தமிழ் படவுலகின் கலங்கரை விளக்கு! - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4120
யாரும் நினைத்துப் பார்க்க முடியாத கதை 'அபூர்வ ராகங்கள்'. கமல் நடித்த அந்தப் படத்தில்தான் ரஜினியின் பிரவேசம்! படம் முழுக்க பாலச்சந்தரின் முத்திரை. கமல், ரஜினி இருவரையும் வைத்து கே. பி. பண்ணிய கனமான கதை 'மூன்று முடிச்சு'. என்ன பண்பட்ட இயக்கம்!அவரின் இன்னொரு குறிப்பிடத்தக்க படம் 'நிழல் நிஜமாகிறது'. ஷோபா என்ன இயல்பாக நடித்திருப்பார்!
ரஜினி, கமல், சுஜாதா மூவரும் நடிப்பில் முத்திரை பதிக்க, பாலச்சந்தர் இயக்கிய படம் 'அவர்கள்'. மலையாளம் கலந்த தமிழ் பேசிய கமலும், அவரின் பொம்மையும் மனதிலேயே நிற்கிறார்களே! கே.பி.யின் இன்னொரு மறக்க முடியாத படம் 'நினைத்தாலே இனிக்கும்'ரஜினி, சரிதா இருவரின் அருமையான நடிப்பைக் கொண்ட படம் 'தப்புத் தாளங்கள்'. 'அட என்னடா பொல்லாத வாழ்க்கை' என்ற ஒரு பாடலே படத்தின் கதையைக் கூறி விடுமே! கே.பி.யின் திறமையை படம் முழுக்க நாம் பார்க்கலாம்.
'நூல்வேலி'-பாலச்சந்தரின் திறமையை வெளிப்படுத்திய இன்னொரு படம். அவர் இயக்கிய மாறுபட்ட படம் '47 நாட்கள்'. சிவசங்கரியின் கதை.
தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'மரோ சரித்ரா'. கமலும், சரிதாவும் காதலர்களாக வாழ்ந்திருப்பார்களே!
தெலுங்கில் கே.பி. இயக்கிய இன்னொரு அருமையான படம் 'கோகிலம்மா'. கதாநாயகன் ராஜீவ். கேட்கும் சக்தி இல்லாத பெண்ணாக சரிதா! இப்போது கூட அந்த கதாபாத்திரம் என் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
கோமல் சுவாமிநாதன் நாடகமாக நடத்தி வெற்றி பெற்ற கதை 'தண்ணீர் தண்ணீர்'. அதை நல்ல ஒரு படமாக இயக்கிய பாலச்சந்தரை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். அடுத்து அவர் இயக்கிய அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி இரண்டுமே கே.பி. யின் முத்திரைப் படங்கள்தாம்.
வேலை இல்லா திண்டாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'வறுமையின் நிறம் சிவப்பு'... ஒரு நர்ஸின் போராட்ட வாழ்க்கையை வெளிப்படுத்திய 'மனதில் உறுதி வேண்டும்'... கலகலப்பான 'தில்லு முல்லு''பொய்க்கால் குதிரை'... மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற 'சிந்து பைரவி'... ஆணின் உதவியே இல்லாமல் பெண்ணால் வாழ முடியும் என்பதைக் கூறிய 'கல்யாண அகதிகள்'... முற்பாதியில் ஒரு கதையும், பிற்பாதியில் இன்னொரு கதையும் என்று எடுக்கப்பட்ட 'ஒரு வீடு இரு வாசல்'... இளமை தவழும் 'புன்னகை மன்னன்'... துணிச்சலான 'புது கவிதை'... தன்னம்பிக்கையூட்டும் 'உன்னால் முடியும் தம்பி'... வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட 'புதுப்புது அர்த்தங்கள்'... தனித்துவம் நிறைந்த 'கல்கி'... குஷ்புவை வைத்து இயக்கிய 'ஜாதிமல்லி'... மறக்க முடியாத 'டூயட்'... இளைஞர்களுக்கு வழி காட்டிய 'வானமே எல்லை'... இந்தியில் இயக்கி சாதனை புரிந்த ஏக் துஜே கே லியே... ஏக் நயீ பஹேலி... ஜராஸி ஜிந்தகி...
கே. பி. என்ற கே.பாலச்சந்தரின் சாதனைகளையும், பெருமைகளையும் இப்படி கூறிக் கொண்டே போகலாம்.
அரைக்கால் சட்டை அணிந்த சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே நான் அவரின் வெறித்தனமான ரசிகன். அவரின் பெயர் திரையில் வரும்போது உணர்ச்சி வசப்பட்டு கைதட்டியவன். இப்போதும் நான் அவரின் ரசிகனே. தமிழ் திரைப்படவுலகிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் அவர். கலையை நேசிப்பவர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்கம். இந்தியப் படவுலகில் தமிழ்ப் படவுலகிற்கு மரியாதையையும், மதிப்பையும் எப்போதோ வாங்கிக் கொடுத்தவர். காலத்தைக் கடந்து நிற்கும் ஒப்பற்ற திறமைசாலி. படவுலக வரலாற்றில் 'கே. பாலச்சந்தர்' என்ற பெயர் பொன்னெழுத்துக்களால் என்றும் பொறிக்கப்பட்டிருக்கும். அதுதான் 'இயக்குநர் சிகர'த்தின் யாரும் நெருங்க முடியாத சாதனை!
இனி வரும் காலமும், புதிய தலைமுறையும் அவரின் பெருமையை பேசிக் கொண்டேயிருக்கும். அது மட்டும் நிச்சயம்...