சிவாஜி கணேசன் பாராட்டிய விளம்பரப் பட இயக்குநர்! - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4366
இது வரை நான் கூறிய, லேகா ரத்னகுமார் இயக்கிய தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் 'ஒரு குழந்தை தாயாகிறது'என்ற அந்த டெலிஃபிலிம்-அனைத்திற்கும். . . நான் கூறித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. நான்தான் பி.ஆர்.ஓ.
இத்தனை வருடங்களில் எனக்கும், லேகா ரத்னகுமாருக்குமிடையே தொழிலையும் தாண்டி ஒரு ஆழமான நட்பும், நெருக்கமான புரிதலும், அன்பு நிறைந்த தோழமையும் உண்டாகி விட்டிருந்தது என்பதை நான் கூற வேண்டுமா என்ன?
இந்த கால கட்டத்தில் விளம்பர உலகத்திலும் தனக்கென ஒரு அருமையான பெயரைச் சம்பாதித்திருந்தார் ரத்னகுமார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, மகராஜா காஃபி ஆகிய விளம்பரங்களைத் தொடர்ந்து ரத்னகுமார் 'இதயம் நல்லெண்ணெய்'க்காக தயாரித்த வானொலி விளம்பரம் அவரை உலக தமிழர்கள் அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது. தமிழக சட்டமன்றத்தில் அந்த விளம்பரத்தில் இடம் பெற்ற வாசகங்கள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனே அந்த விளம்பர வாசகங்களை ஒரு முறை ஒரு வரி கூட விடாமல் பேசிக் காட்டினார் என்பதிலிருந்தே அந்த வானொலி விளம்பரம் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து 'இதயம் நல்லெண்ணெய்'க்காக ஜோதிகாவை வைத்தும், 'டாட்ஸ் அப்பள'த்திற்காக சினேகாவை வைத்தும், 'மந்த்ரா கடலை எண்ணெய்க்காக பாக்யராஜ்-பூர்ணிமாவை வைத்தும் லேகா ரத்னகுமார் இயக்கி, உருவாக்கிய விளம்பரப் படங்கள் ஒவ்வொன்றும் எப்போதும் எல்லோராலும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றனவே!அது எவ்வளவு பெரிய விஷயம்!
இவை தவிர, ராசாத்தி நைட்டீஸ், இதயம் வெல்த், சம்பந்தி எள் ஆகியவற்றிற்காக லேகா ரத்னகுமார் இயக்கிய விளம்பர படங்களும் உயரத்தில் வைத்து பேசப்பட்டவையே. . . புகழ்ந்து பேசப்பட்டவையே.
விளம்பரப் பட உலகத்தில் ஒரு அரசனாக வலம் வந்து கொண்டிருக்கும் ரத்னகுமார், அடுத்து கவனம் செலுத்திய விஷயம்-திரைப் படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது. ஜெர்மனியிலிருக்கும் 'சோனட்டான்' என்ற இசை நிறுவனத்துடன் இணைந்து, ரத்னகுமார் 'லேகா சோனட்டான் ம்யூசிக் லைப்ரரி'என்ற ஒரு நிறுவனத்தைச் சொந்தத்தில் வைத்திருக்கிறார். அதில் உலக நாடுகள் அனைத்தின் இசையும் இருக்கின்றன. இந்திய திரைப் பட உலகம் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாத விஷயம். ரத்னகுமாரிடம் ஒரு விலை மதிக்க முடியாத இசை கருவூலம் இருக்கிறது. அதை படவுலகம்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்போது இணையதள உலகத்தில்-ரத்னகுமார். லேகா ஃபுட்ஸ். காம்-இது ரத்னகுமாரின் இன்னொரு முத்திரை. இந்த இணைய தளத்தில் உலக நாடுகளின் உணவு வகைகளின் செய்முறைகள் விளக்கமாக கூறப்பட்டிருக்கின்றன. எந்த நாட்டு உணவையும் இந்த இணைய தளத்தைப் பார்த்து யாருடைய உதவியும் இல்லாமல் நம் வீட்டிலேயே சமைக்கலாம். எவ்வளவு பெரிய விஷயம்!ரத்னகுமாருக்கு ஒரு பூங்கொத்து தரலாமா?ரத்னகுமாரின் இன்னொரு முயற்சி-லேகாபுக்ஸ். காம். எனக்காகவும், என் படைப்புகளுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இணைய தளம் அது. நான் நேரடியாக எழுதிய படைப்புகள், நான் பல்வேறு மொழிகளிலிருந்து மொழி பெயர்த்த உலக, இந்திய இலக்கிய படைப்புகள். . . இவை அனைத்தும் அந்த இணைய தளத்தில் இருக்கின்றன. உலக இசை, உலக உணவு, உலக இலக்கியம். . . ஒரே கூரைக்குக் கீழே. நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்.
லேகா ரத்னகுமாரின் அடுத்த முயற்சி-திரைப் படம் இயக்குவது. 'காணவில்லை' என்ற பெயரில் ஒரு திரைப் படத்தை விரைவில் இயக்க இருக்கிறார் ரத்னகுமார். அவரே எழுதியிருக்கும் கதை. க்ரைம் கதைதான். நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்கள், அதிர்ச்சியடைய வைக்கும் சம்பவங்கள், எதிர் பாராத சஸ்பென்ஸ். . . அனைத்தும் இருக்கின்றன படத்தில். ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்த படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் ரத்னகுமார்.
1987 ஆம் ஆண்டில் லேகா ரத்னகுமாருக்கும், எனக்குமிடையே உண்டான நட்பு 27 ஆம் வருடத்தில் கால் வைத்து பெருமையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக உண்மையிலேயே நான் சந்தோஷப் படுகிறேன்.