சிவாஜி கணேசன் பாராட்டிய விளம்பரப் பட இயக்குநர்!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4369
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
சிவாஜி கணேசன் பாராட்டிய விளம்பரப் பட இயக்குநர்!
எனக்கு அருகில் இருப்பவர் லேகா ரத்னகுமார். பிரபல விளம்பரப் பட இயக்குநர். 'லேகா அட்வெர்டைஸிங் ஏஜன்ஸி' என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தைச் சொந்தத்தில் நடத்தி வரும் ரத்னகுமார் விருதுநகரைச் சேர்ந்தவர்.
எனக்கு இவர் 1987 ஆம் ஆண்டில் அறிமுகமானார். அப்போது ரத்னகுமார் சென்னை தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசைக்காக 'இருட்டில் ஒரு வானம்பாடி' என்ற பெயரில் 13 வாரங்கள் ஒளிபரப்பாகக் கூடிய ஒரு தொடரை இயக்கிக் கொண்டிருந்தார். க்ரைம் பாணியில் அமைந்த அத்தொடருக்கான கதையை எழுதியவர் பிரபல எழுத்தாளரான ராஜேஷ் குமார். அத்தொடருக்கு மக்கள் தொடர்பாளராக நான் பணியாற்ற வேண்டும் என்பதற்காக என்னை அணுகினார் ரத்னகுமார். நான் மகிழ்ச்சியுடன் அதற்கு சம்மதித்தேன். 'நான் திரைப்படங்களுக்கு பி.ஆர்.ஓ. வாக பணியாற்றிக் கொண்டிருப்பவன். தொலைக்காட்சித் தொடர்கள் என்றால் பலரும் மிகவும் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரங்களைக் கூட ஒழுங்காக பண்ணுவதில்லை. நான் நீங்கள் இயக்கும் இத்தொடருக்கு ஒரு திரைப்படத்திற்கு பண்ணுவதைப் போன்ற முழுமையான அக்கறையுடன் பணியாற்றி, நாளிதழ்களிலும், வார மற்றும் மாத இதழ்களிலும் செய்திகளும், புகைப்படங்களும் வரும்படி செய்கிறேன்'என்றேன் நான். சொன்னதோடு நிற்காமல், அதைச் செயல் வடிவிலும் காட்டினேன். மிகவும் அருமையாக அந்தத் தொடரை இயக்கியிருந்தார் ரத்னகுமார். பல திடுக்கிடும் சம்பவங்களும், மர்ம முடிச்சுகளும், எதிர்பாராத திருப்பங்களும், சஸ்பென்ஸும் நிறைந்த அத்தொடரை மக்கள் விரும்பி ரசித்தார்கள். அது ஒரு வெற்றித் தொடராக எல்லோராலும் பேசப்பட்டது. 'மைலாப்பூர் அகாடமி' என்ற அமைப்பு அந்த வருடத்தின் சிறந்த தொலைக்காட்சித் தொடரின் இயக்குநர் என்று லேகா ரத்னகுமாரைத் தேர்வு செய்து பெருமைப்படுத்தியது.
தொடர்ந்து அடுத்த தொலைக்காட்சி தொடரை இயக்க ரத்னகுமார் ஆயத்தமானார். இரண்டாவது தொடரின் பெயர் 'இருட்டுக்கு இரண்டு நிறம்'. இதுவும் சென்னை தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசைக்குத்தான். இந்த தொடருக்கான கதையையும் ராஜேஷ் குமாரே எழுதியிருந்தார். இரண்டாவது தொடரிலும் ரத்னகுமாருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
மூன்றாவதாக ஒரு தொடரை ரத்னகுமார் இயக்கினார். 'அஞ்சாதே அஞ்சு'என்ற பெயரில் சென்னை தொலைக்காட்சியின் முதல் அலைவரிசையில் ஒளிபரப்பான இத்தொடருக்கான கதையை எழுதியவர்... வேறு யார்?அதே ராஜேஷ் குமார்தான். இதுவும் க்ரைம் கதை ஒன்றை அடிப்படையாக கொண்டதுதான். மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது இத்தொடர். ஒவ்வொரு வாரமும் எப்போது வரும், நாம் இந்தத் தொடரை எப்போது பார்ப்போம் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக தொடர் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டார் ரத்னகுமார். ஆங்கில திரைப்படங்களுக்கு நிகராக அந்தத் தொடரை இயக்கினார் லேகா ரத்னகுமார் என்பதே உண்மை.
லேகா ரத்னகுமார் இயக்கிய நான்காவது தொடர் 'நீ எங்கே என் அன்பே?'இதற்கும் ராஜேஷ் குமார்தான் கதை. இதுவும் திருப்பங்கள் பல நிறைந்த க்ரைம் கதைதான். முழு தொடரும் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது. ஒரு திரைப்படத்தைப் போலவே அந்தத் தொடரின் ஒவ்வொரு காட்சியையும் இயக்கியிருந்தார் ரத்னகுமார். படவுலகத்தைச் சேர்ந்த பலரும் கூட அந்தத் தொடரைப் பார்த்து விட்டு, மனம் விட்டு புகழ்ந்தனர். அந்தத் தொடரில் ரத்னகுமார் இன்னொரு புதுமையையும் செய்தார். சாதாரணமாக தொலைக்காட்சித் தொடர் என்றாலே, டைட்டில் பாடல் மட்டும்தான் இடம் பெறும். ஆனால், திரைப்படங்களில் வருவதைப்போலவே 6 பாடல்களை அதில் இடம் பெறச் செய்திருந்தார் ரத்னகுமார். அந்தப் பாடல்களுக்கு நடன இயக்குநர்கள் 'மூவ்மென்ட்ஸ்' அமைக்க, பாடல் காட்சிகளை படமாக்கினார் ரத்னகுமார். அநேகமாக இவ்வளவு பாடல்களுடன் ஒரு தொலைக்காட்சித் தொடரை இயக்கியவர் இன்று வரை லேகா ரத்னகுமார் மட்டுமாகத்தான் இருக்க முடியும். 'நீ எங்கே என் அன்பே? விஜய் மற்றும் ராஜ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்தத் தொடரை இயக்கியதற்காகவும் ரத்னகுமார் அனைவராலும் பேசப்பட்டார். . . பாராட்டப்பட்டார்.
அடுத்து லேகா ரத்னகுமார் இயக்கியது-இந்திய அரசாங்கத்திற்காக ஒரு டெலிஃபிலிம். படிக்கும் வயதிலேயே ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் என்னென்ன பிரச்னைகள் வரும், அதனால் ஒரு சிறுமியின் வாழ்க்கை எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை மிகவும் ஆழமாக அலசும் படம் அது. அந்த டெலிஃபிலிமை மிகவும் சிறப்பாக இயக்கியிருந்தார் ரத்னகுமார். அது 'தூர் தர்ஷ'னில் இந்தியா முழுக்க ஒளிபரப்பாகி, லேகா ரத்னகுமாரின் பெயரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது.