ஆத்மகத - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6723
அந்த சந்தோஷம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்குமா? லில்லிக்குட்டிக்கு மருத்துவமனையில் போலியோ ஊசி போட்டு விட்டு, தேயிலைத் தோட்டத்திற்கு மத்தியில் இருக்கும் சாலையில் கொச்சுவும், மேரியும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். ஒரு இடத்தில் வரும்போது குழந்தை கொச்சுவின் மீது சிறுநீர் பெய்து விடுகிறது. அதை சிரித்துக் கொண்டே தன் மனைவியிடம் கூறும் கொச்சு, சாலையின் மறுபக்கத்தில் இருக்கும் குழாயில் நீர் மொண்டு கொண்டு வரும்படி கூறுகிறான். நீர் எடுப்பதற்காக மேரி சாலையைக் கடக்கும்போது, வளைவிலிருந்து திரும்பி வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு லாரி, அவள் மீது மோத, மேரி சாலையின் ஓரத்தில் வீசி எறியப்படுகிறாள். லாரி ஓட்டுனர் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, ஓடி விடுகிறான்.
அதற்குள் அங்கு கூட்டம் கூடி விடுகிறது. சாலையின் ஓரத்தில் வீசி எறியப்பட்ட மேரியின் உயிர் அந்த கணத்திலேயே பிரிந்து விடுகிறது. இறந்து பரிதாபமாக கிடக்கும் தன் அன்பு மனைவியின் உடலுக்கு அருகில் அமர்ந்து கொண்டு தாங்க முடியாமல் அழுகிறான் கொச்சு.
மனைவியே உலகம் என்று வாழ்ந்த கொச்சுவின் வாழ்க்கையில் மனைவி இல்லாமற் போக, மகளே உலகம் என்ற சூழ்நிலை உண்டாகிறது. தன் பாசத்திற்குரிய மகளை மிகவும் கவனம் செலுத்தி வளர்க்கிறான் கொச்சு, லில்லிக்குட்டிக்கும் தன் தந்தையின் மீது அளவற்ற அன்பு. தன் தாய் இறந்த பிறகு, தன்னுடைய தந்தை எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் தன்னை வளர்த்திருக்கிறான் என்பதை அவளும் உணர்ந்தே இருக்கிறாள்.
லில்லிக்குட்டி படிப்படியாக வளர்ந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியாக ஆகிறாள். தன் மகள் பள்ளிக் கூடத்திற்குச் செல்லும் அழகை, அன்புத் தந்தை கொச்சு மனதில் ஆனந்தம் குடி கொள்ள பார்த்துக் கொண்டிருக்கிறான்.
லில்லிக்குட்டியின் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனுக்கு அவளின் மீது ஒரு ஈர்ப்பு. அந்த அழகு தேவதையையே அவன் வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருப்பான்.
ஒரு நாள் வீட்டில் கொச்சு இல்லாமல், லில்லிக்குட்டி மட்டும் தனியாக இருக்கும் நேரம் பார்த்து, அந்த மாணவன் அங்கு வருகிறான். தன் உள்ளத்தில் இருக்கும் ஆசையை அவன் வெளியிடுகிறான். தன் மனதில் சிறிய அளவில் சலனம் உண்டானாலும், அதற்கு என்ன பதில் கூறுவது என்ற தடுமாற்றத்துடன் நின்று கொண்டிருக்கிறாள் லில்லிக்குட்டி. அப்போது அங்கு கொச்சு வந்து விடுகிறான். பையன் அங்கிருந்து மெதுவாக ஒரு ஓரத்தின் வழியாக நகர்கிறான். என்ன நடக்குமோ என்று பயந்தவாறு நடுங்கி நின்று கொண்டிருக்கிறாள் லில்லிக்குட்டி. ‘என்ன சத்தம்?’ என்று கொச்சு வினவ, ஏதோ காரணம் சொல்லி நிலைமையைச் சமாளிக்கிறாள் லில்லிக்குட்டி. அடுத்த நிமிடம்- மிகவும் அருகிலேயே மோட்டார் சைக்கிள் ‘ஸ்டார்ட்’ செய்யப்பட்டு, புறப்படும் சத்தம் கேட்கிறது. அப்போதுதான் கொச்சுவிற்கு சந்தேகமே வருகிறது. அந்த சந்தேக எண்ணத்துடன் அவன் தன் மகளின் முகம் பக்கம் திரும்புகிறான். அவனுடைய முகத்தில் இனம் புரியாத கவலையின் அடையாளங்கள் பரவுகின்றன.
லில்லிக்குட்டி 10வது வகுப்பு தேர்வு எழுதுவதற்காக சென்று, எழுதிக் கொண்டிருக்கிறாள். அப்போது அவளுடைய பார்வையில், எழுத்துக்கள் மங்கலாக தெரிகின்றன. பதறிப் போன லில்லிக்குட்டி, வீட்டிற்கு வந்து தன் தந்தையிடம் நடந்த சம்பவத்தைக் கூறுகிறாள். அவ்வளவுதான். ஆடிப் போகிறான் கொச்சு. மருத்துவமனைக்கு அவளை உடனடியாக அழைத்துச் செல்கிறான். அவளைப் பரிசோதித்த டாக்டர் அவளுக்கு குணப்படுத்த முடியாத நோய் வந்திருப்பதாகவும், அவளுடைய நரம்புகள் அந்த நோயால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகவும், வெகு சீக்கிரமே அவள் தன்னுடைய கண் பார்வையை இழந்து விடுவாள் என்றும் கூறுகிறார்.
அதைக் கேட்டு கொச்சு, லில்லிக்குட்டி இருவரும் தாங்க முடியாமல் அழுகின்றனர். தன் மகள் நல்ல கண் பார்வையுடன் இருக்கிறாள் என்ற ஒரே நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருந்த கொச்சுவின் இதயத்தில் ஒரு இடி விழுந்ததைப் போல இருக்கிறது.
மீதி தேர்வுகளை லில்லி எழுதவில்லை. கண் பார்வை முன்பு போல இல்லாமல், மங்கலாக ஆகி விட்ட பிறகு, அவள் எப்படி தேர்வு எழுத முடியும்? வெறுமனே வீட்டில் அமர்ந்து கொண்டு, தன் நிலைமையை நினைத்து அழுவதே அவளுடைய அன்றாடச் செயலாகி விட்டது. அவளுக்கு இந்த நிலைமை உண்டான பிறகு, அவளை வட்டமிட்டுக் கொண்டிருந்த அந்த மாணவன் கூட இந்தப் பக்கம் வருவதில்லை. ‘இதுதான் உலகம்!’ என்று மனதைத் தேற்றிக் கொள்கிறாள் லில்லிக்குட்டி.
தன் வீட்டிலிருந்து சற்று தூரத்திலிருக்கும் தன்னுடைய தோழியின் வீட்டிற்கு ஒருநாள் செல்கிறாள் லில்லிக்குட்டி. தன் வீட்டை விட்டு வெளியே அவள் சென்றதே அன்றுதான்.
ஒரு இரவு நேரம். மின்சாரம் திடீரென்று இல்லாமற் போனதால், வீடே இருட்டாக இருக்கிறது. தீப்பெட்டியை எடுத்து மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்கலாம் என்பதற்காக கொச்சு தீப்பெட்டியைத் தேடுகிறான். அப்போது ஒரு பெட்டிக்குப் பின்னால் கையில் ஏதோ சிக்குகிறது. என்னவென்று தடவிப் பார்த்தால், அது - செடிகளுக்கு அடிக்கப்படும் பூச்சி மருந்து. தன் தோழியைப் பார்க்கச் சென்ற லில்லிக்குட்டி, அவளின் தோட்டத்திலிருந்து அதை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து, அங்கு மறைத்து வைத்திருக்கிறாள். தன் அன்பு மகள் அந்த பூச்சி மருந்தைச் சாப்பிட்டு, உயிரை விட தீர்மானித்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்கிறான் கொச்சு. அடுத்த நிமிடம்- அந்த புட்டியை அவன் அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கிறான்.
அன்று முழுவதும் அவனுக்கு தூக்கமே வரவில்லை. தன் உயிருக்கு உயிராக இருந்த மனைவிதான் தன்னை விட்டு போய் விட்டாள், மகள் ஒருத்தி இருக்கிறாளே என்ற நிம்மதியுடன் வாழ்ந்தால், இப்போது அந்த சந்தோஷத்திற்கும் முற்றுப் புள்ளி உண்டாகும் நிலைமை வந்து விட்டதே என்பதை நினைத்து கண்களில் கண்ணீர் மல்க அவன் கவலையுடன் படுத்திருக்கிறான்.
மறுநாள் பொழுது புலர்கிறது. ஆரம்ப காலத்திலிருந்து தான் அனுபவித்த சிரமங்கள் அனைத்தையும் லில்லிக்குட்டியிடம் கூறுகிறான் கொச்சு. தானும் தன் மனைவி மேரியும் அவளை கஷ்டப்பட்டு வளர்த்தது, சிரமங்களுக்கு மத்தியிலும் அளவற்ற பாசத்தை அவள் மீது செலுத்தியது, எதிர்பாராமல் தன் மனைவி மரணத்தைச் சந்திக்க, தான் மட்டும் பலவித போராட்டங்களுக்கு மத்தியில் அவளை சிறு கஷ்டம் கூட தெரியாமல் வளர்த்தது, அவளே தன் உலகம் என்று வாழ்ந்தது- இப்படி ஒவ்வொன்றையும் அவன் கண்ணீர் மல்க கூற கூற, தன் தந்தையையே கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் லில்லிக்குட்டி.
‘நான் இனி இறக்கும் முடிவை எந்த காரணத்தைக் கொண்டும் எடுக்கவே மாட்டேன்’ என்று தன் தந்தைக்கு சத்தியம் பண்ணி கூறுகிறாள் லில்லிக்குட்டி. அப்போது அவள் தைரியம் கொண்ட ஒருத்தியாக மாறுகிறாள். தன் தந்தை இத்தனை வருடங்களாக கண் பார்வை இல்லாமல், சிரித்த முகத்துடன் சந்தோஷமாக வாழும்போது, தன்னால் வாழ முடியாதா என்று அவள் நினைக்கிறாள். எது நடந்தாலும், வாழ்க்கையை நேரடியாக சந்திப்பது என்ற முடிவுக்கு வருகிறாள். அதைத் தொடர்ந்து தன் கண்களை தானே மூடிக் கொண்டு, ஒவ்வொரு செயலையும் செய்ய பழகுகிறாள்.
மெழுகுவர்த்தி தொழிற்சாலைக்கு அவளை அழைத்துச் சென்று எப்படி மெழுகுவர்த்தி செய்வது என்பதை அவளுக்கு கொச்சு செய்து காட்டுகிறான். தன் தந்தை கற்றுத் தந்தபடி, அருமையாக மெழுகுவர்த்தி செய்கிறாள் லில்லிக்குட்டி.
படத்தின் இறுதி காட்சியில் லில்லிக்குட்டிக்கு கண் பார்வை முழுமையாக இல்லாமற் போகிறது. ஆனால், அவள் அதற்காக சிறிதும் அழவில்லை. மாறாக, வாய் விட்டு சிரிக்கிறாள். கண் பார்வை இல்லாமற் போனதற்காக, தனக்கு கவலையோ பயமோ எதுவுமே இல்லை என்கிறாள். தன் அன்பு மகள் அப்படி கூறுவதை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் அந்த அருமைத் தந்தை.
அவர்களுக்கு கண் பார்வை இல்லாமற் போகலாம். ஆனால், அவர்கள் உலகிற்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திகளை இனியும் உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தைப் பார்க்கும்போது, அந்தக் கள்ளங்கபடமற்ற உயர்ந்த உள்ளத்திற்குச் சொந்தக்காரனான கொச்சுவும், அவனின் இறந்த கண் பார்வையற்ற மனைவி மேரியும், அவர்களின் செல்ல மகள் லில்லிக்குட்டியும் கட்டாயம் ஞாபகத்தில் வரவேண்டும்... வருவார்கள்!
கொச்சுவாக படம் முழுக்க வாழ்ந்திருப்பவர் ஸ்ரீனிவாசன். இவரைத் தவிர, வேறு யாருமே இந்த கதாபாத்திற்கு இந்த அளவிற்கு உயிர் தந்திருக்க முடியாது. நூறு சதவிகிதம் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அருமையாக பொருந்தியிருக்கிறார் ஸ்ரீனி.
கொச்சுவின் அன்பு மனைவி மேரியாக- ஷர்பானி முகர்ஜி. இயல்பான நடிப்பு!
அவர்களின் செல்ல மகள் லில்லிக்குட்டியாக ஷாஃப்னா. என்ன அழகு முகம்! அந்த கபடமற்ற முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றுகிறது! மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
பாதிரியார் புன்னூஸாக- ஜகதி ஸ்ரீகுமார்.
ஒளிப்பதிவு : சமீர் ஹக்
படத் தொகுப்பு: மகேஷ் நாராயணன்
ஒரு தரமான, யதார்த்தமான கதையை எழுதி, அதை திறமையாக இயக்கியிருக்கும் பிரேம்லால் அவர்களே... உங்களின் முதுகைத் தட்டி பாராட்டுகிறேன், உங்களின் அருமையான முயற்சிக்காக! உங்களின் இத்தகைய நல்ல முயற்சிகள் இனியும் தொடரட்டும்...