ஆத்மகத
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6723
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஆத்மகத- Aathmakatha
(மலையாள திரைப்படம்)
2010ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். எல்லோரும் மரியாதையுடனும், மதிப்புடனும் மனதில் நினைக்கும் ஸ்ரீனிவாசன்தான் படத்தின் கதாநாயகன். கண் பார்வை தெரியாத பாத்திரத்தில் வருகிறார். படம் பார்ப்போர் அனைவரையும் கண் கலங்க வைக்கிறார்.
பிரேம்லால் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் இசையமைப்பாளர்:அல்ஃபோன்ஸ் ஜோசப். பின்னணி இசை: மோகன் சித்தாரா.
நல்ல ஒரு கதையை பலமாக எண்ணி எடுக்கப்பட்ட படம். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. படம் முடிந்து வெளியே வரும்போது, மிகச் சிறந்த ஒரு படத்தைப் பார்த்து விட்டு வருகிறோம் என்னும் உணர்வு அனைவரின் மனதிலும் உண்டாகும்.
அந்த அளவிற்கு அருமையான கதை... தெளிவான திரைக்கதை... பாராட்டக் கூடிய உரையாடல்கள்... மனதில் நிற்கக் கூடிய உயிர்ப்பான கதாபாத்திரங்கள்.
இவை அனைத்தும் இருக்கும் ஒரு படம் நல்ல படமாகத்தானே இருக்கும்?
அந்த நல்ல படத்தின் கதைதான் என்ன?
கொச்சு- கண் பார்வை தெரியாத இளைஞன். தனக்கு சொந்தமென்று கூற உலகத்தில் யாருமே இல்லாதவன். ஆரம்பத்தில் கண் பார்வையுடன் பிறந்தவன்தான். நல்ல பார்வையுடன், மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடியவன்தான். துள்ளி குதித்து திரிந்தவன்தான்.
இடையில் திடீரென்று அவனுக்கு கண் பார்வை தெரியாமல் போய் விடுகிறது. அதற்கான காரணம் என்ன என்று அவனுக்கே தெரியவில்லை.
அவன் ஒரு சிறிய கிராமத்திலிருக்கும் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான். அவனுக்கு கண் பார்வை தெரியவில்லையே தவிர, மற்றவர்களுக்கு நிகராக அவனாலும் திறமையாக வேலை செய்ய முடியும். மெழுகுவர்த்தி செய்வதோடு அவன் நின்று கொள்வதில்லை. மேடுகளிலும், பள்ளங்களிலும், தேயிலைத் தோட்டத்திற்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் ஒற்றையடிப் பாதைகளிலும் நடந்து சென்று, அவற்றை தேவைப்படுபவர்களுக்கு அவன் கொடுத்து விட்டுச் செல்வான்.
அந்த கிராமத்தில் எங்கெங்கு என்னென்ன இருக்கிறது என்று அவனுக்கு நன்றாக தெரியும். முன்னால் மூன்றடிகள் நடந்தால் என்ன இருக்கிறது, பின்னால் இரண்டடிகள் நடந்தால் என்ன இருக்கிறது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். பின்னால் மூன்றடிகள் நடந்தால், கீழே பாய் விரிக்கப்பட்டிருக்கும், அந்த இடத்தில் நின்று மேலே கையை நீட்டினால், உறி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும் என்ற விஷயங்களெல்லாம் அவனுக்கு அத்துப்படி.
தேவாலயத்திற்கு படிகளில் ஏறிச் செல்லும் கொச்சு, கையிலிருக்கும் கழியைக் கொண்டே, எந்த படி சேதமாகியிருக்கிறது என்பதை கண்டு பிடித்து விடுவான். பாதிரியாரிடன் ‘16வது படி உடைந்திருக்கிறது. அதைச் சரி செய்ய வேண்டாமா?’ என்பான் சிரித்துக் கொண்டே. கொச்சுவின் மீது நிறைய அன்பு வைத்திருப்பவர் அந்த கிராமத்து தேவாலயத்தின் பாதிரியாரான புன்னூஸ். கொச்சுவின் ஆற்றலைப் பார்த்து அவர் மிகவும் ஆச்சரியப்படுவார்.
இதற்கிடையில் அந்த மெழுகுவர்த்திகள் செய்யப்படும் தொழிற்சாலைக்கு புதிதாக வேலைக்கு வருகிறாள் ஒரு இளம் பெண். அவளின் பெயர் மேரி. அவளை அங்கு வேலைக்கு அனுப்பி வைத்ததே பாதிரியார் புன்னூஸ்தான். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்- அவளும் கண் பார்வை இல்லாதவள்.
எங்கிருந்தோ சொந்தமென்று யாருமே இல்லாத அனாதைப் பெண்ணாக வந்த மேரியின் மீது அன்பு வைக்கிறான் கொச்சு. அவளின் மீது அவனுக்கு காதல் உண்டாகிறது. தனக்கென்று யாருமே இல்லாமலிருந்த தான் காதலிக்க ஒரு உயிர் இருக்கிறதே என்ற ஆனந்தம் அவனுடைய மனதில் உண்டாகிறது. மேரியைப் பார்க்கும்போதும், அவளுடைய குரலைக் கேட்கும்போதும் தன்னையே மறக்கிறான் வான். இதற்கு முன்பு அனுபவித்திராத ஒரு புதிய சுகமான உணர்வு அவனுடைய மனதிற்குள் உண்டாகிறது.
கொச்சு, மேரியின் மீது வைத்திருக்கும் காதலை உடன் பணியாற்றுபவர்கள் உணர்கிறார்கள். மேரிக்கும் கொச்சுவின் மீது அதே போன்ற காதல் இருப்பதும் அவர்களுக்குத் தெரிய வருகிறது. பிறகென்ன? எல்லோரும் சேர்ந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். அந்த ஊரின் தேவாலயத்தில், கொச்சு மீது உண்மையான பாசம் வைத்திருக்கும் பாதிரியார் புன்னூஸின் முன்னிலையில் அந்தத் திருமணம் நடைபெறுகிறது.
அந்த கண்பார்வை தெரியாத இரு உள்ளங்களும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், சந்தோஷத்தின் அடையாளமாகவும், நிம்மதி தரும் நிழலாகவும் இருக்கின்றனர். உலகில் சொந்தமென யாருமே இல்லாமலிருந்த கொச்சுவிற்கு சொந்தமென்று கூற மேரி இருக்கிறாள். தன்னை அனாதை என்று நினைத்து நித்தமும் அழுது கொண்டிருந்த மேரிக்கு ‘சொந்தமென்று கூறிக் கொள்வதற்கு ‘நான் இருக்கிறேன்’ என்று கூறி வாழ்க்கையில் அவளுடன் சேர்ந்து பயணிக்கிறான் கொச்சு. அந்த இனிய தம்பதிகள் வாழ்க்கையில் இதுவரை பார்த்திராத, உணர்ந்திராத சந்தோஷத்தையும், குதூகலத்தையும், உற்சாகத்தையும் முதல் முறையாக உணர்கின்றனர்.
இரவு நேரத்தில் தங்களுடைய வீட்டிற்கு முன்னாலிருக்கும் செடிகளுக்கு அருகில் நிலவு வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பற்றியும் சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் பார்வை சக்தி இல்லை என்ற ஒரு குறையைத் தவிர, வேறு எந்த குறைபாடும் அவர்களுக்கு இல்லை. அது கூட, அவர்களைப் பார்ப்பவர்களுக்குத்தான். அவர்களுக்கு அந்த குறைபாடு கூட மனதில் இல்லை. கண் பார்வை இல்லாமலே தினமும் சந்தோஷமாக வாழத்தான் அவர்கள் நன்கு பழகிக் கொண்டு விட்டார்களே!
மாதங்கள் ஓடுகின்றன. பகல் நேரத்தில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில், மாலை வேளைகளில் வீட்டிற்கு முன்னால் அமர்ந்து கொண்டு சுவாரசியமான உரையாடல் என்று அந்த இரு அன்பு இதயங்களின் வாழ்க்கை குதூகலமாக நடந்து கொண்டிருக்கிறது. மேரி கர்ப்பமாகிறாள்.
குறிப்பிட்ட காலத்தில் அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை. லில்லி மலரைப் போன்ற அழகான தோற்றத்துடன் பிறந்த அக்குழந்தைக்கு லில்லிக்குட்டி என்று பெயரிடுகிறான் கொச்சு. குழந்தை பிறந்தவுடன் அவனுக்கு ஒரே பதற்றம். எங்கே தங்கள் இருவரையும் போல அந்தக் குழந்தையும் கண் பார்வை இல்லாமல் பிறந்து விட்டதோ என்ற பயம்தான். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. நல்ல பார்வையுடன்தான் குழந்தை பிறந்திருக்கிறது. அது தெரிந்ததும், கொச்சுவிற்கும் மேரிக்கும் உண்டாகும் சந்தோஷம் இருக்கிறதே! அப்பப்பா... அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அந்த இனிய தம்பதிகள் தங்களுக்குப் பிறந்த அந்த அழகுச் சிலையை மிகுந்த பாசத்துடன் வளர்க்கின்றனர். வெறுமனே இருக்கும் நேரங்களில் இருவரும் தங்களின் மடிகளில் குழந்தை லில்லிக்குட்டியை வைத்துக் கொண்டு உலகையே மறக்கின்றனர்.