Lekha Books

A+ A A-

இரண்டு படங்களை இயக்கி இதயங்களில் வாழும் இயக்குநர்!

மறக்க முடியுமா?சுரா (Sura)

இரண்டு படங்களை இயக்கி இதயங்களில் வாழும் இயக்குநர்!

புகழ் பெற்ற திரைப்பட இயக்குநரும். என் நெருங்கிய நண்பருமான ருத்ரையா இன்று மாலையில் இந்த மண்ணிலிருந்து விடை பெற்றுக் கொண்டார். இந்தச் செய்தி என் காதில் வந்து விழுந்தபோது,  உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் சிறிதும் எதிர் பார்க்காத செய்தி அது. அந்தச் சமயத்தில்  என் மனம் முழுக்க ருத்ரையா ஆக்கிரமித்திருந்தார். என் மனதில் வேறு  எந்த எண்ணங்களும் உண்டாகவில்லை.  என் மனம் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

1978 ஆம் வருடம். அப்போது நான் மதுரையில் இருந்தேன். மதுரை காமராஜர்  பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழி கல்வி மூலம் எம். ஏ. படித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் 'அவள் அப்படித்தான்' படம் திரைக்கு வந்தது. மதுரை பழங்கானத்திலிருந்த ஜெகதா திரையரங்கில் அந்தப் படத்தை நான் பார்த்தேன். அந்தப் படத்தில் நடித்திருந்த கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஷ்ரிப்ரியா மூவரும் நடித்திருந்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதனால் இந்த படத்திற்கு ஒரு  எதிர்பார்ப்பு உண்டாகி விட்டிருந்தது. அப்போது வெளிவந்த பத்திரிகைகளில் 'அவள் அப்படித்தான்'படத்தைப் பற்றி பரவலாக சிறப்பாக எழுதியிருந்தார்கள். ருத்ரையா என்ற இளம் இயக்குநரைப் பற்றி பாராட்டி எழுதியிருந்தார்கள். நான் ஆர்வத்துடன் படம் பார்க்கச் சென்றதற்கு இவையெல்லாம்தான் காரணங்கள்.

திரையரங்கில் பெரிய அளவில் கூட்டமில்லை. மிகவும் குறைவாகவே ஆட்கள் வந்திருந்தார்கள். எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. தமிழில் உருவான மிகச் சிறந்த படங்களில் அது ஒன்று என்ற எண்ணம் அப்போதே என் மனதில் உண்டாகி விட்டது. படத்தின் மைய கதாபாத்திரமான பெண் பாத்திரம் மிகவும் மாறுபட்ட தன்மை கொண்டதாகவும், நவீன சிந்தனை கொண்டதாகவும், துணிச்சல் நிறைந்ததாகவும், எதற்கும் கலங்காததாகவும் அமைக்கப்பட்டிருந்தது. தமிழ் படங்களில் நான் அதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரமாக அது இருந்தது. கமல் ஏற்று நடித்த கதாபாத்திரம் முரண்பாடுகள் நிறைந்த இன்றைய இளைஞனை  அப்படியே நம் கண்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது. ரஜினி ஏற்று நடித்த எந்தவித பாசாங்கும் இல்லாத, வெளிப்படையான கதாபாத்திரம் கூட புதுமையானதே. படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் வரும் சரிதா  யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரம்.

படத்தில் ஒரு சிறு குறை கூட எனக்கு தெரியவில்லை. 'யார் இந்த ருத்ரையா?இவ்வளவு அருமையாக படத்தை இயக்கியிருக்கிறாரே! என்று நான் ஆச்சரியத்துடன் நினைத்தேன். அப்போதே எனக்கு அவர் மீது உயர்ந்த மரியாதை உண்டாகி விட்டது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் வரும் 'ஒரு கதை இன்று முடியலாம். முடிவிலும் ஒன்று தொடரலாம். . . இனி எல்லாம் சுகமே!'என்ற வரிகள் இப்போது கூட என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கமல் தன் சொந்தக் குரலில் பாடிய  'பன்னீர் புஷ்பங்களே' என்ற பாடல் எப்போதும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும்.

என்னதான் பத்திரிகைகள் பாராட்டி எழுதியிருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் 'அவள் அப்படித்தான்'படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பின் மீது எனக்கு மன நிறைவு உண்டாகவில்லை. இன்னும் பெரிய அளவில்  மக்கள் அந்தப் படத்தைத் தலையில் வைத்து கொண்டாடியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

அதற்குப் பிறகு சில மாதங்களில் நான் சென்னை வந்து விட்டேன். இங்கு வந்து சாவி, பிலிமாலயா ஆகிய பத்திரிகைகளின் உதவி ஆசிரியராக நான் பணியாற்றினேன். 1980 ஆம் வருடத்தில் 'கிராமத்து அத்தியாயம்' என்ற படத்தை ருத்ரையா இயக்கி, தயாரித்து வெளியிட்டார். 'அவள் அப்படித்தான்' படத்திற்கு இசையமைத்த இளையராஜாதான் 'கிராமத்து அத்தியாயம்' படத்திற்கும் இசையமைப்பாளர். 'ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது' என்ற ஒரு இனிமையான பாடலை அந்தப் படத்தில் இடம் பெறச் செய்திருந்தார்  இளையராஜா. கிருஷ்ணவேணி திரையரங்கில் நான் படத்தைப பார்த்தேன். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கூச்சலும், கேலியும், கிண்டலும் காதைக் கிழித்தன. மிகவும் மெதுவாக நகர்ந்த அப்படம் மக்களுக்கு பிடிக்கவில்லை. அப்போதே எனக்கு தெரிந்து விட்டது இந்தப் படம் ஓடாது என்று. அதே போல படம் ஓடவில்லை.

இந்தச் சூழ்நிலையில் 'வசந்தம் வருகிறது' என்ற பத்திரிகைக்காக நாங்கள் ருத்ரையாவை பேட்டி காணச் செல்கிறோம். நாங்கள் என்றால் நான், ஜவகர். சிகாமணி, ராஜய்யா, முத்தையா ஆகியோர். படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருந்த வேளையில் அந்தப் பேட்டி. எல்லா கேள்விகளுக்கும் எந்தவித பதட்டமோ, கவலையோ இல்லாமல் பதில் கூறினார் ருத்ரையா. பேட்டி நடைபெற்ற இடம் அவரின் அலுவலகம் இருந்த ஆழ்வார்பேட்டை. பேட்டி முடிந்ததும் ருத்ரையாவின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்ட மனிதன் என்ற முறையில், அருகில் அமர்ந்து 'சார். , நீங்கள் இயக்கிய முதல் படமான 'அவள் அப்படித்தான்' மிகச் சிறந்த ஒரு படமாக இருந்தது. அந்தப் படத்தில் உங்களுக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தாலும், இன்னும் உயர்வான  வரவேற்பு அதற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. 'கிராமத்து அத்தியாயம்' படத்தை நானும் பார்த்தேன். படம் ஆமை வேகத்தில் மெதுவாக நகர்ந்ததால், மக்கள் படத்தை ரசிக்கவில்லை. தமிழக மக்கள் பொதுவாகவே வேகமாக இருந்தால்தான் படத்தை ரசிப்பார்கள். அதனால். இனி படத்தை இயக்கும்போது சற்று வேகம் இருப்பது மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் நலம் விரும்பி என்ற முறையில் நான் இதை கூறுகிறேன்' என்றேன் நான். அதற்கு ருத்ரையா 'இது என் பணம். அதை எப்படி வேண்டுமானாலும்  வீணாக்குவேன்' என்றார். அதற்கு நான் பதிலெதுவும் கூறவில்லை.

வருடங்கள் கடந்தோடின. 1987ஆம் ஆண்டு. அப்போது நான் ரகுவரனுக்கு பி. ஆர். ஓ. வாக இருந்தேன். ரகுவரனை வைத்து ஒரு படத்தை இயக்கும் எண்ணத்துடன் ருத்ரையா வந்தார். ஒரு இசைக் கலைஞனை மையமாக வைத்து பண்ணப்பட்ட கதை. ருத்ரையா ரகுவரனிடமும், என்னிடமும் கதையைக் கூறினார். கதை ஏ-ஒன்!எங்கள் இருவரையும் ருத்ரையா லாய்ட்ஸ் காலனியிலிருந்த தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு ஆங்கில  புதினத்தின் மேலட்டையைக் காட்டி, அதில் வரையப்பட்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தைக் காட்டி, அதுதான் ரகுவரனின் கெட்-அப்  என்று கூறினார்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel