Lekha Books

A+ A A-

இரண்டு படங்களை இயக்கி இதயங்களில் வாழும் இயக்குநர்! - Page 2

அதற்குப் பிறகு ருத்ரையாவும். நானும்  அடிக்கடி சந்திப்போம். பல மணி நேரங்கள், பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்போம். இன்னும் சொல்லப் போனால். . . நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக ஆகிவிட்டோம். ஒருநாள் பழைய சம்பவத்தை  அவரிடம் ஞாபகப்படுத்தினேன். 'நான் அப்படியெல்லாமா கூறினேன்? என்றார் ருத்ரையா சிரித்துக் கொண்டே.

சில தவிர்க்க முடியாத காரணங்களால்  அந்தப் படம் கைவிடப்பட்டது. எனினும், எனக்கும், ருத்ரையாவுக்குமிடையே இருந்த நட்பு தொடர்ந்தது.

சில வருடங்களுக்குப் பிறகு கார்த்திக்கை வைத்து ஒரு படத்தை இயக்க  ருத்ரையா முயற்சித்தார். ஆனால், அதுவும் செயல் வடிவத்திற்கு வரவில்லை.

வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தன. நானும், ருத்ரையாவும்  சந்தித்து, நீண்ட காலமாகி விட்டன. சிறிதும் எதிர்பாராமல் ஒரு நாள் அவரை மந்தைவெளி சிருங்கேரி  மடம் இருக்கும் தெருவில் பார்த்தேன். தன் வீடு அங்குதான் இருக்கிறது என்று கூறி, என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தன் மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். எனக்கு காபி கொண்டு வந்து கொடுக்க, நான் பருகினேன்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மேலும் சில வருடங்கள் வேகமாக பாய்ந்தோடின. ஒருநாள் நான் அப்போது ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த இயக்குநர் மகேந்திரனைப்  பார்ப்பதற்காக போய்க் கொண்டிருந்தேன். வழியில்  ருத்ரையாவைப் பார்த்தேன். சற்று மெலிந்து போய் காணப்பட்டார். 'சார். . . எவ்வளவோ வருடங்கள் ஓடி விட்டன. இப்போது கூட ஒன்றுமில்லை. நீங்கள் ஏதாவது முயற்சி செய்து பாருங்கள்'என்றேன் நான். 'ஏதாவது பண்ண வேண்டும்' என்றார் அவர்.

ஒரு வருடத்திற்கு முன்பு ஒருநாள் ருத்ரையா எனக்கு ஃபோன் பண்ணினார். 'நாளை காலையில் நாம் அவசியம் சந்திக்க வேண்டும். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச வேண்டும்'என்றார். மறுநாளே நானும்,  அவரும் மயிலாப்பூர் சங்கீதா ஹோட்டலில் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பேசினோம். வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தும் வகையிலும், இன்றைய ரசிகர்கள் ரசிக்கிற மாதிரியும் ஒரு திரைக்கதையை முழுமையாக  எழுதி வைத்திருப்பதாக கூறிய அவர் அருமையாக தட்டெழுத்து செய்யப்பட்டு  ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்டிருந்த  திரைக்கதையை என் கையில் தந்தார். 'நீங்கள் முழு கதையையும் இப்போதே கேட்டால் நன்றாக இருக்கும். கொஞ்சம்  நேரம் ஒதுக்க முடியுமா?'என்று கேட்டார். 'இப்போதே கேட்கிறேன் சார்'என்றேன் நான். இருவரும் அவருடைய  லாய்ட்ஸ் காலனி வீட்டிற்குச் சென்றோம். இப்போது அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவருடைய மனைவி அவரிடமிருந்து பிரிந்து சென்று விட்டதாக கூறினார். தன் மனைவியைப் பற்றி மிகவும் உயர்வாக புகழ்ந்து பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் மிகவும் விளக்கமாக கதையைக் கூறினார். உண்மையிலேயே இன்றைய தலைமுறை ரசிக்கக் கூடிய அளவிற்கு மிகவும் அருமையாக திரைக்கதையை எழுதியிருந்தார் ருத்ரையா. நான் மனம் திறந்து அதை பாராட்டினேன்.

'இதை எப்படியாவது நடிகர் விக்ரமிடம் கூற வேண்டும்'என்றார். நான் விக்ரமின் மேனேஜர் கிரியிடம் இது சம்பந்தமாக  பேசினேன். இது நடந்தது சில மாதங்களுக்கு முன்பு. 'வெளிநாட்டில் நடைபெறும் 'அய்' படத்தின் ஷூட்டிங்கில்  விக்ரம் சார் இருக்கிறார். அவர் இங்கு வந்த பிறகு, நிச்சயம் உங்களையும், விக்ரம் சாரையும் சந்திக்க வைக்கிறேன். அதற்குப் பிறகு அவர் தீர்மானிக்கட்டும் 'என்றார் கிரி நேரடியாக ருத்ரையாவிடமே. காலம் அப்படியொரு சந்திப்பிற்கே வழி உண்டாக்கித் தரவில்லை என்பதுதான் விந்தையே.

இதற்கிடையில் ஒருநாள் எனக்கு ருத்ரையா எஸ். எம். எஸ். பண்ணியிருந்தார். நான் மொழி பெயர்த்திருந்த வின்சென்ட் வான்கா தன் தம்பி தியோவிற்கு எழுதிய கடிதங்களைக் கொண்ட நூலை இரண்டாவது முறையாக வாசித்ததாகவும், இப்போதும் தன் கண்களில் அரும்பிய கண்ணீரை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் திரையுலகம் ஒரு மிகச் சிறந்த இயக்குநரை இழந்து விட்டது. நான் என் மீது அன்பு வைத்திருந்த. என்னுடன் உண்மையான நட்புடன் பழகிய  ஒரு மதிப்பிற்குரிய  நண்பரை இழந்து விட்டேன்.

இப்போதும் எனக்கு புரியாத புதிர். . . கடந்த 34 வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல்  ருத்ரையாவால் எப்படி இருக்க முடிந்தது?இன்னும் எவ்வளவோ வருடங்கள் உயிருடன் இருப்பார் என்று நினைத்து, இத்தனை வருடங்களில் அவருடன் ஒரு புகைப்படம் கூட நான் எடுத்துக் கொள்ளவில்லையே!

எது எப்படியோ. . . ருத்ரையாவின் புன்னகை தவழும் முகம் என் மனதிற்குள் வாழ்ந்து கொண்டே இருக்கும். அவரின் குரல் என் இறுதி மூச்சு நிற்கும் வரை  என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். 

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel