்றது.
விஜயகாந்த் - ராதிகா நடித்த 'உழைத்து வாழ வேண்டும்' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த 'சிவா' படத்தையும் அமீர்ஜான் இயக்கினார்.
பாடல்களே இல்லாமல் அமீர்ஜான் இயக்கிய படம் 'வண்ணக் கனவுகள்'. கார்த்திக், முரளி, ஜெயஶ்ரீ நடித்த முக்கோண காதல் கதை. மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி 'அடியொழுக்குகள்' என்ற பெயரில் திரைப்படமாக வந்து வெற்றி பெற்ற படத்தின் தமிழ் வடிவம். 'இந்த படத்தில் பாடல்களே இல்லை. மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று பயமாக இருக்கிறது' என்றார் என்னிடம் அமீர்ஜான். ஆனால், மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். படம் 100 நாட்கள் ஓடியது. அவர் இயக்கிய மிகச் சிறந்த படம் 'வண்ணக் கனவுகள்'.
ராஜ் டி.வி. நிறுவனம் தயாரித்த 'சின்னச் சின்ன கண்ணிலே' என்ற படத்தை அமீர்ஜான் இயக்கினார். பிரகாஷ்ராஜ், குஷ்பூ நடித்த அருமையான குடும்பக் கதை அது.
ஆரம்பத்தில் எடிட்டிங் உதவியாளராக எடிட்டர் என்.ஆர்.கிட்டுவிடம் பணியாற்றியவர் அமீர்ஜான். படத்தொகுப்பு தெரிந்த உதவியாளர் ஒருவர் தனக்கு வேண்டும் என்பதற்காகவே, பாலசந்தர் அமீர்ஜானை தன்னுடன் சேர்த்துக் கொண்டார். கிட்டத்தட்ட 15 வருடங்கள் அவரிடம் இணை இயக்குநராக அமீர்ஜான் பணியாற்றியிருக்கிறார். இருபதிற்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிறகும், 'ஈகோ' சிறிதும் இல்லாமல், கே.பாலசந்தரின் படத்திலோ, சீரியலிலோ அவருக்கு உதவுவதற்கு அமீர்ஜான் சென்று விடுவார். அவர் ஓய்வாக என்றுமே இருந்தது இல்லை. கே.பாலசந்தருக்கு அவர் இறுதி வரை சீடராகவே இருந்திருக்கிறார். அமீர்ஜானிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே அதுதான்.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கைத் தமிழரான டாக்டர் நிரஞ்சன் என்ற நண்பர் என்னிடம் வந்தார். அவரிடம் ஒரு கதை இருந்தது. ரஜினிகாந்த் மூன்றே மூன்று காட்சிகளில் கவுரவ வேடத்தில் நடிப்பதைப் போன்ற கதை. நான் அவரை அமீர்ஜானிடம் அழைத்துச் சென்றேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. ஒரு நாள் ரஜினியைச் சந்தித்து இது விஷயமாக பேச வேண்டும் என்று மனதிற்குள் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த தருணம் வருவதற்கு முன்பே அவருடைய வாழ்விற்கு முற்றுப் புள்ளி விழுந்து விட்டது.
வடபழனி, சாலிகிராமம் பகுதிகளில் பேருந்திலோ, சைக்கிளிலோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் பயணித்துக் கொண்டிருக்கும் அமீர்ஜானை எப்போதாவது பார்ப்பேன். சில மாதங்களுக்கு ஒருமுறை சாலிகிராமத்திலிருக்கும் அவருடைய வீட்டிற்குச் சென்று, அவர் மனைவி தயாரித்துத் தரும் காபியையோ, தேநீரையோ ருசித்து பருகுவேன். நானும், அமீர்ஜானும் மணிக்கணக்கில் மனம் விட்டு பேசிக் கொண்டிருப்போம். இனி அவை அனைத்தும் நினைவுகள் மட்டுமே.