Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ஏ தவ்சன்ட் டைம்ஸ் குட் நைட்

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

ஏ தவ்சன்ட் டைம்ஸ் குட் நைட்- A Thousand Times Good Night

(நார்வே திரைப்படம் 2013)

தவ்சன்ட் டைம்ஸ் குட் நைட் -- 2013 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த நார்வே நாட்டு திரைப்படம்.  படத்தின் இயக்குநர் எரிக் போப் (Erik Poppe).  படத்தின் கதாநாயகி ஜுலியட் பினோச்சே (Juliette Binoche).  ஆங்கில மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் 117 நிமிடங்கள் ஓடக் கூடியது.  2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற 'மான்ட்ரியல் உலக திரைப்பட விழாவில்' இப்படத்திற்கு நடுவர்களின் சிறப்பு விருது கிடைத்தது.

ஒரு பெண் புகைப்பட கலைஞரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மாறுபட்ட படமிது.  படத்தின் கதை என்ன என்பதைப் பார்ப்போமா?

ரெபேக்கா (Rebecca) ஒரு பெண் புகைப்பட கலைஞர்.  சாதாரண புகைப்படங்களை எடுக்கக் கூடியவள் அல்ல.  சாகசக் களங்களில் துணிச்சலாக புகைப்படங்களை எடுக்கும் நவீன பெண் அவள்.  போர்க்களங்களுக்குச் சென்று எந்த வித பயமும் இல்லாமல் அவள் புகைப் படங்களை எடுப்பாள்.  அது பத்திரிகைகளிலோ அல்லது புத்தகத்திலோ பிரசுரமாகி, உலகமெங்கும் பேசப்படும். பல நாடுகளின் கவனத்தை அவளுடைய புகைப்படங்கள் ஈர்க்கும்.  அவள் திருமணமானவள். அவளுடைய கணவனின் பெயர் மார்க்கஸ்.  அவர்களுக்கு இரண்டு மகள்கள்.  மூத்த மகளின் பெயர் ஸ்டெப் (Steph).  இளைய மகளின் பெயர் லிஸா (Lisa).  அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவளுடைய குடும்பம் அயர்லேண்டில் இருக்கிறது.  குடும்பத்தை கிட்டத்தட்ட ரெபேக்காவின் கணவன் மார்க்கஸ்தான் பார்த்துக் கொள்கிறான்.  பெரும்பாலான நாட்களில் ரெபேக்கா தன் வீட்டிலேயே இருப்பதில்லை.  புகைப்படங்கள் எடுப்பதற்காக ஏதாவதொரு நாட்டின் போர்க்களத்தில் அவள் ஆர்வத்துடன் கேமராவைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பாள்.

இப்படத்தின் ஆரம்ப காட்சி ஆஃப்கானிஸ்தானில் ஆரம்பிக்கிறது.  பர்தா அணிந்த பல பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.  ஒரு இளம் பெண்ணின் உடலில் வெடி பொருட்களை வைத்து சுற்றுகிறார்கள்.  அவள் ஒரு மனித வெடிகுண்டு என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.  ஏதோ ஒரு காரணத்திற்காக அவள் மனித வெடிகுண்டாக ஆக்கப்பட்டிருக்கிறாள்.  அவளுக்கும் குடும்பம், உறவினர்கள், ரத்த சொந்தங்கள் என்று இருக்கிறார்கள்.  எனினும், சந்தர்ப்ப சூழ்நிலை அவளை அப்படிப்பட்ட ஒரு பயங்கரச் செயலில் இறக்கி விட்டிருக்கிறது.  அவளை இறுக அணைத்து பிரியா விடை கொடுக்கின்றனர் அங்கிருக்கும் பெண்கள். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் ஒரு பெண் மிகவும் வேகமாக தன்னுடைய கேமராவில் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறாள்; அவள்தான் -- ரெபேக்கா.

அங்கு ஒரு வேன் நின்று கொண்டிருக்கிறது.  அதில் அந்த 'மனித வெடிகுண்டு' பெண்ணை ஏற்றுகிறார்கள்.  தானும் அந்த வேனில் சிறிது தூரம் வருவதாக கூறுகிறாள் ரெபேக்கா.  அவளையும் அதில் ஏற்றிக் கொள்கிறார்கள் வேன் புறப்படுகிறது.

நீண்ட தூரம் பயணித்த வேன் காபுலுக்குள் (Kabul) நுழைகிறது.  நகரத்தின் ஒரு இடத்தில் வேன் நிற்கிறது.  வேனிலிருந்து இறங்கிய ரெபேக்கா, வெளியே நின்றவாறு உள்ளே பர்தா அணிந்து அமர்ந்திருக்கும் இளம் பெண்ணை புகைப்படங்கள் எடுக்கிறாள்.  அப்போது 'மனித வெடிகுண்டு' வெடிக்கப் போகிறது என்பதை அவள் உணர்ந்து கொள்கிறாள்.  சாலையில் மக்கள் ஏராளமாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள், நகரமே மிகவும் பரபரப்பாக இருக்கிறது.  'எல்லோரும் தப்பித்துச் செல்லுங்கள்' என்று உரத்த குரலில் கத்துகிறாள், அதற்குள் மனித வெடிகுண்டு வெடித்து விடுகிறது.  இளம் பெண் அமர்ந்திருந்த கார் நெருப்பு பிடித்து எரிகிறது.  குண்டு வெடிப்பு காரணமாக மக்கள் செத்து விடுகிறார்கள்.  பலர் சிதறி, ஆங்காங்கே காயத்துடன் கிடக்கிறார்கள்.  பல இடங்களிலும் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.  ரெபேக்கா ஒரு இடத்தில் உடலில் காயங்கள் பட்டு, மயங்கி விழுந்து கிடக்கிறாள், அவளுக்கு அருகில் அவளுடைய உயிருக்கு உயிரான கேமரா.

காயம் பட்டு மருத்துவமனையில் இருக்கும் ரெபேக்கா கண்களைத் திறக்கிறாள்.  அவளுக்கு எதிரே அவளுடைய அன்பு கணவன் மார்க்கஸ், அப்போதுதான் தான் உயிருடன் இருக்கிறோம் என்ற உண்மையே ரெபேக்காவிற்குத் தெரிய வருகிறது.  தன் குழந்தைகள் எங்கே என்று அவள் தன் கணவனிடம் கேட்க, அவன் பதிலெதுவும் கூறாமல் அமைதியாக இருக்கிறான்.  அவளுடைய காயங்கள் சற்று குணமாக, அவளுடன் காரில் தன்னுடைய வீட்டிற்கு வருகிறான்  மார்க்கஸ்.  காரைப் பார்த்ததும், அவளுடைய இரு பெண் குழந்தைகளான ஸ்டெப்பும், லிஸாவும் ஓடி வருகிறார்கள்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு ரெபேக்கா தன் குழந்தைகளைப் பார்க்கிறாள்.  அதேபோல அந்த அன்புச் செல்வங்கள் பல நாட்களுக்குப் பிறகு தங்களுடைய அன்னையைப் பார்க்கிறார்கள்.  ரெபேக்கா தன் மகள்களைக் கொஞ்ச, அவர்கள் தங்களின் தாய் மீது பாசத்தைப் பொழிகிறார்கள்.

தபால்காரர் ரெபேக்காவிடம் இரு தோல் பைகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார்.  ஒரு பையில் அவளுடைய கிழிந்த, அழுக்குப் படிந்த, குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது அவள் அணிந்திருந்த ஆடைகள்... இன்னொரு பையில் புழுதி படிந்த அவளுடைய கேமரா.

வீட்டின் அறையில் அமர்ந்து தன் கேமராவில் பதிவான புகைப்படங்களைப் பார்க்கிறாள் ரெபேக்கா.  பர்தா அணிந்த ஆஃப்கானிஸ்தான் பெண்கள், மனித வெடிகுண்டாக மாறிக் கொண்டிருக்கும் இளம் பெண், அவளுக்கு பிரியா விடை கொடுக்கும் மற்ற பெண்கள், காருக்குள் அமர்ந்திருக்கும் 'மனித வெடி குண்டு' பெண், குண்டு வெடிக்கும் காட்சி, மக்கள் சாலையில் பயந்து, சிதறியோடும் காட்சி -- அவை அனைத்தும் அந்த கேமராவில் அடுத்தடுத்து வருவதை அவள் பார்க்கிறாள்.  அவளுடைய மனம் தான் பார்த்த காட்சிகளைத் திரும்பவும் அசை போடுகிறது.

மார்க்கஸ் அவள் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறான்.  'நீ புகைப்படம் எடுப்பதற்காக எங்கெங்கோ ஆபத்து நிறைந்த இடங்களுக்குச் சென்று விடுகிறாய்.  அந்த நேரத்தில் நானும், நம் இரு மகள்களும் மிகுந்த பதட்டத்தில் இருக்கிறோம்.  நீ உயிருடன் திரும்ப வருவாயா, மாட்டாயா என்ற சந்தேகத்துடன் எப்போதும் இருக்க வேண்டியதிருக்கிறது.  எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படிப்பட்ட மன கஷ்டத்துடன் இருப்பது?  அதனால்... இப்போது நான் தெளிவான குரலில் கூறுகிறேன், நான் உன்னுடன் வாழ விரும்பவில்லை. நீ எங்களுடன் வாழ வேண்டும் என்று நினைத்தால், நீ ஒரேயொரு முடிவைத்தான் எடுக்க வேண்டும்.  ஒன்று -- எங்களுடன் நீ இங்கேயே இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால், ஒரேயடியாக நீ எங்களை விட்டுப் பிரிந்து சென்று விடு.  உன்னை நாங்கள் நினைக்கவே மாட்டோம்.  என் மகள்களை நான் வளர்த்துக் கொள்கிறேன்' என்கிறான் அவன்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version