தமிழ் படவுலகின் கலங்கரை விளக்கு!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4121
மறக்க முடியுமா? - சுரா (Sura)
தமிழ் படவுலகின் கலங்கரை விளக்கு!
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர்... என்னுடைய 9 வயதிலிருந்து என் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெயர் இது.
1964 ஆம் ஆண்டு. அந்த வருடத்தில்தான் பாலச்சந்தர் படவுலகிற்குள் காலடி எடுத்து வைக்கிறார். எம்.ஜி.ஆர். நடித்த 'தெய்வத்தாய்' படத்திற்கு அவர் வசனம். தொடர்ந்து அவர் எழுதிய வெற்றி பெற்ற நாடகமான 'சர்வர் சுந்தரம்' திரைப்பட வடிவமெடுத்தது. ஏவி. எம். தயாரித்த அந்தப் படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. நாகேஷை சிம்மாசனம் போட்டு உட்கார வைத்த படமது.
1965ஆம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். அவர் இயக்கிய முதல் படம் 'நீர்க்குமிழி'. நாகேஷ் நடித்த படம். முழு படமும் ஒரு மருத்துவமனையிலேயே படமாக்கப்பட்டது. அதில் இடம் பெற்ற 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' என்ற பாடலை நம்மால் மறக்க முடியுமா?முதல் படத்திலேயே 'யார் இந்த பாலச்சந்தர்?' என்று கேட்க வைத்தார். அடுத்து அவர் இயக்கிய படம் 'நாணல்'. சிறையிலிருந்து தப்பித்து வரும் கைதிகள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து, அங்கு இருப்பவர்களை மிரட்டும் கதை. முழு படமும் ஒரு வீட்டிலேயே. அருமையாக இயக்கியிருந்தார் பாலச்சந்தர். தொடர்ந்து அவரின் இயக்கத்தில் வெளியான படம் 'மேஜர் சந்திரகாந்த்'. படத்தின் கதாநாயகி ஜெயலலிதா. அவரின் அண்ணனாக நாகேஷ். முத்திரை பதிக்கும் பாத்திரத்தில் சுந்தர்ராஜன். மிகச் சிறந்த படமாக அதை பாலச்சந்தர் இயக்கியிருந்தார். அதில் இடம் பெற்ற 'கல்யாண சாப்பாடு போடவா' 'ஒருநாள் யாரோ' ஆகிய பாடல்கள் காலத்தைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனவே!
முழு நீள நகைச்சுவைப் படமாகவும், நல்ல ஒரு குடும்பக் கதையாகவும் கே. பி. இயக்கிய படம் 'பாமா விஜயம்'. மக்களின் வரவேற்பைப் பெற்று நன்றாக ஓடிய படமது. 'வரவு எட்டணா செலவு பத்தணா'வை எப்படி மறக்க முடியும்?
அவர் இயக்கி ஓடிய இன்னொரு படம் 'நவக்கிரகம்'.
பாலச்சந்தருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்த படம்'எதிர் நீச்சல்'. மாடிப்படி மாதுவையும், அடுத்தாத்து அம்புஜத்தையும், இருமல் தாத்தாவையும் நாம் எப்படி மறப்போம்?'தாமரை கன்னங்கள்' பாடலை அந்தக் காலத்திலேயே என்ன அருமையாக படம் பிடித்திருப்பார் கே. பி. ! அவர் இயக்கி இப்போதும் அனைவரின் மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் படம் 'இரு கோடுகள்'. சவுகார் ஜானகி 'அச்சா' என்று உச்சரிக்கும் அழகையும், கூடைக்குள் குழந்தையைத் தேடும் நாகேஷையும், பாப்பா பாட்டு பாடிய பாரதி, புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் பாடல்களையும் நாம் மறக்க முடியுமா?முற்றிலும் மாறுபட்ட கதையுடன் பாலச்சந்தர் இயக்கிய படம் 'புன்னகை'. காந்திய கொள்கைப்படி நேர்மையாக வாழ முடியுமா, முடியாதா? இதுதான் அப்படத்தின் கதை. நாகேஷ் 'நானும் கூட ராஜாதானே நாட்டு மக்களிலே' என்று பாடிக் கொண்டு புகைவண்டி நிலையத்தில் பிச்சை எடுப்பார். ஜெமினி கணேசன் உண்மை மட்டுமே பேசி, வறுமையில் உழன்று சாவார். பொய் பேசியவர்கள் எல்லோரும் வசதியாக இருப்பார்கள். இன்று அதுதானே நடக்கிறது!
ஜெய்சங்கர் நடிக்க கே. பி. இயக்கிய படம் 'நூற்றுக்கு நூறு'. கவர்ச்சி நடனம் ஆடிக் கொண்டிருந்த விஜயலலிதாவிற்கு அருமையான கதாபாத்திரத்தைக் கொடுத்திருந்தார் பாலச்சந்தர். 'உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்' பாடல் நம் செவிகளில் எந்நாளும் முழங்குமே!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து ஒரே ஒரு படத்தை இயக்கினார் கே. பி. படத்தின் பெயர் 'எதிரொலி'. அருமையான கதை. ஆனால், படம் ஓடவில்லை.
பாலச்சந்தர் இயக்கி, பரபரப்பாக பேசப்பட்ட படம் 'அரங்கேற்றம்'. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக விலைமாதுவாக மாறும் ஒரு இளம் பெண்ணின் கதை. பிரமீளா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். அவரின் தம்பியாக கமல். 'மூத்தவள் நீ இருக்க' என்ற பாடல் இப்போதும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
'அவள் ஒரு தொடர்கதை' காலத்தைக் கடந்து வாழும் கே.பி.யின் படமிது. சுஜாதாவின் உயர்ந்த நடிப்பைக் கொண்ட படம். கடவுள் அமைத்து வைத்த மேடை, தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு ஆகிய பாடல்கள் அப்படத்தின் பெருமையைக் கூறிக் கொண்டேயிருக்குமே! கமலையும், கவிதாவாக நடித்த சுஜாதாவையும், அவரின் அண்ணனாக அறிமுகமான ஜெய்கணேஷையும், 'என்னடி உலகம்' பாடிய ஃபடாபட் ஜெயலட்சுமியையும் நாம் மறப்போமா?
சவுகார் ஜானகியின் சொந்தப் படம் 'காவியத் தலைவி'. அதை இயக்கியவர் பாலச்சந்தர். தாய், மகள் இரட்டை வேடங்களில் வாழ்ந்திருந்தார் ஜானகி. 'கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா?' என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் சவுகாரின் மிகச் சிறந்த நடிப்பும், கே.பி.யின் இயக்கமும் நம் ஞாபகக்தில் வரும்.
ஜெமினி கணேசனின் 100 ஆவது படம் 'நான் அவனில்லை'. அதை இயக்கியவர் பாலச்சந்தர். என்ன மாறுபட்ட கதை!
கே. பி. இயக்கிய அருமையான படம் 'சொல்லத்தான் நினைக்கிறேன்'. 'இதயம் பேசுகிறது' மணியனின் கதை. கதாநாயகன் சிவகுமார். ஜெயசித்ராவின் 'டொன்டொடெயின்' வசனம் இப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கிறதே!அதில் வில்லனாக நடித்த கமலை கதாநாயகனாக்கி கே. பி. இயக்கிய படம் 'மன்மத லீலை'. அதுவும் ஒரு வெற்றிப் படமே. பாலச்சந்தர் இயக்கிய இன்னொரு படம் 'பூவா தலையா' மதுரையில் பறந்த மீன் கொடியை, குற்றால அருவியிலே பாடல்களை நம்மால் மறக்க முடியுமா? பாலச்சந்தரின் மிக அருமையான கதையைக் கொண்ட படம் 'தாமரை நெஞ்சம்'. தொலைபேசியில் நீண்ட நேரம் பேசும் அந்த உச்சக் கட்ட காட்சி இப்போது கூட நினைவில் வருகிறது.