Category: சினிமா Published Date Written by சுரா Hits: 3064
பேட் ஃப்ராங்க் (Bad Frank)
(2017 - ஹாலிவுட் திரைப்படம்)
சுரா
2017ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படம். இப்படத்தின் இயக்குநர் டோனி ஜெர்மினேரியோ. ஃப்ராங்க் என்ற மனிதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது. படத்தின் கதாநாயகன் கெவின் இண்டர்டொனாட்டோ. ஃப்ராங்க் கதாபாத்திரத்திற்கு மிகவும் அருமையாக இவர் பொருந்தியிருந்தார்.
வன்முறையில் ஒரு காலத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் சில காரணங்களால், வன்முறையே வேண்டாம் என்று ஒதுங்கி, மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், அவனை அமைதியாக மற்றவர்கள் வாழ விட்டால்தானே! இதுதான் இப்படத்தின் கதைக் கரு.
ஃப்ராங்க் மர வேலைகள் செய்யும் ஒரு மனிதன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன். தனிமையில் இருக்கும் தன் வீட்டிற்கு வெளியே மரங்களை அறுத்துக் கொண்டும், அவற்றை வைத்து ஏதாவது செய்து கொண்டும் இருப்பவன். அவனுடைய மனைவி ஜினா மீது அவனுக்கு மிகுந்த அன்பும், காதலும். அவளுக்கும்தான்...... இருவரும் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஃப்ராங்கின் தந்தை, தாய் இருவருக்குமே அவனைப் பிடிக்காது. பல வன்முறைச் செயல்களில் முன்பு அவன் ஈடுபட்டதே அதற்குக் காரணம். ஆனால், அவன் தற்போது எந்த வன்முறைகளிலும் ஈடுபடுவதில்லை. எனினும், தன்னைப் பார்க்க வரும் ஃப்ராங்க்கிடமே ‘எனக்கு மகன் என்று யாருமில்லை. நீ யார் என்றே எனக்கு தெரியாது’ என்று கூறுகிறார் அவனுடைய தந்தை சார்லி. அதனால் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறான் ஃப்ராங்க்.
இதற்கிடையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிக்கி என்ற தன் பழைய பார்ட்னரை ஒரு இடத்தில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஃப்ராங்கிற்கு உண்டாகிறது. முன்பு ஃப்ராங்கும் மிக்கியும் சேர்ந்து எத்தனையோ அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். மிக்கியால் ஃப்ராங்கிற்கு மிகப் பெரிய பாதிப்பு உண்டாகியிருக்கிறது. அதனால் அவனுடைய நட்பே தனக்கு தேவையில்லை என்று முற்றிலுமாக அவனிடமிருந்து விலகியிருக்கிறான் ஃப்ராங்க். இந்தச் சூழ்நிலையில்தான் அந்த சந்திப்பு நடைபெறுகிறது.
அந்த சந்திப்பிற்குப் பிறகு ஒரு நாள் ஃப்ராங்க் தன் வீட்டிற்கு வரும்போது, அங்கு அவனுடைய மனைவி ஜினாவுடன் பேசிக் கொண்டிருக்கிறான் மிக்கியின் உதவியாளரான இளைஞன். அதைப் பார்த்து மிகுந்த கோபத்திற்கு ஆளாகிறான் ஃப்ராங்க். மிகவும் அருகிலேயே தான் வசிப்பதாக கூறுகிறான் அந்த இளைஞன்.
அதைத் தொடர்ந்து ஒரு நாள். ஃப்ராங்கின் மனைவி ஜினா, அதிர்ச்சியடையும் வகையில் கடத்தப்படுகிறாள். கடத்தியவன் மிக்கியின் ஆள்தான். பழைய பகையை மனதில் வைத்து மிக்கிதான் அந்த காரியத்தைச் செய்யுமாறு கூறியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்கிறான் ஃப்ராங்க்.
அதற்குப் பிறகு ஃப்ராங்க் அமைதியாக இருப்பானா? குட் ஃப்ராங்க், பேட் ஃப்ராங்க் ஆக மாறுகிறான். நாகரீக மோகம் பிடித்து இரவு வேளைகளில் கிளப், ஹோட்டல், மது, ஆண்களின் நட்பு என்று அலைந்து திரியும் மிக்கியின் மகள் கிறிஸ்டலை கடத்துகிறான் ஃப்ராங்க். அவளை ஒரு தனிமையான கட்டிடத்தில் கண்களில் துணியைக் கட்டி அடைத்து வைக்கிறான்.
ஃபராங்க் யார் என்பதை கிறிஸ்டல் தெரிந்து கொள்கிறாள். தான் கடத்தப்பட்டதற்கான காரணத்தையும் அவள் தெரிந்து கொள்கிறாள். பழிக்குப் பழி வாங்கும் செயலில் ஃப்ராங்க் ஈடுபட்டிருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொள்கிறாள். அவன் மீது கோபத்திற்குப் பதிலாக இனம் புரியாத ஒரு ஈர்ப்பு உண்டாகிறது கிறிஸ்டலுக்கு. அடைக்கப்பட்ட இடத்தில் அவர்களுக்கிடையே உடல் ரீதியான உறவு ஏற்படுகிறது. அதை மனப் பூர்வமாக விரும்பி ஏற்றுக் கொள்கிறாள் கிறிஸ்டல்.
அதற்குப் பிறகு கிறிஸ்டலுடன் மிக்கிக்கு முன்னால் வந்து நிற்கிறான் ஃப்ராங்க். அங்கு கட்டப்பட்ட நிலையில் கிடக்கிறாள் ஃப்ராங்கின் மனைவி ஜினா. அப்போது எதிர்பாராத பல சம்பவங்கள் அங்கு நடக்கின்றன. தான் கடத்தி உறவு, கொண்ட இளம் பெண் கிறிஸ்டலை தன் கையாலேயே கொல்கிறான் ஃப்ராங்க். மிக்கியையும் அவன் தீர்த்து கட்டுகிறான். அனைத்தும் முடிந்து, காரில் தன் மனைவியுடன் அவன் அமைதியாக பயணிக்கிறான். தனித்து இருக்கும் சாலையில் கார் தூரத்தை நோக்கி பயணித்துச் செல்ல, படம் முடிகிறது.
வன்முறை நிறைந்த ஒரு ஆக்ஷன் படத்தை விறு விறுப்புடன் படமாக்கியிருக்கும் இயக்குநர் டோனி ஜெர்மினேரியோவை உண்மையிலேயே நாம் பாராட்ட வேண்டும். படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியும் முழுமையாக செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் மிகவும் நேர்த்தியாக படத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
எப்படிப்பட்ட கொடூர செயலைச் செய்வதற்கும் தயங்காத கதாபாத்திரமாக ஃப்ராங்க் இருந்தாலும், அந்த கதாபாத்திரம் படம் முழுவதுமே அதிகம் பேசுவதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே ஃப்ராங்க் பேசுகிறான். அவனும் அவனுடைய மனைவியும் உரையாடும் காட்சிகளில் அவள் மீது அவன் கொண்டிருக்கும் அளவற்ற அன்பை நம்மால் உரை முடிகிறது. தன் காதல் மனைவியே உயிர் என வாழ்ந்து கொண்டிருக்கும் அவனால் மனைவி கடத்தப்பட்டதைச் சிறிதளவாவது தாங்கிக் கொள்ள முடியுமா? கடத்தப்பட்டபோது ஜினாவின் கையில் வைத்திருந்த அலைபேசியில் ஒலித்த ஆணின் குரலைக் கேட்டு, அந்த இடத்திற்கு புயலென ஓடி வருகிறானே, ஃப்ராங்க்! அந்த காட்சி மிகவும் அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது.
கிறிஸ்டலை ஃப்ராங்க் கடத்திச் செல்லும் காட்சி மிகவும் நேர்த்தியாக படத்தில் அமைந்திருக்கும். கண்களில் சுற்றப்பட்டிருந்த துணியை அவிழ்க்கும் வரையில், தன்னை கடத்திக் கொண்டு வைத்திருப்பது ஃப்ராங்க்தான் என்று அவளுக்குத் தெரியாது. தெரியும்போது, அவள் ஆச்சரியப்படுகிறாள். தான் சிறுமியாக இருந்தபோது அவள் பார்த்த ஃப்ராங்க்தான். அவள் பார்த்தது மட்டுமல்ல.... அந்த வயதிலேயே அவன் மீது அவளுக்கு விருப்பமும் இருந்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ.... நெருப்பில் பஞ்சு பற்றிக் கொள்வதைப் போல, ஃப்ராங்கிடம் அவள் பற்றிக் கொள்கிறாள். படம் பார்ப்போர் சிறிதும் எதிர்பாராத ஒரு காட்சி அது.... எனினும், காட்சி படமாக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அந்த நெருக்கம் தவிர்க்க முடியாத ஒன்று என்ற எண்ணமே யாருக்கும் உண்டாகும். கிறிஸ்டலாக நடித்திருக்கும் லின் மான்ஸினெல்லி உண்மையிலேயே பேரழகிதான்!
குழந்தைத்தனமான மனதுடன், எந்தவித கோபமும் அடையாமல் ஃப்ராங்குடன் நெருங்கிப் பழகி, அவனுக்குத் தன் சரீரத்தையே கொடுப்பதற்குத் தயாரான கிறிஸ்டலை, சிறிதும் இரக்கமே இல்லாமல் கொடூர மனதுடன் கொல்லும் ஃப்ராங்கின் செயல், படம் பார்த்த பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனினும், அவளுடன் சரீர உறவு கொண்ட விஷயத்தை அவள் தன் தந்தை மிக்கியிடம் கூறி விட்டால், அதனால் உண்டாகக் கூடிய பின் விளைவுகளை நினைத்து அவன் அப்படிச் செய்திருக்கலாம் என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
இயல்பு நிலைக்கு மாறான பல குணங்களைக் கொண்ட ஃப்ராங்கின் முகம் எப்போதும் சற்று கடுமை நிறைந்ததாகவே காணப்படும். பேச வேண்டிய கட்டாயம் உண்டானால் மட்டுமே அவன் பேசுவான். எனினும், சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரிக்கிறான். அழ வேண்டிய நேரத்தில் அழுகிறான்.
படத்தின் இறுதி காட்சியில் மனைவி ஜினாவை விடுவித்து, காரில் அழைத்துச் செல்லும்போது கூட, காரின் பின் பகுதியில் அவள் கயிறால் கட்டப்பட்ட நிலையில்தான் கிடக்கிறாள். மிக்கி கட்டிய அந்த கயிறைக் கூட அவிழ்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை ஃப்ராங்க். ஆமாம்...... அவன் மனிதன் பாதி...... மிருகம் பாதி....... அதனால்தானோ என்னவோ, படம் முழுக்க அவன் நம்மை காந்தமென ஈர்க்கிறான்.