வைரமுத்துவை கதாசிரியராக அறிமுகப்படுத்தியவர்!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4643
மறக்க முடியுமா? - சுரா (Sura)
வைரமுத்துவை கதாசிரியராக அறிமுகப்படுத்தியவர்!
இயக்குநர் அமீர்ஜான் மரணத்தைத் தழுவி விட்டார். என்னுடைய மிகவும் நெருக்கமான ஒரு நண்பரை நான் இழந்து விட்டேன்.
என் மனம் பின்னோக்கி பயணிக்கிறது.
1984ஆம் ஆண்டு. அண்ணா சாலை ஆனந்த் திரையரங்கத்தில் 'பூ விலங்கு' படத்தைப் பார்க்கிறேன். அது ஏற்கெனவே கன்னடத்தில் வெளியாகி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம். அதை தமிழில் கே.பாலசந்தரின் 'கவிதாலயா' நிறுவனம் தயாரித்திருந்தது. முரளி அதில் கதாநாயகனாக அறிமுகம். அந்தப் படத்தின் மூலம்தான் குயிலியும் கதாநாயகியாக அறிமுகமானார். அருமையான, இளமை தவழும் காதல் கதை. ரீ-மேக் படமாக இருந்தாலும், படத்தை இயக்கிய இயக்குநர் மிகச் சிறப்பாக படத்தை இயக்கியிருந்தார். ஒரு நிமிடம் கூட சோர்வு உண்டாகாத அளவிற்கு, ஆரம்பத்திலிருந்து இறுதி வரை படத்துடனும், கதாபாத்திரங்களுடனும் முழுமையாக ஒன்றிப் போகிற அளவிற்கு இயக்கியிருந்த இயக்குநரின் பெயர் அமீர்ஜான். அவருக்கு அதுதான் முதல் படம். கே.பாலசந்தரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் அவர். அந்தப் படத்திற்கு பாராட்டக் கூடிய வசனங்களை எழுதியவர் கண்மணி சுப்பு. கவியரசு கண்ணதாசனின் மகன் அவர்.
படத்திற்கு இசை : இளையராஜா, அதில் இடம் பெற்ற 'ஆத்தாடி பாவாடை காத்தாட' என்ற பாடலை, கிணற்றின் கரையில் முரளியையும், குயிலியையும் வைத்து அதிகமான நடன அசைவுகள் எதுவுமில்லாமல், புதுமையான முறையில் படமாக்கிய அமீர்ஜானை நம்மால் மறக்கத்தான் முடியுமா?
அமீர்ஜான் இயக்கி, திரைக்கு வந்த முதல் படம் 'பூ விலங்கு' என்றாலும், அவருக்கு இயக்குநராக முதலில் ஒப்பந்தமான படம் 'நெஞ்சைத் தொட்டு சொல்லு'தான். 'பாலைவனச் சோலை' படத்தைத் தயாரித்த 'ஆர்.வி. கிரியேஷன்ஸ்' வடிவேலுதான் அமீர்ஜானை இயக்குநராக அறிமுகப் படுத்தினார். அப்படத்தின் கதாநாயகன் மோகன். எனினும், அமீர்ஜான் இயக்கிய இரண்டாவது படமாகத்தான் அது திரைக்கு வந்தது.
எனக்கு அமீர்ஜான் அறிமுகமானது 'தர்மபத்தினி' படத்தின்போது. அழகன் தமிழ்மணி தயாரித்த அப்படத்தின் கதாநாயகன் கார்த்திக். கதாநாயகி ஜீவிதா. காவல் துறையில் பணியாற்றும் கார்த்திக்கும் ஜீவிதாவும் ஒருவரையொருவர் காதலிக்கும் கதை.
அப்படத்திற்காக அண்ணாசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேனரில் போலீஸ் சீருடைகளை அணிந்து கொண்டு, கார்த்திக்கும் ஜீவிதாவும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து நின்று கொண்டிருந்தார்கள். படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி அது. இன்ஸ்பெக்டர்களான அவர்கள் காதல் டூயட் பாடி ஆட, மற்ற பெண் போலீஸ்கள் காவல் துறை சீருடைகளுடன் அவர்களுக்குப் பின்னணியில் ஆடிக் கொண்டிருந்தார்கள். இயக்குநர் அமீர்ஜானின் ஐடியாதான் அது.
தமிழக சட்டமன்றத்தில் அந்த பேனர் மிகவும் காரசாரமாக விவாதிக்கும் ஒரு விஷயமாகி விட்டது. 'காவல் துறை சீருடைகளுடன் எப்படி காவல் துறையைச் சேர்ந்த இருவர் ஒருவரையொருவர் இறுக அணைத்துக் கொண்டிருப்பதைப் போல பேனர் வைக்கலாம்?' என்று நம் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி, விவாதித்தனர். எனினும், அப்படத்தில் அந்தக் காட்சி இப்போதும் இருக்கிறது.
'தர்மபத்தினி' படத்தின் இசையைமைப்பாளர் இளையராஜா. அதில் 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' என்றொரு பாடல் இடம் வெற்றிருக்கும். அந்தப் பாடலை இளையராஜா பாடியிருப்பார். பாடியதுடன், அவரே அதற்கு வாயசைத்து, நடிக்கவும் செய்திருப்பார். பிரசாத் ஸ்டூடியோவில் அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதில் இளையராஜா எப்படி நடிக்க சம்மதித்தார் என்பதை இப்போது கூட ஆச்சரியத்துடன் நான் நினைத்துப் பார்க்கிறேன். அமீர்ஜானின் எளிய அணுகுமுறையும், நட்பும்தான் அதற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பி.எஸ்.வீரப்பா தயாரித்த 'நட்பு' என்ற படத்தை அமீர்ஜான்தான் இயக்கினார். 'குமுதம்' வார இதழில் வைரமுத்து எழுதிய தொடர்கதை அது. அப்படத்தின் உரையாடலையும் வைரமுத்துவே எழுதினார். திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த வைரமுத்துவை கதாசிரியராகவும், சிறந்த உரையாடலாசிரியராகவும் அறிமுகப்படுத்தியது அமீர்ஜான்தான். கார்த்திக் கதாநாயகனாக நடித்த அப்படமும் வெற்றிப் படமே. தொடர்ந்து அதே நிறுவனத்திற்காக 'வணக்கம் வாத்யாரே' என்ற படத்தை கார்த்திக்கை வைத்து அமீர்ஜான் இயக்கினார். 'ஓடங்கள்' என்ற படத்தையும், முரளி - சீதாவை வைத்து 'துளசி' என்ற படத்தையும் பி.எஸ்.வீரப்பா தயாரிக்க, அமீர்ஜான் இயக்கினார். இந்த எல்லா படங்களுக்கும் உரையாடல் எழுதியவர் வைரமுத்து. மறைந்த நடிகர் குலதெய்வம் ராஜகோபாலின் மகன்கள் சம்பத், செல்வம் இருவரையும் 'சம்பத்- செல்வம்' என்ற பெயரில் இசையமைப்பாளர்களாக படவுலகிற்கு அறிமுகம் செய்தவரும் அமீர்ஜான்தான்.
'துளசி' யாருமே தொடுவதற்கு அஞ்சக் கூடிய கதை. இளம் வயதில் துறவியாக ஆக்கப்பட்டு, மடமொன்றில் சேர்க்கப்படும் ஒரு அழகான இளைஞன், ஒரு இளம் பெண்ணால் எப்படி ஈர்க்கப்படுகிறான் என்பதும், அந்த காதல் ஜோடி பலர் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு, எப்படி சிறகடித்து பறக்கிறார்கள் என்பதும்தான் அப்படத்தின் கதை. அந்தப் படத்தைப் பார்த்து விட்டு, அதை இயக்க துணிந்த அமீர்ஜானை மனம் திறந்து நான் பாராட்டினேன்.