கங்கூபாய் - Page 4
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4611
வரும் வழியில் தான் வேலை செய்யும் ஒரு வீட்டிற்குச் செல்கிறாள் கங்கூபாய். அங்கு இருப்பவள் ஒரு மாடலிங் பெண். அவள் மிகுந்த கவலையில் இருக்கிறாள். திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அன்று மாலையில் தன்னைப் பார்ப்பதற்காக வர இருப்பதாகவும், அப்போது கட்டுவதற்கு நல்ல ஒரு புடவை இல்லை என்றும், எல்லா புடவைகளும் சலவைக்குப் போய் விட்டதாகவும் அவள் கூறுகிறாள். தான் வாங்கி வந்திருக்கும் புதிய புடவையை அந்த இளம் பெண்ணிடம் கொடுத்து, பயன்படுத்தி விட்டு மறுநாள் தரும்படி கூறுகிறாள் கங்கூபாய். அன்று இரவு நிம்மதியாக தன் வீட்டில் அவள் உறங்குகிறாள்.
மறுநாள் பொழுது புலருகிறது. வீட்டு வேலை செய்வதற்காக, நடிக்க ஆசைப்படும் பெண்ணின் வீட்டிற்கு அவள் செல்கிறாள். மதுவின் போதை இன்னும் கூட நீங்காமல் அந்த இளம் பெண் படுத்துக் கிடக்கிறாள். கங்கூபாயைப் பார்த்து கண் விழிக்கும் அவள், அவளுக்கு நன்றி கூறுகிறாள். 'நீ புடவை தந்த ராசிதான். அந்த புதிய படத்தின் கதாநாயகியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டேன்' என்கிறாள் அவள் மகிழ்ச்சியுடன். அப்போது திடுக்கிட்டு போய் கங்கூபாய் பார்க்கிறாள். அந்த இளம் பெண் அவிழ்த்துப்போட்ட கங்கூபாயின் புதிய புடவை முற்றிலும் நெருப்பில் எரிந்து சாம்பலாக குவிந்து கிடக்கிறது. அருகில் தரையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது. கங்கூபாய்க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீர் ! அந்த இளம் பெண் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறாள்.
நாட்கள் நகர்கின்றன. தினமும் காலையில் எழுவது... செடிகளுக்கு நீர் ஊற்றுவது... பறவைகளுக்கு இரை போடுவது... வேலைக்குச் செல்வது... தன்னுடைய சராசரி வாழ்க்கையை மீண்டும் தொடர்கிறாள் கங்கூபாய்.
ஒருநாள் கங்கூபாயைத் தேடி ஒரு சிறுவன் வருகிறான். மலையின் மேற்பகுதியில் புதிதாக வீடு கட்டியிருப்பவர்கள் அவளை வரச் சொன்னதாகக் கூறுகிறான். அவள் அங்கு செல்கிறாள்.
அங்கு இருந்தவர்கள் - வாமனும், மோனிஷாவும்! அவர்கள் புதிதாக வீடு கட்டி, அங்கு குடி வந்திருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் கங்கூபாய்க்கு மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி! 'இந்த வீட்டைச் சுத்தம் செய்வது என் வேலை' என்கிறாள் அவள். அப்போது ஒரு பெண் அவளைக் கடந்து துடைப்பத்துடன் செல்கிறாள். அவள்தான் வீட்டு வேலைக்காக வைக்கப்பட்டிருப்பவள். அப்படியென்றால், அவர்கள் கங்கூபாயை மறந்துவிட்டார்களா?
ஒவ்வொரு அறையாக கங்கூபாய்க்குச் சுற்றிக்காட்டும் வாமன், மாடியிலிருக்கும் ஒரு அழகான அறையின் கதவைத் திறந்து கூறுகிறான்: 'கங்கூபாய், இந்த அறை உன்னுடைய அறை. நீ இந்த அறையில்தான் இனிமேல் இருக்க வேண்டும். உன் வீட்டின் சாளரத்தைத் திறந்தால் கண்கொள்ளாக் காட்சிகள் தெரியும் என்று அடிக்கடி கூறுவாயே! அதோ... உன் அறையின் சாளரத்தைத் திறந்து பார் மலைகள், செடிகள், மரங்கள், வானம், நீர்நிலை அனைத்தும் தெரியும்! அதற்காகத்தான் இந்த அறை உனக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. காலம் முழுவதும், என்னுடனும், மோனிஷாவுடனும் ஒரு பெற்ற அன்னையைப் போல நீ இருக்க வேண்டும்!' என்று அவன் கூறுவதைக் கேட்டு, கங்கூபாயின் கண்களில் கண்ணீர் அரும்புகிறது, ஆனந்தக் கண்ணீர் !
இந்த படத்தில் கங்கூபாயாக வாழ்ந்திருப்பவர் - சரிதா ஜோஷி. ஏழை விதவைப் பெண் கங்கூபாய் கதாபாத்திரத்திற்கு இப்படி வேறு யாருமே உயிர் தந்திருக்க முடியாது.
மற்றவர்களுக்கு நல்லவை செய்தால், நம் வாழ்வு நிச்சயம் நல்லதாகவே அமையும் என்பதை கல்வெட்டு போல மனதில் பதிய வைக்கும் படமிது.