ஹவ் ஓல்ட் ஆர் யூ? - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4549
தன் வீட்டின் அருகில் இருக்கும் எல்லா வீட்டுக்காரர்களையும் பார்த்து பேசுகிறாள். அனைத்து வீடுகளின் மொட்டை மாடிகளையும் காய்கறி வளர்க்க தான் திட்டமிட்டிருப்பதாகவும், அதன் மூலம் எல்லோருக்கும் வருமானம் கிடைக்குமென்றும், அவர்கள் எதுவுமே செலவழிக்க தேவையில்லை என்றும், செலவு முழுவதையும் தான் பார்த்துக் கொள்வதாகவும், வெறுமனே இடத்தைக் கொடுத்தால் மட்டும் போதுமென்றும் நிருபமா கூறுகிறாள். அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.
அடுத்து அவள் வங்கியை அணுகுகிறாள். விவசாயம் செய்வதற்கு கடன் தரும்படி கேட்கிறாள். அதற்கு உறுதுணையாக இருக்கிறாள் அவளுடைய தோழி சூசன். 'லோன்'கிடைக்கிறது. பிறகென்ன?மொட்டை மாடிகளில் 'ஆர்கானிக்' முறையில் காய்கறிகள் வளர்க்கப் படுகின்றன. மாநில அரசாங்கத்தின் தலைமை பீடம் வரை இந்தச் செய்தி போய் சேர்கிறது. விவசாயம் சம்பந்தமாக அரசு நடத்தும் கருத்தரங்கமொன்றில், சூசனின் சிபாரிசில் இயற்கை விவசாயம் பற்றி உரையாற்றுவதற்கான வாய்ப்பு நிருபமாவிற்கு கிடைக்கிறது. அவளின் உரையைக் கேட்டு அமைச்சரும், அதிகாரிகளும் அசந்து போய், தங்களை மறந்து கைத் தட்டுகின்றனர். அந்த நிகழ்ச்சியின் நட்சத்திரமாக ஆகிறாள் நிருபமா. அதைத் தொடர்ந்து இயற்கை வேளாண்மை அமைப்பின் தலைவராக அவள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறாள். திறமைசாலியான தன் தோழிக்கு இப்போது கிடைத்திருக்கும் கவுரவத்தைப் பார்த்து மனதிற்குள் பூரிப்படைகிறாள் சூசன்.
தான் வாக்களித்தபடி 2000 பேர் திருமண விருந்தில் சாப்பிடுவதற்கு தேவைப்படும் காய்கறிகளை முழுமையாக சப்ளை செய்கிறாள் நிருபமா. அவளைப் பார்த்து கேரள மாநிலமே ஆச்சரியப்படுகிறது. ஒரு குடும்பப் பெண்ணிற்குள் இப்படியொரு புரட்சிகர சிந்தனையா என்று எல்லோரும் அவளைப் பற்றி வியப்புடன் பேசிக் கொள்கின்றனர். பத்திரிகைகள் அவளைப் பாராட்டி கட்டுரைகள் எழுதுகின்றன.
அவளைப் பற்றிய செய்தி இந்திய குடியரசுத் தலைவர் வரை போய் சேர்கிறது. அந்த புதுமைப் பெண்ணை தான் அளிக்கும் தனிப்பட்ட விருந்திற்கு அழைக்கிறார் குடியரசுத் தலைவர். இதற்கிடையில் நிருபமாவின் கணவனும், மகளும் அவளைப் பார்க்க வந்திருக்கின்றனர். தான் சாதாரணமாக நினைத்து பல நேரங்களில் மட்டம் தட்டிப் பேசிய தன் மனைவி இப்படியொரு திறமைசாலியா என்று அண்ணாந்து பார்க்கிறான் அவளுடைய கணவன்.
டில்லி குடியரசுத் தலைவரின் மாளிகை. அரண்மனை போன்ற அந்த வீட்டில் 'ஆர்கானிக் வேளாண்மை'யின் பெருமையைச் செயல் வடிவில் காட்டிய நிருபமாவிற்கு குடியரசுத் தலைவர் தனிப்பட்ட முறையில் விருந்தளிக்க, அதில் தன் கணவனுடனும், மகளுடனும் கலந்து கொள்கிறாள் நிருபமா. இரண்டு வருடங்களுக்கு முன்பு, தன்னைப் பார்த்து பயந்து போய் மயக்கமடைந்து கீழே விழுந்த அந்த பெண்ணா இவள் என்று ஆச்சரியத்துடனும், மதிப்புடனும் பார்க்கிறார் குடியரசுத் தலைவர். நிருபமா கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் எல்லா தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பப் படுகிறது. இந்தியாவின் பல கோடி மக்களும் தொலைக் காட்சிகளில் நிருபமாவை பெருமையுடனும், மரியாதையுடனும் பார்க்கின்றனர். குடியரசுத் தலைவரின் மாளிகையிலிருந்து அரசு அதிகாரிகளும், ராணுவ வீரர்களும் மரியாதையுடன் விடை கொடுக்க, அரசு வாகனத்தில் தன் கணவனுடனும், மகளுடனும் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் பயணிக்கிறாள் நிருபமா.
நிருபமாவாகவே வாழ்ந்திருக்கிறார் மஞ்சு வாரியர். நிருபமாவின் கணவனாக-குஞ்சாக்கோ போபன். நிருபமாவின் தோழி சூசனாக-கனிகா.
இசை: கோபி சுந்தர். டைட்டில் பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார்.
அருமையான ஒரு படத்தை இயக்கியதற்காகவும், பயனுள்ள ஒரு செய்தியை படத்தின் மூலம் கூறியதற்காகவும் இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸுக்கு பூச்செண்டும், பாராட்டும்.
இந்த நிருபமா கதாபாத்திரத்தில் தமிழில் நடிக்கப் போகிறவர்... ஜோதிகா.