கங்கூபாய் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4612
உள்ளே போனால்- ஒரு இளம் பெண் அமர்ந்திருக்கிறாள். நவ நாகரீக ஆடை அணிந்திருந்த அவள், வேலைக்காரி தோற்றத்தில் இருக்கும் கங்கூபாயை வெறுப்புடன் பார்க்கிறாள், `யார் நீ? எதற்காக வந்திருக்கிறாய்? என்று கேட்கிறாள். `புடவை வாங்குவதற்காக வந்திருக்கிறேன் என்கிறாள் கங்கூபாய். `நீ தேடி வந்த முகவரி இது இல்லை என்கிறாள்' அந்தப் பெண். கங்கூபாயோ `நான் தேடி வந்த இடம் இதுதான். ஏழையாக இருப்பதால் என்னிடம் பணம் இல்லை என்று நினைத்தாயா? இதோ பார்.... புடவை வாங்குவதற்காக நான் உழைத்து சம்பாதித்துக் கொண்டு வந்திருக்கும் 50,000 ரூபாய்' என்று ஆவேசத்துடன் கூறியவாறு, கையிலிருந்த தோல் பையைக் கவிழ்க்கிறாள். அதிலிருந்து 100, 50, 10, 5 என்று ரூபாய்களும், நாணயங்களும் தரையில் விழுகின்றன. அதைப் பார்த்து என்னவோ போல ஆகி விடுகிறாள் அந்தப் பெண்.
அந்த விஷயம் கடையின் நிர்வாகியின் பார்வைக்குச் செல்கிறது. அவர் கங்கூபாயிடம் விசாரித்து என்ன விஷயம் என்பதைத் தெரிந்து கொள்கிறார். 'இப்போதைய `ஷோ' விற்கு ஏற்கெனவே ஆட்கள் `புக்' செய்து விட்டார்கள். அதனால் இந்த `ஷோ' வில் இடமில்லை. சாயங்கால ஷோவிற்குத்தான் இடம் ஒதுக்க முடியும்' என்கிறார்கள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. எனினும், சாயங்கால `ஷோ'விற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.
ஆரம்பத்தில் அவளிடம் பேசிய இளம் பெண் கங்கூபாய் அணிந்திருந்த பழைய செருப்புகளைக் கழற்றி, ஒரு ஓரத்தில் வைக்கச் சொல்கிறாள். அதற்குப் பதிலாக புதிய ஒரு ஜோடி செருப்புகளைக் கொண்டு வந்து தந்து, அவற்றை அணியும்படி கூறுகிறாள். என்ன நடக்கிறது என்றே தெரியாமல், கங்கூபாய் அந்தச் செருப்புகளை வாங்கி அணிந்து கொள்கிறாள்.
நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. சாயங்காலம் வருகிறது. கங்கூபாய் உள்ளே அழைக்கப்படுகிறாள். நடந்து சென்றால், உள்ளே ஒரு கூடம். அதில் சில நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஏற்கெனவே பெண்களும், ஆண்களும் அமர்ந்திருக்கின்றனர். ஒரு நாற்காலியில் கங்கூபாயை அமரச் சொல்கிறார்கள். அவளுக்கு அடுத்த நாற்காலியில் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு வசதி படைத்த மனிதரின் தோற்றத்திலிருக்கும் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஏழை வேலைக்காரி கங்கூபாயையே வியப்புடன் பார்க்கிறார். பணக்காரர்கள் வரக் கூடிய அந்த இடத்தில் ஒரு அன்றாடம் காய்ச்சியா என்று ஆச்சரியப்படுவதைப் போல அவருடைய பார்வை இருக்கிறது.
அப்போது வசதி படைத்த ஒரு பெண் அங்கு வருகிறாள். ஓரத்தில் போடப்பட்டிருக்கும் ஒரு நாற்காலியில் அவளை அமரச் சொல்கிறார்கள். அவளோ அங்கு அமராமல் கங்கூபாய் அமர்ந்திருக்கும் இடத்தில்தான் அமர்வேன் என்கிறாள். `இந்த பெண் கிராமப் பகுதியிலிருந்து வந்திருக்கும் ஏழை வேலைக்காரப் பெண் தானே!' என்கிறாள். ஆனால், அங்குள்ளவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 'இந்த இடத்தில் பணக்காரர், ஏழை பாகுபாடெல்லாம் கிடையாது. அந்தப் பெண்ணுக்கு இடம் ஒதுக்கப்பட்டு விட்டது. நீங்கள் இப்போது ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் போய் உட்காருங்கள்' என்கிறார்கள். வேறு வழியில்லாமல், அந்தப் பெண் வேண்டா வெறுப்புடன் அந்த இடத்தில் போய் அமர்கிறாள்.
இப்போது 'ஷோ' ஆரம்பிக்கிறது. எல்லோரும் அமைதியாக அமர்ந்திருக்கின்றனர். எல்லோருக்கும் முன்னாலும் இளம் பெண் ஒருத்தி ஒரு அழகான புடவையுடன் வந்து, ஒயிலாக நிற்கிறாள். எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர். அந்தப் பெண் போனவுடன், இன்னொரு பெண் வேறு வகையான புடவை அணிந்து வந்து நிற்கிறாள். அவள் போன பிறகு இன்னொரு பெண்... வேறொரு புடவை. எல்லோரையும் போல, கண்களை ஆர்வத்துடன் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள் கங்கூபாய்.
இறுதியாக ஒரு இளம் பெண் வருகிறாள். அவளைப் பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறாள் கங்கூபாய். காரணம்- கிராமத்து எஜமானியின் மகள் அணிந்திருந்த அந்த வகையான புடவையை அவள் அணிந்திருந்ததுதான். அந்தப் புடவையில் இருக்கும் பறவைகள் சிறகுகளை அடித்துக் கொண்டிருக்கின்றன. `நான் வாங்க விரும்பும் புடவை இதுதான்.... இதுதான்.... என்கிறாள் கங்கூபாய் சத்தமாக. அவளையே எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர்.
ஆனால் ஒரு பிரச்சினை எழுகிறது. அதே புடவையை அங்கு வந்திருந்த அந்த பணக்காரப் பெண்ணும் கேட்கிறாள். இருப்பதோ ஒரு புடவை! என்ன செய்வது? அந்த வசதி படைத்த பெண் அந்த நிறுவனத்தின் பல வருட வாடிக்கையாளர். எனினும், கங்கூபாய்க்கே அதைத் தருவது என்று அங்குள்ளவர்கள் முடிவு செய்கிறார்கள். காரணம் அவள் ரொக்கப் பணம் தந்திருக்கிறாள். அந்த வசதி படைத்த பெண் ஏற்கெனவே மிகப் பெரிய தொகையை பாக்கி வைத்திருக்கிறாள். அவருக்கு 'இல்லை' என்று கூறிவிட, கோபமாக அவள் வெளியேறுகிறாள்.
அப்போதுதான் நமக்கே ஒரு உண்மை தெரிய வருகிறது. அங்குள்ள வாடிக்கையாளர்கள் எல்லோருமே இலட்சக்கணக்கான ரூபாய்களை அந்த நிறுவனத்திற்கு பாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதும், கடனுக்குத்தான் புடவைகளை அவர்கள் வாங்கிச் செல்கிறார்கள் என்பதும்.
புடவை தனக்கு கிடைக்கப் போகிறது என்ற சந்தோஷத்துடன் போய் நிற்கிறாள் கங்கூபாய். அப்போது அவளுக்கு அதிர்ச்சி! இருக்கும் அந்த புடவையை தர மாட்டார்களாம் புதிதாக ஒரு புடவையை இனிமேல் உருவாக்கித் தருவார்களாம். அதற்கு ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்கள் வரை ஆகும் என்கிறார்கள். மனம் வாடிப் போய் நிற்கிறாள் கங்கூபாய். எனினும், புடவையுடன்தான் ஊருக்குச் செல்வது என்ற முடிவுடன் அவள் இருக்கிறாள். ஆனால், கையிலோ அதற்கு மேல் அவளிடம் பணமில்லை.
அவளின் நிலைமையைப் புரிந்து கொள்ளும் அந்த நிறுவனத்தின் நிர்வாகி, அங்கு பணி புரியும் இளைஞனான வாமனின் அறையில், புடவை கிடைக்கும் வரை தங்கியிருக்கும்படி கூறுகிறார். அதற்கு வாமனும் ஒத்துக் கொள்கிறான்.
அவனுடைய அறைக்கு கங்கூபாய் செல்கிறாள். ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் மாடியில் அந்த அறை இருக்கிறது. ஒரு திருமணமாகாத இளைஞனின் அறை எப்படி இருக்கும்? போட்ட பொருட்கள் போட்ட இடத்தில் கிடக்கின்றன. தாறுமாறாக இருக்கும் அந்த அறையைச் சுத்தம் பண்ணி ஒழுங்குபடுத்துகிறாள் கங்கூபாய். ஒவ்வொரு பொருளையும் சீராக எடுத்து வைக்கிறாள். கங்கூபாயின் கை பட்டதும் அந்த அறை அருமையாக மாறி விடுகிறது.ஹோட்டலிலிருந்து வாங்கி வந்து உணவுப் பொருட்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அவனுக்கு தன் கையால் உணவு தயாரித்து தருகிறாள் கங்கூபாய். தேநீரும்...